

வாழ்க்கையில் பிரச்னைகள் வருவதும் போவதும் சகஜம். யாருக்காவது சிக்கல்களே இல்லை, துன்பமே இல்லை என்று சொல்ல முடியுமா? மனக்கஷ்டம், பணக்கஷ்டம், உடல் உபாதை என ஏதாவது ஒரு பிரச்னை தலைதூக்கி நம்மை அலைக்கழிக்கும். அதற்காக எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டேயிருந்தால் சிக்கல்கள் தீர்ந்துவிடுமா?
எப்போதும் சலித்துக்கொண்டே இருந்தால் பிரச்சனைகள் பாரமாக மாறி நம்மை அழுத்துமே தவிர, குறையாது. அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்யவோ, சிந்திக்கவோ தோன்றாது. நம்மிடம் பேசுபவர்களிடம் நாம் சலிப்புடன் நம் கஷ்டங்களைப் பகிர்வதால் மட்டும் சிக்கல்கள் தீர்ந்துவிடுமா? சரி, இதற்கு என்னதான் தீர்வு? எப்படி மகிழ்ச்சியாக நம்மை நாமே மாற்றிக் கொள்வது?
யாராவது நம்மை விசாரித்தால் சலிப்புடன்,
“ஏதோ இருக்கேன்”
“வாழ்க்கையே போராட்டமா இருக்கு”
“எதுக்கு வாழறோம்னு தெரியல”
“நேரமே சரியில்ல”
“ஏதோ வண்டி ஓடுது”
“என்ன... வாழ்க்கை... வெறுப்பா இருக்கு”
“ஒண்ணும் சொல்லிக்கற மாதிரி இல்ல”
"அதை ஏன்பா கேக்கறே”
“எப்பவும் பிரச்சனையாவே இருந்தா எப்படி சந்தோஷமா இருக்கறது?”
இப்படி நம் மனக் கசப்பை வேறு வேறு வார்த்தைகளில் மற்றவர்களிடம் வெளிப்படுத்தி ஆறுதல் தேடுவோம். அப்படிச் சொல்வதால் கஷ்டம் குறைந்துவிடுமா என்றால், கண்டிப்பாக இல்லை என்பதுதான் பதில்.
மாறாக, நம்மை விசாரிப்பவர்களிடம் “நான் நல்லாயிருக்கேன்” என்று சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே புத்துணர்ச்சி கிடைத்ததுபோல் இருக்கும். நம்முடன் உரையாடுபவர்களுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்ளும். நம் மனமும் லேசாகி கவலைகளை மறக்கும்.
மற்றவர்கள் விசாரிக்கும்போது மட்டும் இப்படிச் சொல்லிக்கொண்டு, மற்ற நேரங்களில் நம்மை நாமே குறையாக நினைத்துக் கொண்டிருந்தால் மகிழ்ச்சியாக வாழ முடியாது. நமக்கு நாமே இந்த வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக்கொள்ள வேண்டும்.
தினமும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது நமக்கு நாமே இப்படி நேர்மறையாகச் சொல்லிக் கொள்ளலாம்.
"நான் நல்லா இருக்கேன்."
"எனக்கு சீக்கிரம் குணமாயிரும்"
"என் பிரச்னைகள் விலகி நல்லகாலம் பிறக்கும்."
"என் மனம் சந்தோஷமா இருக்கு."
"எனக்கு எந்தக் கவலையும் இல்ல."
இப்படியான நேர்மறை வாக்கியங்களை நமக்குள்ளே தினமும் சொல்வதால், நாம் சலிப்படையாமல் உற்சாகமாக, நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ளலாம். மனம் கவலையில்லாமல் இருந்தால், உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் நன்றாக சுரந்து, மன அழுத்தத்தைக் குறைக்கும். மன அழுத்தம் இல்லையென்றால் பாதி சிக்கல்கள் குறைந்துவிடும்.
நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் நிரம்பியிருந்தால், அந்த எண்ண அலைகள் நம்மைச் சுற்றி நல்ல, ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அந்த நேர்மறை எண்ணங்கள் மன இறுக்கத்தைக் குறைக்கும். இதனால் நம் நட்பு மற்றும் உறவுகளிடம் இணக்கமான உறவுமுறை பலப்படும்.
‘நல்லாயிருக்கேன்’ என்று நேர்மறையாக நாம் சொல்லிகொள்ளும் போது, பிரச்னைகளை எதிர்கொள்ளும் மன தைரியம் நமக்கு வந்துவிடும். கடினமான சூழல்களைக் கையாளும் பக்குவமும், வழிமுறைகளும் புலப்படும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக யோசிக்க முடியும்.
‘நான் நல்லாயிருக்கேன்’ என்று நாம் சொல்லும்போது, நம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நம் ஆழ்மனதில் ஒட்டிக்கொண்டு பயமுறுத்தும் கடந்தகாலத் தோல்விகள், எதிர்கால பயங்கள் எல்லாம் மறைந்து, நம்மைப் பற்றி நமக்கே தெளிவான அபிப்பிராயம் கிடைக்கும். சுயமரியாதை அதிகரிக்கும். நமக்கு தன்னம்பிக்கையும் சுய மரியாதையும் இருக்குமானால் யாராலும் நம்மை அசைக்க முடியாது.
சாதாரண ஒற்றை வார்த்தைதான்; ஆனால் அது செய்யும் மாயாஜாலம் அதிகம். அதை நம் அனுபவத்தாலேயே உணர முடியும். இதற்காக எந்த மெனக்கெடலும் இல்லை. எந்த சிறப்புப் பயிற்சியும் தேவையில்லை. எத்தனை பெரிய துன்பம் வந்தாலும், மனம் கலங்காமல், ‘எல்லாம் சரியாயிரும்’, ‘நான் நல்லாயிருக்கேன்’, ‘இதுவும் கடந்து போகும்’, ‘எனக்கு நம்பிக்கையிருக்கு’, இப்படியான நேர்மறை வாக்கியங்களைச் சொல்லிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களிடம் வருத்தப்பட்டு புலம்பினாலும், இந்த ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லலாம்.
மற்ற எல்லா நம்பிக்கை வார்த்தைகளுக்கும் அடிப்படை ‘நான் நல்லாயிருக்கேன்’ என்பதுதான். இதைமட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இனிமேல் மன அழுத்தம் இருக்கவே இருக்காது.
நான் நல்லாயிருக்கேன். நீங்க...?