

தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், உறவினர்களின் சந்திப்பு, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் எனப் பல்வேறு அம்சங்கள் தோன்றுகின்றன. வீடுகள் தோறும் வண்ண விளக்குகள் ஒளிர்கின்றன. குழந்தைகளின் சிரிப்பொலி தெருக்களை நிறைக்கிறது. வணிக நிறுவனங்கள் விழாக்கோலம் பூண்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கின்றன.
இந்த ஆண்டும் தீபாவளி பலருக்குப் புத்தாடைகளோடும் பட்டாசுகளோடும் இனிப்புகளோடும் மகிழ்ச்சியாகக் கடந்து சென்றிருக்கலாம்.
ஆனால், இந்தக் கொண்டாட்டங்களின் மறுபக்கத்தில் ஒரு கூட்டம் அமைதியாகத் தனது வலிகளைச் சுமந்து கொண்டு வாழ்கிறது. அவர்கள்தான் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள், ஆதரவற்றவர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்கள்.
தீபாவளி சிலருக்கு மகிழ்ச்சியின் திருவிழா; இன்னும் சிலருக்கோ தங்களின் இயலாமையை நினைவுபடுத்தும் நாளாகவே கடந்து செல்கிறது.
பண்டிகையிலும் தொடரும் வறுமையின் வலி!
தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பல வீடுகளில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கி விடுகின்றன. ஆனால், வறுமையில் வாழும் குடும்பங்களுக்குத் தீபாவளி வருவது மகிழ்ச்சியைக் காட்டிலும் கூடுதல் பொருளாதாரச் சுமையையே ஏற்படுத்துகிறது. அன்றாடம் உழைத்தால்தான் அன்றைய உணவைப் பெறமுடியும் என்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு, புத்தாடை வாங்குவதும், இனிப்புகள் செய்வதும், பட்டாசுகள் வாங்குவதும் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.
ஒரு தந்தை தனது குழந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார். புத்தாடை வேண்டும் என்று கேட்கும் குழந்தையிடம், 'அடுத்த வருடம் வாங்கித் தருகிறேன்' என்று கூறும்போது அந்தத் தந்தையின் மனதில் ஏற்படும் வலியை எந்த அளவுகோலாலும் அளவிட முடியாது.
பட்டாசுச் சத்தம் கேட்டு மகிழ்ச்சியடையும் குழந்தைகளுக்கு மத்தியில், அடுத்த வேளை உணவுக்காகக் காத்திருக்கும் குழந்தைகளும் இருக்கின்றனர். மற்றவர்களின் வீடுகளில் இனிப்புகள் பகிரப்படும்போது, தங்களுடைய வீட்டில் ஒரு வேளை உணவாவது கிடைக்குமா என்று எதிர்பார்க்கும் குடும்பங்களும் இருக்கின்றன.
இத்தகைய சூழலில் தீபாவளி என்பது அவர்களுக்குக் கொண்டாட்டமாக இல்லாமல், தங்களின் வறுமையை மீண்டும் ஒருமுறை உணர்த்தும் நாளாக மாறிவிடுகிறது.
ஒளிரும் விளக்குகளுக்கு நடுவே அணையாத கண்ணீர்!
தீபாவளி நாளில் நகரத்தின் முக்கிய வீதிகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. பெரிய வணிக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து ஆடைகளும் பொருள்களும் வாங்கப்படுகின்றன. ஆனால், அதே நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் சாலையோரத்தில் வாழும் குடும்பம், மழையிலிருந்து தப்பிக்கக்கூட சரியான கூரை இல்லாமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறது.
நாம் பயன்படுத்திவிட்டு ஒதுக்கும் பழைய ஆடைகளைக் கூட ஏக்கத்தோடு எதிர்பார்க்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். நாம் உணவகங்களில் மீதம் வைக்கும் உணவைக்கூடத் தங்களின் பசியைப் போக்குவதற்கான வாய்ப்பாகப் பார்க்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
முதியோர் இல்லங்களில் தங்களின் பிள்ளைகளின் வருகைக்காகக் காத்திருக்கும் பெற்றோர்களும், ஆதரவற்றோர் இல்லங்களில் உறவுகளின் அரவணைப்பைத்தேடும் குழந்தைகளும், மாற்றுத் திறனாளிகளாக வாழ்ந்து பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மனிதர்களும் தீபாவளியை எவ்வாறு எதிர்கொண்டிருப்பார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள் தேவையில்லை. அன்பான சில வார்த்தைகள், அக்கறையோடு விசாரிக்கும் ஒரு மனிதர், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் ஓர் உறவு ஆகியவையே மிகப்பெரிய பரிசுகளாக அமையும்.
கொண்டாட்டத்தின் உண்மையான பொருள் என்ன?
தீபாவளி என்பது இருளை அகற்றி ஒளியை ஏற்றும் திருநாள் என்று கூறுகிறோம். ஆனால், நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கையில் நிலவும் வறுமை, பசி, புறக்கணிப்பு, தனிமை ஆகிய இருளை அகற்ற நாம் என்ன செய்திருக்கிறோம்?
