

உடலும் மனமும் வெவ்வேறா? அல்லது இரண்டும் ஒன்றா? பள்ளிக்கூடத்துப் பயங்கள், கல்லூரி காதல் அனுபவங்கள் மற்றும் முதுமையின் முதிர்ச்சி என வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் என்னென்ன? மோட்டார் சைக்கிளை பழுதுபார்ப்பது போல, நம் வாழ்வையும் மனதையும் எப்படி எளிமையாகச் சரிசெய்து ஞானத்தை அடையலாம்? ஜென் மற்றும் பௌத்த தத்துவங்கள் உணர்த்தும் இந்த வாழ்வியலின் ரகசியங்களை வாசித்துப் புரிந்து கொள்ளத் தொடருங்கள்!
பிறப்பில் இல்லை நம் உயர்வும், தாழ்வும்; வளர்ப்பில் இல்லை நம் பண்பும், நலனும்; மாறாக இருப்பில் இருக்கிறது நம் வாழ்வின் இயல்பும், இயற்கையும்.
அதுதான் முழுமையான அறிவு; அதை அறிவதே ஞானம்!
எனக்கு ஒன்றாம் வகுப்பில் சேரும்போது பயம் இருந்தது. பள்ளிக்கூடம், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் என...
பிறகு பயம் நீங்கி விளையாட்டில் கவனம் செலுத்திய உடன் படிப்பும் ஒன்றுகூடி வந்தது.
ஒன்றாக கூடி விளையாடுவது என்பது ஒரு கலை. அதில் அப்போது ஏமாற்றமோ? எதிர்பார்ப்போ? இல்லை.
மாறாக ஆர்வம் வளர்ந்தது; உயர் கல்வி என வந்ததும் மாணவர்கள் பிரிக்கப்பட்டனர். அப்போது தான் தெரிந்தது நாம் ஒரு இனம் என்று. இந்த பிரிவினை ஒழுக்கம் சார்ந்ததாக கூறப்பட்டது.
பார்ப்பது குற்றம்! பேசுவது குற்றம்! என தொடர்ந்து. அதுவே திரும்ப பயமாக ஒட்டிக்கொண்டது.
இப்படியாக கல்லூரிக்கு பயணம். அங்கே ஆசிரியர்கள் முதல் மாணவிகள் வரை பேச கட்டுப்பாடு இல்லை. மாறாக காதலுக்கும் இடமிருந்தது. அதில் பொறாமையும் இருக்கத்தான் செய்தது.
அப்போதுதான் புரிந்தது; மனம் வேறு மற்றும் உடல் வேறு என்று!?
இப்படியாக காலங்கள் ஓடின... கல்யாணம் ஆகி பிள்ளைகள், பேரன்கள் என வளர்ந்து வாழ்க்கை ஒரு முழு சுற்று விளையாடிவிட்டோம்.
ஆனால் ஒன்று சொல்கிறேன். வாழ்வில் மனம் மற்றும் உடல் வேறு வேறு இல்லை என்று!?
இது ஒரு நகை முரண் தான்!! வேறு என்ன செய்ய; வாழ்க்கை அனுபவம் கற்றுக் கொடுத்த பாடம் அல்லவா இது...
மனம் சரியாக இல்லை என்றால் உடலில் உள்ள கோளாறு சரி செய்ய வேண்டும். உடற்பயிற்சி, நடை பயிற்சி நண்பர்களுடன் அளவளாவுதல்; பயணங்கள் என உடனே பேணி பாதுகாப்பது மற்றும் அளவாக உண்டு, சரியாக தூங்கி இருக்க பழகினால் மனம் தன் வயப்படும்.
அப்படியாக உடலுக்கு ஏதாவது கோளாறு வரும்போது (வயது மூப்பு காரணமாக) அவ்வண்ணமே கோரும் சில குறிப்புகள்....
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்".
இதை தவிர வேறு சிறந்த வைத்தியம் நமக்கு யார் சொல்ல முடியும்.
மனமே நீ சும்மா இருக்க வேண்டும்! உடலை கவனித்துக் கொள்!! அப்போதுதான் நீ உன் காலத்தை நீட்டிக்க முடியும்!!!
புரிந்து கொண்டேன்! அப்படியாக ஞானம் என்பது ஒரு மோட்டார் சைக்கில் பழுதாகி விட்டது என்று எடுத்துக் கொண்டால் அதை நீங்கள் சரி செய்ய என்ன செய்வீர்கள்!?
அல்லது நீங்களே பழுது பார்க்கும் ஒரு தொழிலாளி என வைத்துக் கொண்டால் அதில் உள்ள குறைகளை கண்டறிந்து அதற்கு ஏற்ப உள்ள பகுதிகளை வெளியில் இருந்து வாங்கி பொருத்தி சரி செய்ய முயற்சிப்பீர்கள் அல்லவா?
அப்படியாகவே நம் வாழ்வின் செயலில் ஒரு முழுமை காண வேண்டும் என்றால் அதில் ஒரு கவனம் வேண்டும். அது அவசியம் தேவை. அந்த கவனம் சிந்தனையில் இருக்கிறது. அதன் செழுமையில் இருக்கிறது. அதன் செயல்பாட்டில் இருக்கிறது.
அதற்கு நல்ல மனப்பயிற்சி தேவை. அப்படியாக நம்மை பயணப்படுத்திக் கொண்டால் நமக்கு வேண்டிய பொறுமை வந்து அடையும். அந்த பொறுமையே நம் வாழ்வின் அங்கமாக மாறும் போது அது நம் வாழ்வை ஒரு உயிர்ப்புடன் எப்போதும் வைத்துக் கொள்ளும்.
நம் கவனம் குழம்பாமல், சிதறாமல் குவிய செய்யும். அந்த குவியல் தான் ஆர்வம். அந்த ஆர்வம் நம் உடல் மற்றும் உள்ளத்தை பிரித்து பார்க்காமல் ஒன்றுபட செயலாக்கம் செய்யும்.
இதைத்தான் ஜென் மற்றும் பௌத்தம் இயல்பாக வலியுறுத்துகிறது.
அதாவது பேசுவதை விட கேட்பதுமிகச் சிறந்தது. அதை தகுந்த சமயத்தில் பயன்படுத்துவது அதைவிட சாலச்சிறந்தது.
அவ்வாறே செய்யும்போது வாழ்வின் ரகசியம் புரியும்.
நம் இருத்தலை ஒரு பார்வையாளனாக இருந்து பயன்படுத்தி ஏகாந்த நிலையை தினம், தினம் அடையலாம் கண்டுகொள்ள ஒரு தொழிலாளி தன் மோட்டார் சைக்கிள் பழுதாவதை சரி செய்வதன் மூலம் தியானம், ஞானம் ