

அபார்ட்மெண்ட் என்றாலும் சரி.. தனி வீடானாலும் சரி.. முன்வாசல் கதவில் கலர், கலராக பிளக்ஸ் போர்டிலும், தகர போர்டிலும் 'தயவுசெய்து கதவை மூடவும்'ன்னும், 'Please close the door' என்று ஆங்கிலத்திலும் எழுதி, வெளிப் பக்கமும், உள் பக்கமும், நுழையும் போதே விண்ணப்பம் வைத்திருப்பதை பல இடங்களில் பார்த்திருப்போம்.
பரபரப்பான அவசர உலகில், தினசரி கதவை திறந்து உள்ளே வரும் வாய்ப்பு, அநேகமாக ஆன்லைனில் ஆர்டர் பண்ணிய பொருட்களை டெலிவரி செய்யும் பாய்ஸுக்குத் தான்... அவர்கள் அபார்மெண்ட்டின் கேட்டிற்கு வெளியே நின்று, மொபைலில் அழைத்தாலும், கஸ்டமர், எத்தனாவது மாடி, என்றும் மற்றும் வீட்டு நம்பரையும் சொல்லி, தங்கள் வீட்டு வாசலுக்கே வரச் சொல்லுவார்கள். பொறுப்புடன் நேரில் சென்று, பொருளைக் கொடுத்த பாய்ஸ் வெளியேறும் போது மட்டும், போர்டை உள்ளேயும் வெளியேயும் பார்த்தாலும் பொறுப்பின்றி கதவை மூடாமல் சென்று விடுவர்.
அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் கூரியர் பாய்ஸ், கேஸ் சிலிண்டர் கொண்டு வருபவர்கள், அயர்ன் செய்பவர்கள் மற்றும் போஸ்ட் மேன். பொருட்களை பெற்றுக் கொண்டதும், போகும் போது கதவை மூடிவிட்டுப் போங்கன்னு சொன்னால், பலனளிக்க வாய்ப்பு உண்டு. சரின்னு சொல்லி விட்டு கதவை மூடாமல் செல்லும் பொறுப்பு சிகாமணிகளும் அநேகம் உண்டு.
நிறைய இல்லங்களில் பணிப்பெண்களும் கதவை மூடாமல் சென்று, குடியிருப்போரின் டென்ஷனை கூட்டி விடுவார்கள் அடிக்கடி..
யாரோ ஒருவர் கேட்டை அடைக்காமல் செல்ல, பாவம் ஓரிடம்..பழி ஓரிடம் என்பதற்கேற்ப தப்பு பண்ணாத ஆத்மாக்களையும் சந்தேக லிஸ்ட்டில் சேர்க்கும், பல சுவாரஸ்யமான விஷயங்களும் நடக்கும் அவ்வப்போது..
இப்படித்தான், ஒருமுறை மாடியிலுள்ள இல்லத்தரசி, கீழே தரையில் வெயில்படும் இடத்தில் கோதுமையை காய வைத்துள்ளார்கள். சில மணி நேரங்கழித்து, கீழே வந்தால், கோதுமையைக் காணோம்.
டென்ஷனான மேடம், பஞ்சாயத்தைக் கூட்டி விட்டார்கள். எல்லோரும் 'நானில்லை' என வாக்குமூலம் தர, ஒரு சகோதரர், "அப்போ..யார் வீட்டு பணிப்பெண்ணோ எடுத்துச் சென்றிருக்கலாம்" எனக் கூறி துப்பறியும் சங்கர்லால் அவதாரமெடுத்தார்.
அவர் கூறியதும், அபார்ட்மெண்ட் அம்மணிகளின் கண்களில், பயம் தெறித்தது. குற்றவாளியாகவே இல்லாவிட்டாலும், சந்தேகப்படுவது தெரிந்தால் வேலைக்காரி வேலையை விட்டு நின்று விடுவாளே.. மற்றொரு பணிப்பெண் கிடைக்கும் வரை சமாளிக்க வேண்டுமே.. இந்த எண்ணம் தான் வெவ்வேறு டிசைன்களில் அவர்கள் மனசுக்குள் புயலைக் கிளப்பி விட்டது..
இதற்கிடையே, ஒரு புத்திசாலி பெரியவர், "சிசிடிவி கேமராவில் செக் பண்ணுங்க..." ஐடியா கொடுக்கவும், அடுத்த நிமிடம் எல்லோரும் F5 வீட்டு ஹாலில் ஆஜர். காலை பத்து மணிக்கு காய வைத்ததாக ஒரு கிலோ கோதுமையை பறிகொடுத்த அம்மணி சொல்ல, பத்து மணியிலிருந்து வீடியோ நோக்கப்பட்டது. பன்னிரண்டு மணி வரை கோதுமை இருந்த இடத்திலேயே இருந்தது. இடையே, சிஸ்டத்தின் ஸ்கிரீனில் பலர் வெளியே போகவும், உள்ளே வருவதுமாக இருந்தார்கள்.