நம்முடைய வீட்டில் நூற்றுக்கணக்கான விளக்குகளை ஏற்றுவதற்கு முன்பு, அருகில் பசியோடு இருக்கும் ஒரு குடும்பத்தின் அடுப்பில் நெருப்பு எரியச் செய்திருக்கிறோமா? ஆயிரக்கணக்கில் பட்டாசுகளுக்குச் செலவு செய்வதற்கு முன்பு, ஒரு ஏழைக் குழந்தைக்குப் புத்தாடை வாங்கிக் கொடுத்திருக்கிறோமா? நம்முடைய மகிழ்ச்சிக்காகப் பல்வேறு உணவுகளைத் தயாரிப்பதற்கு முன்பு, உணவின்றித் தவிக்கும் ஒருவரின் பசியைப் போக்கியிருக்கிறோமா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களில்தான் தீபாவளியின் உண்மையான அர்த்தம் அடங்கியிருக்கிறது.
ஒரு குடும்பம் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால், அந்த மகிழ்ச்சியின் ஒரு சிறு பகுதியையாவது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போதுதான் அந்தக் கொண்டாட்டம் மனிதநேயத்தின் அடையாளமாக மாறுகிறது.
உதவிகள் ஒருநாள் நிகழ்வாக இல்லாமல் தொடரட்டும்!
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு ஆடைகள், உணவுகள், இனிப்புகள் வழங்குவது பாராட்டுக்குரிய செயலாகும். ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து பட்டாசுகள் வெடிப்பதும், முதியோர்களுக்கு உணவளிப்பதும், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதும் மனிதநேயத்தின் வெளிப்பாடுகளாகும்.
ஆனால், இத்தகைய உதவிகள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களோடு மட்டும் முடிந்துவிடக் கூடாது.
ஒரு குழந்தையின் கல்விக்கான செலவை ஏற்றுக் கொள்வது, ஒரு குடும்பத்திற்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, முதியவர்களுக்குத் தொடர்ந்து உணவு வழங்குவது, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது போன்ற செயல்கள் அவர்களின் வாழ்க்கையில் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
உதவி செய்வது என்பது நம்மிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுப்பது மட்டுமல்ல; பிறருடைய வாழ்க்கையில் நம்பிக்கையை உருவாக்குவதுமாகும்.
மேலும், உதவி பெறுபவர்களின் சுயமரியாதையைப் பாதுகாப்பதும் மிகவும் அவசியம். புகைப் படங்களுக்காகவும், விளம்பரத்திற்காகவும் அவர்களின் வறுமையை வெளிப்படுத்தாமல், அவர்களின் தன்மானத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் உதவிகளைச் செய்ய வேண்டும். ஏனெனில், உதவியின் உயரம் அதன் மதிப்பில் இல்லை; அது வெளிப்படுத்தும் மனிதநேயத்தில்தான் இருக்கிறது.
இறுதியாக...
இந்த ஆண்டு தீபாவளி பலருக்குப் புத்தாடைகளோடும் பட்டாசுகளோடும் இனிப்புகளோடும் மகிழ்ச்சியாகக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், சிலருக்குப் பழைய ஆடைகளோடும், குறைந்த உணவோடும், நிறைவேறாத ஆசைகளோடும், சொல்ல முடியாத ஏக்கங்களோடும் கடந்து சென்றிருக்கலாம்.
நாம் கொண்டாடிய தீபாவளியின் மகிழ்ச்சி, மற்றொருவரின் வாழ்க்கையிலும் சிறிதளவாவது ஒளியை ஏற்படுத்தியதா என்பதுதான் சிந்திக்க வேண்டிய முக்கியமான கேள்வி.
நம்முடைய வீட்டில் ஏற்றும் ஒரு விளக்கு நமக்கு வெளிச்சம் தரலாம்; ஆனால், மற்றொருவரின் வாழ்க்கையில் ஏற்றும் நம்பிக்கை விளக்குத்தான் இந்தச் சமூகத்திற்கு வெளிச்சம் தரும்.
வறுமையில் இருப்பவர்களின் முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்த முடியாத தீபாவளி, அதன் முழுமையான மகிழ்ச்சியை அடைந்துவிட்டதாகக் கூற முடியாது.
பட்டாசுகளின் சத்தம் அடங்கிவிடும்; அலங்கார விளக்குகள் அணைந்துவிடும்; புத்தாடைகளின் புதுமையும் மறைந்துவிடும். ஆனால், நாம் ஒருவருக்குச் செய்த உதவியும், அவருடைய மனதில் உருவாக்கிய நம்பிக்கையும் என்றும் நிலைத்திருக்கும்.
எனவே, தீபாவளி என்பது நாம் மட்டும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் திருநாளாக இல்லாமல், நம்மைச் சுற்றியுள்ள ஏழை, எளிய மக்களும் மகிழ்ச்சியோடு வாழ வழிவகுக்கும் மனிதநேயத் திருநாளாக மாறவேண்டும்.