

கர்நாடகத்தின் பாரம்பரிய உணவான பிசி பேளே பாத் (Bisi Bele Bath), மைசூர் அரச சமையலிலிருந்து பொதுமக்கள் வரை பரவிய வரலாற்றை இந்த கட்டுரை விளக்குகிறது. அரிசி, துவரம் பருப்பு, பல்வேறு காய்கறிகள், புளி, மசாலா, நெய் தாளிப்பு ஆகியவற்றால் தயாராகும் இந்த உணவு, சுவை, மணம், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகவும் கூறப்படுகிறது.
முன்னுரை:
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமான உணவுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் அருகில் அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தின் மிகவும் புகழ்பெற்ற பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக பிசி பேளே பாத் (Bisi Bele Bath) தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. இது சுவை, மணம், ஊட்டச்சத்து ஆகிய அனைத்தையும் கொண்ட ஒரு சிறந்த உணவாகும். கன்னட மொழியில் 'பிசி' என்பது சூடான, 'பேளே' என்பது பருப்பு, 'பாத்' என்பது சாதம் என்று பொருள். எனவே, 'பிசி பேளே பாத்' என்றால் 'சூடான பருப்பு சாதம்' என்று பெயர் பெற்றது.
இப்பொழுது பிசி பேளே பாத்தின் வரலாற்றினையும், செய்முறையினையும் இக்கட்டுரையில் காண்போம்.
வரலாறு:
பிசி பேளே பாத் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கர்நாடகத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மைசூர் அரச குடும்ப சமையலில் இது முக்கிய உணவாக இருந்ததாகவும், பின்னர் இது பொதுமக்களிடையே பரவி கர்நாடகத்தின் அடையாள உணவாக மாறியது.
இன்றைய காலத்தில் கர்நாடகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சிறிய சுவை வேறுபாடுகளுடன் இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் அதன் அடிப்படைச் செய்முறை மற்றும் சுவை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தேவையான பொருட்கள்: (தேவைக்கு ஏற்ப)
அரிசி, துவரம் பருப்பு, கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், புளி, மஞ்சள் தூள், உப்பு, பிசி பேளே பாத் மசாலா, நெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், முந்திரிப்பருப்பு.
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்புடன் தக்காளி என தனித்தனியாக நன்றாக வேகவைக்க வேண்டும். பின்னர் கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, குடைமிளகாய் போன்ற காய்கறிகளை மென்மையாக வேகவைக்க வேண்டும்.
அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் புளி கரைசலைக் கொதிக்க வைத்து அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் பிசி பேளே பாத் மசாலாவைச் சேர்க்க வேண்டும். பின்னர் வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்து சில நிமிடங்கள் சமைக்க வேண்டும்.
அதன்பின் வேகவைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் சமைக்க வேண்டும்.
இறுதியாக ஒரு வாணலியில் நெய் ஊற்றி கடுகு, முந்திரிப்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்து உணவில் சேர்க்க வேண்டும். இதனால் உணவின் மணமும் சுவையும் மேலும் அதிகரிக்கும்.
இந்த உணவின் சிறப்புகள்:
1. சுவையானது, மணமிக்கது.
2. அரிசி உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது.
3. துவரம் பருப்பு புரதச்சத்தை வழங்குகிறது.
4. காய்கறிகள் வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்களை வழங்குகின்றன.
5. நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
6. நெய் உணவின் சுவையை அதிகரிப்பதோடு தேவையான நல்ல கொழுப்பையும் வழங்குகிறது.
7. ஒரே உணவில் பல்வேறு சத்துக்கள் கிடைப்பதால் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும்.
கர்நாடக கலாச்சாரத்தில் பிசி பேளே பாத் (Bisi Bele Bath):
கர்நாடக மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் சுவைக்கும் உணவுகளில் இதுவும் ஒன்றாகும். பல உணவுத் திருவிழாக்களிலும், பாரம்பரிய சமையல் நிகழ்ச்சிகளிலும் இதற்கு சிறப்பு இடம் வழங்கப்படுகிறது.
பிசி பேளே பாத் கர்நாடக மக்களின் பாரம்பரிய உணவாக மட்டுமல்லாமல், அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக திருமணம், குடும்ப விழா, பண்டிகை, விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் இது முக்கியமாக பரிமாறப்படுகிறது.
முடிவுரை:
பிசி பேளே பாத் (Bisi Bele Bath) என்பது கர்நாடக மாநிலத்தின் பாரம்பரியத்தையும், சுவையையும், ஆரோக்கியத்தையும் ஒருங்கிணைக்கும் சிறந்த உணவாகும். அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் நறுமண மசாலாக்களின் கலவையால் தயாரிக்கப்படும் இந்த உணவு சுவை மிகுந்ததோடு ஊட்டச்சத்தும் நிறைந்ததாகும்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் உலகின் பல பகுதிகளிலும் இன்று பிசி பேளே பாத் விரும்பி உண்ணப்படுகிறது. பாரம்பரியத்தையும் ஆரோக்கியத்தையும் இணைக்கும் இந்த உணவு, இந்திய உணவுக் கலாச்சாரத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு அரிய உணவாகும்.
கர்நாடகாவின் பாரம்பரியமிக்க சுவையை உங்களது சொந்த சமையலறையில் எளிதாகக் கொண்டுவந்து, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இந்த அசத்தலான உணவை உங்கள் குடும்பத்தினருக்குப் பரிமாறி அனைவரின் பாராட்டுகளையும் பெறலாம்.