தலைப்பிரசவமா? இதெல்லாம் தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க!

Childbirth
Childbirth
Published on

நம்மூரில் மூடிமறைத்தே வைத்திருக்கும் விஷயங்களில் ஒன்று பிரசவம். அதைப் பற்றிய அறிவினை கருவுற்றிருக்கும் பெண்களுக்கு அவ்வளவாக யாரும் சொல்வதில்லை. இரு கர்பிணிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் கூட இங்கே உண்டல்லவா. “வலி வரும். பிள்ள பிறந்துரும்” இதைத் தாண்டி பிரசவத்தைப் பற்றி முதல்முறை தாயாகப்போகும் பெண்களுக்கு என்ன சொல்லித்தருகிறார்கள்?  

சில வெளிநாடுகளில் முதல்முறையாக பிரசவத்தை எதிர்கொள்ளப்போகும் பெண்களுக்கு வகுப்புகளே நடத்துகிறார்கள். வெளிநாடுகளில் பெரும்பாலும் தனிக்குடித்தனங்கள் என்பதால் பிரசவம் மகப்பேறு பற்றிச் சொல்லித்தர அனுபவமிக்க மூத்த பெண்கள் உடன் இல்லை; அதனால் இத்தகைய பிரசவ வகுப்புகள் அங்கே தேவை என்று நாம் நினைத்துக்கொண்டாலும், நம் சமூக அமைப்பில் மட்டும் பிரசவம் பற்றிய அறிவியலை மூத்த பெண்கள் சொல்லிக்கொடுத்துவிடுகிறார்களா என்ன? 

ஒவ்வொரு பெண்ணும் தனித்துவமானவள். ஒவ்வொரு பெண்ணுக்கும் கருவுறுதல் தொடங்கி வயிற்றின் அளவு, மசக்கை, மாதமாத வளர்ச்சி இப்படி ஒவ்வொன்றும் வேறுபடலாம். நமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்வது சுலபம் தான். ஆனால் இயற்கையான வேறுபாடுகளால் அந்தப் பெண்ணுக்கு நம் அனுபவங்கள் பொருந்திப்போகவில்லையானால் அது தேவையற்ற மனக்குழப்பங்களைத் தந்துவிடலாம் அல்லவா! அதனால்தான் பிரசவம் பற்றி இங்கே யாரும் எதுவும் விளக்குவதில்லை என்று காரணம் சொல்கிறார்கள். இது உண்மையாகக் கூட இருக்கலாம்.‌

ஆனாலும் பிரசவம்‌ பற்றிய மிகவும் அடிப்படையான அறிவியல் புதிதாக அம்மாவாகப்போகும் பெண்ணுக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அனுமானங்கள் தான் குழப்பம் தரும். அறிவியலில் குழப்பங்களுக்கு இடமில்ல என்பதால் தலைப் பிரசவத்தை நெருங்கும் கர்பிணிகளுக்கு இக்கட்டுரை உதவும்.

  • உங்கள் கருவறையின் சுவற்றொடு ஒட்டிய படி இருக்கும் பனிக்குடத்தில் தான் உங்கள் குழந்தை ஜாலியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்த பனிக்குடத்தில் நிரம்பியுள்ள நீரின் அளவு ஆரோக்கியமான பிரசவத்துக்கு மிகவும் முக்கியம். நிறைய தண்ணீர் குடியுங்கள்.

  • உங்களுக்குக் கடைசியாக மாதவிடாய் வந்த நாளின் அடிப்படையில் தான் பிரசவத்துக்கான due date கணித்துக் கொடுப்பார்கள். இது tentative தான். முன்னப்பின்ன ஆகலாம்.

  • மூன்றாம் trimester எனப்படும் 7, 8, 9‌ஆம் மாதங்களில் தனியாக இருப்பதைத் தவிர்க்கவும். ஒரு வேளை தனியாக இருக்கும் போது வலி வந்தால் பயப்படாமல் கையாளும் மனதைரியத்தை வளர்த்துவைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்படி படுக்க வேண்டும்?
Childbirth
  • எல்லா வலியும் பிரசவ வலி இல்லை. லேபர் வலி என்பது கர்ப்பப்பையில் வரும் வலி. மாதவிடாய் நேரத்தில் வலிக்குமல்லவா. அதைப்போல் ஒரு பத்து மடங்கு அதிகமாய் வலிக்கும். அது தான் உச்சகட்ட பிரசவ வலி. அது சினிமாக்களில் காட்டுவது போல் சட்டென்று வந்துவிடாது. குழந்தை மெல்ல மெல்ல கீழே இறங்குவதை அறிவிக்கும் ஆரம்ப கட்ட வலிகள் வரும். இதை நன்றாய்ப் பிரித்தறிய உங்களால் முடியும். சிலருக்குப் பனிக்குடத்தின் வெளிப்புற‌ நீர் கசிய ஆரம்பிக்கலாம். சிலருக்குப் பனிக்குடம் உடைந்து நீர் மொத்தமும் வெளியேறலாம். இந்த ஆரம்ப கட்ட வலி வரத் துவங்கிவிட்டதும் அதன் இடைவெளியினைக் கவனிக்க ஆரம்பியுங்கள். இந்நேரத்துக்குள் நீங்கள் மருத்துவமனையில் இருப்பீர்கள். 10 நிமிட இடைவெளிக்குள் ஆறேழு முறை வலி வந்தால் லேபர் வார்டுக்குக் அனுப்பிவிடுவார்கள். 

  • வலி வீரியமாகத்தான் இருக்கும். மனதினைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இத்தனை மாதங்களாய்க் காத்திருக்கும் உங்கள் குழந்தையைப் பார்க்கப் போகிறீர்கள் அல்லவா. அந்த ஒற்றை ஆசை, வலிகளைப் புறந்தள்ளும் வலிமையை உங்களுக்கு அள்ளித் தரும். கத்தாதீர்கள். உங்களின் ஆற்றல் அனைத்தும் கத்துவதால் விரையமாகிவிடும்.

  • பிரசவம் என்பது கோடி கோடி ஆண்டுகளாய் நடந்துவரும் அறிவியல் நிகழ்வு தான். இது ‌ஒரு process. அதை நம்புங்கள். இதில் உங்களின் வேலை என்ன தெரியுமா? லேபர் வார்டுக்குப் போனதும் உங்களைச் சரியான‌ நேரம் பார்த்து பிரசவ டேபுளுக்கு மாற்றுவார்கள். அலை போன்ற வலி வரும். அப்போது நீங்கள் செய்யவேண்டியது, அந்த வலியோடு சேர்ந்து நன்றாக முக்க வேண்டும். இந்நேரத்துக்கு உங்கள் கர்ப்பப்பையின் வாய் 10 செ.மீ விட்டத்துக்கு விரிந்து கொடுத்திருக்கும். வலியோடு சேர்ந்து பலமாக‌ முக்கி மூன்று நான்கு முக்கல்களிலேயே குழந்தையை வெளியே தள்ளிவிடுங்கள்.

இதையும் படியுங்கள்:
கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு..!
Childbirth
  • பிரசவத்தில் நீங்கள் மட்டும் தான் கஷ்டப்படுவதாய் நினைக்காதீர்கள். உங்கள் குழந்தையும் தான் வேலை செய்கிறது. பனிக்குடத்தை உடைத்து கிழித்துக்கொண்டு மெல்லமெல்ல ஊர்ந்து ரத்தவாடை சகித்து வெளிவரும் பணியை அந்த சிசுவும் தான் செய்கிறது. அதற்கு அம்மாவாக நீங்கள் உதவ வேண்டாமா? கத்தி அழுது எனர்ஜியை வீணடிக்காமல் முக்கி குழந்தைக்கு உதவுங்கள்.

  • மருத்துவர்கள், சுகப்பிரசவத்தின் போது குழந்தையின் தலை பிறப்புறுப்பு வாய்ப்பகுதியில் தெரியும் வரை உங்கள் மேல் கையே வைக்க மாட்டார்கள். நீங்கள் தான் செய்ய வேண்டும். குழந்தை தலை ஓரளவு வெளி வந்த பிறகு முழுதாய் மெல்ல வெளியே இழுத்து எடுப்பார்கள். குழந்தை வீறிட்டு அழும். ஆணா பெண்ணா என்று பார்த்துச் சொல்லச் சொல்வார்கள்‌. நீங்கள் சொன்னதும் நஞ்சுக்கொடி அறுத்துவிட்டுக் குழந்தையைச் சுத்தம் செய்ய எடுத்துப் போய்விடுவார்கள். அதன் பிறகு ஒரு அரை மணி நேர வேலை உண்டு மருத்துவர்களுக்கு. பனிக்குடத்தை வெளியில் எடுப்பார்கள். முழுதாய் வந்துவிட்டதா என்று உறுதிப்படுத்திவிட்டு உங்கள் பிறப்புறுப்பில் தையல் போடுவார்கள். லேபர் அறையிலிருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள். சிறிது நேரத்தில் குழந்தை உங்கள் கைகளில் வந்துவிடும். உடனே தாய்ப்பாலூட்டத் துவங்க வேண்டும். குழந்தையை எப்படித் தூக்க வேண்டும், எப்படி மடியில் வைத்துக்கொள்ள வேண்டும், எப்படி தாய்ப்பாலூட்ட வேண்டும், என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • சிறுநீர் கழித்த பிறகு உங்கள் அறைக்குத் தாயும் சேயுமாக வந்துவிடலாம். அதுமுதல் அம்மாவாக உங்களின் சுவாரஸ்யமான பயணம் துவங்குகிறது.

இதையும் படியுங்கள்:
கர்ப்பிணிப் பெண்கள் இரவில் நன்றாகத் தூங்குவதற்கான வழிகள்!
Childbirth

தலைப்பிரசவம் முழுக்க முழுக்க ஒரு இயற்கை அறிவியல். உளவியலுக்கு இதில் பெரும் பங்கு உண்டு. இது பயப்பட வேண்டிய ஒன்றல்ல. கொண்டாட வேண்டிய ஒன்று.  இயல்பாய் நேர்மறையாய் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.  மருத்துவர்களுக்கு ஒத்துழையுங்கள்.

சுகப்பிரசவம் ஆன பிறகு மீண்டும் கர்ப்பப்பை சுருங்கி இயல்பு நிலைக்கு வந்துவிடும். தாய்மையை ரசித்துக் குழந்தையைக் கொஞ்சி தாய்மையுணர்வு தரும் மகிழ்வுகளை அனுபவியுங்கள். இக்கட்டுரையை உங்களுக்குத் தெரிந்த 'தலைப்பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்'களுக்கும் பகிருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com