

அன்றைய கிராமத்துப் பாட்டிகள் முதல் சௌகார் ஜானகி, பரவை முனியம்மா வரை தமிழ்ப் பெண்களின் அழகு ரகசியமாகத் திகழ்ந்தவை பாரம்பரியக் கொண்டைகளும் 'முடி மயிர்' எனப்படும் ஒட்டுமுடிகளும்தான்! பொய் முடியின் சுவாரஸ்யமான வரலாறு, உழைக்கும் பெண்களின் அடையாளமான கோடாலிக் கொண்டை மற்றும் கிராமிய மங்கைகளின் மறக்கப்பட்ட அழகுச் சடங்குகளைப் பற்றிப் படிக்க சுவாரஸ்யமான பயணம் இதோ!
அந்தக்கால கிராமப்புறங்களில் தலைமுடி குறைவான பெண்கள் அல்லது வயதான பெண்கள் ஒட்டுமுடி வைத்துக்கொள்வார்கள். கூந்தலுக்குள் இந்த ஒட்டுமுடியை சொருகி சடை பின்னிக்கொள்வதும் கொண்டை போட்டுக்கொள்வதும் சகஜம். இந்தப் பொய் முடிக்கு வட்டார வழக்குச் சொல்லாடலில் "முடி மயிர்" என்றொரு பெயர் உண்டு.
எனக்குத் தெரிந்து எங்க பாட்டிகூட இந்த முடி மயிர் வாங்கி கொண்டை போட்டுக்கொள்வார்கள். திருப்பதிக்கு போனால் மறக்காமல் லட்டு வாங்கி வருவது போல முடி மயிர் வாங்கி வருவதும் வழக்கம். திருப்பதியில் ஒரு பிளாஸ்டிக் கவருக்குள் இந்தப் பொய் முடியை வைத்து விற்கும்போது சில ஏமாற்றுப் பேர்வழிகள் துண்டு முடிகளை பொதிந்து வைத்து விற்று விடுவதுண்டு 'பொய் முடியிலும் பொய் முடி.'
'கோடி ஒரு வெள்ளைக்கு கொமரி ஒரு பிள்ளைக்கு' என்ற சொலவடைக்கு ஏற்ப குழந்தைகள் பெறும் வரைதான் பெரும்பாலான பெண்கள் சீவி சிங்காரித்து ஜடை பின்னி, ரிப்பன் வைத்து கட்டி பூவைத்து சிங்காரித்து சிலுப்பிக்கொண்டு திரிவார்கள். அப்புறம் நாளாக நாளாக அந்தப் பொன்முடியே பாரமாகி ஜடை கொண்டை ஆகிவிடும். சிலருக்கு கொண்டையும் அழகாக இருக்கும். சவுகார் ஜானகி, காஞ்சனா வாணிஶ்ரீ, பாரதி, ஜெயந்தி, ரமா பிரபா போன்ற நடிகைகள் ஆளுயர கொண்டைகள் போட்டு (டோப்பா) அந்தக்கால ரசிகர்களைக் கிறங்கடிப்பார்கள்.
கோயில் திருவிழாக்களில் அம்மன் அருள் வந்து அக்கினிச் சட்டி ஏந்தி தலைவிரி கோலமாக சாமி ஆடும் பெண்களின் விரி சடை கோலமும் அழகுதான்.
பேய் பிடித்ததும் கோடாங்கி உடுக்கடிக்கு கண்ணு முழி பிதுங்க கூந்தலை விரித்துப்போட்டு ஆடி மிரட்டும் பயங்கர கூந்தலும் இன்னும் அழகாக இருக்கும்.
வயதான பிறகும்கூட நல்ல அடர்த்தியான முடிவளம் கொண்ட பெண்கள் விதவிதமாக கொண்டை போட்டுக்கொள்வார்கள். கிராமத்துப் பெண்களின் பாரம்பரிய கொண்டை வகைகள் எளிமையானவை மற்றும் வேலை செய்ய வசதியானவை. உச்சிக் கொண்டை, பக்கக் கொண்டை, மற்றும் பின்னல் கொண்டை, கோடாலிக் கொண்டை ஆகியவைகள் பரவலானது.
பாரம்பரிய கொண்டை வகைகள்
உச்சிக் கொண்டை (நடு கொண்டை):
தலையின் உச்சிப் பகுதியில் முடியைச் சுருட்டி இறுக்கமாக முடிவது. வேலைக்குச் செல்லும்போதும், வெயில் காலத்தில் வியர்க்காமல் இருக்கவும் கிராமத்துப் பெண்களால் அதிகம் போடப்படுவது.
பக்கக் கொண்டை /சாயுக்கொண்டை:
தலையின் ஒரு பக்கமாகச் சாய்த்துப் போடப்படும் எளிமையான கொண்டை. இது பாக்கெட் கொண்டை என்றும் அழைக்கப்படும்.
பின்னல் கொண்டை:
முடியைப் பின்னி, அந்தப்பின்னலை அப்படியே சுருட்டிக் கொண்டையாக மாற்றுவது. இது நீண்ட கூந்தல் உள்ள பெண்களுக்கு மிகவும் உறுதியாக இருக்கும்.
பின் கொண்டை:
முடியை அப்படியே சுருட்டி உருட்டி முடிச்சுப் போட்டு சொருகிக்கொள்வது.
பூச்சூடிய கொண்டை:
திருவிழாக்கள் மற்றும் விசேஷ காலங்களில், கொண்டையைச் சுற்றி மல்லிகை அல்லது வாசனைப் பூக்களை வைத்து அழகுபடுத்துவது.
கோடாலிக்கொண்டை:
பெரும்பாலான உழைக்கும் பெண்கள் லகுவாக விரும்பிப் போடுவதும் இதுதான் "கோடாலிக்கொண்டையும் கண்டாங்கிச்சேலையும் கட்டி பொன்னாத்தா சந்தைக்கு வருவா பாரு" என்று முதல் மரியாதையில் ஓடத்தில் அமர்ந்தபடி சத்தியராஜ், ராதாவிடம் பழைய கதை சொல்லி துடுப்படி வாங்குவாரே..
அந்தக் கோடாலிக் கொண்டையின் அழகு உண்மையில் நேரில் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.
பிற்கால சினிமாப்பாட்டிகள் தேனி குஞ்சராம்மாள், பரவை முனியம்மா போன்ற பாட்டி நடிகைகளின் அழகே அந்த கோடாலிக்கொண்டைகள்தான்.
தீண்டாமை தீவிரமாக இருந்த காலத்தில் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் தலையில் பூச்சூட அனுமதி மறுக்கப்பட்டு தாலியில் பூச்சூடி மாராப்புக்குள் மறைத்து வாழ்ந்த வரலாறும் நாம் அறிந்ததே.
கிராமிய அழகு முறைகள் மற்றும் மறக்கப்பட்ட நமது பாரம்பரிய கொண்டை கலாச்சாரத்தின் வேர்களை அறிந்துகொள்வதன் மூலம், தமிழர்களின் தற்கால ஃபேஷன் மற்றும் கலாச்சார வரலாற்றின் மீது ஒரு புதிய தெளிவையும் ரசனையையும் பெறலாம்.