உற்றுப் பார்ப்பதில் டயர்டான ஒருவர் "மேடம்..டீ கிடைக்குமா?" அப்ளிகேஷன் போட, F5 இல்லத்தரசி வேறு வழியின்றி மாலை உபயோகிக்க வச்சிருந்த பாலில் டீ போட ஆரம்பித்தார். சுகர் வேண்டாமென சிலரும், HaIf சுகர் எனப் பலரும் விண்ணப்பித்தார்கள். மேடமும், விதியேன்னு டீ சப்ளை செய்தார்கள். பருகிக் கொண்டிருக்கும் போது, திருடியது யார்?.. காரணம் யார்? எனத் தெரிந்து விட்டது.
இதோ.. என ஒரு அம்மணி துள்ளலுடன் ஸ்கிரினை நோக்கி விரலை நீட்ட, பக்கத்திலிருந்தவரின் டீ கப்பில் பட்டு அந்த கப் டீ கொட்டி, தரை+ வேஷ்டியில் டீ அபிஷேகம். டீ கொடுத்த அம்மணி மனசுக்குள் கோதுமைத் திருடனைத் திட்டியவாறே தரையை சுத்தம் செய்தார்.
இறுதியாக, கோதுமையை கபளீகரம் செய்தது யார் எனக் கண்டுபிடிச்சாச்சு..வேறு யாருமல்ல.."கோமாதா" தான்..
உள்ளே வரக் காரணமானவர் யார்ன்னு தெரியணும், ரீ வைண்ட் பண்ணுங்கன்னு சொல்லி, செகரட்டரி தன் தலையில், கோதுமையை...ஸாரி...மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார்.
பின்னே, செகரட்டரி வீட்டுப் பணிப்பெண் வேலை முடித்துச் செல்லும்போது போனில் பேசிக்கொண்டே கேட்டைத் திறந்தவள் மூடாமலே சென்று விட்டாள். அந்த சமயம், வீதியில் உலா வந்து கொண்டிருந்த பசுமாடு கோதுமையைப் பார்த்ததும், நாவில் நீர் ஊற, தானியம் முழுவதையும், ஸ்வாகா செய்து விட்டது. விளைவு கோதுமையை பறி கொடுத்த அம்மணியும், திருமதி செகரட்டரியும் ஆறு மாதங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார்கள்.
தனி வீட்டின் கதை தனிக்கதை தான். மதியம், பால்க்கார தம்பி, பணம் வாங்கிச் செல்லும்போது, கதவை அடைக்காமல் செல்ல, வாசல் வழியாக வீட்டினுள் நுழைந்த பைரவர் ஹாலில், பிரவேசித்து பெட்ரூம் சென்று கட்டிலின் அடியில் அடைக்கலமாகும் வரை, ஹாலில் டி.வியில் ஆழ்ந்திருந்த குடும்பத்தினர் கவனிக்கவில்லை.
மாலையில், ஸ்கூலிலிருந்து வந்த காவ்யஸ்ரீ கீழே விழுந்த பென்சிலை எடுக்க குனிந்தவள், "மம்மி..டாக்.." கத்தவும், எல்லோரும் வந்து நாயை விரட்டினர். அக்கம்பக்கம் யாருக்குமே தெரியாது இப்ப வரை என்னைத் தவிர..
சரி... இந்தக் கதையெல்லாம் இப்போ தேவையா, என்ன தான் சொல்ல வர்றீங்க? உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது. இதோ சொல்றேன். பொறுப்பு என்பது எல்லா சூழலிலும் எல்லோருக்கும் இருக்கணும். உறவினர் வீடோ, நண்பர்கள் இல்லமோ, எங்கு சென்றாலும் கதவை மூடி விட்டுச் செல்ல வேண்டும். திறந்து தானே இருந்தது. நான் ஏன் மூடவேண்டும் என்ற அசட்டை வேண்டாமே..
போர்டு இல்லா விட்டாலும் கதவை மூடி விட்டு செல்பவர்கள் உயர்ந்தோர். நான் வரும் போதே திறந்துதானே இருந்தது. யாரோ திறந்த கதவை நான் ஏன் மூடவேண்டும் என்ற ஈகோவை விலக்குங்கள். கதவை திறந்து விடுவதும் , மூடுவதும் செக்யூரிட்டியின் பணி என்பவர்களும் உண்டு. அவரும் சில தருணங்கள் வேறு வேலையாகப் போயிருக்கலாம் அல்லவா..யார் வீட்டிற்கு சென்றாலும் டென்ஷன் குறைக்க திறக்கும் கதவை மறக்காமல் மூடவும்.
பின் குறிப்பு:- எதிர்வீட்டிற்கு விருந்தினர் வந்த போது, கடைசியாக நுழைந்த பாட்டியிடம், ஆறு வயது பேத்தி, "அப்பத்தா கேட்டை மூடிட்டு வா"ன்னு சொன்னதைக் கேட்டதும், எழுதத் தோணியது.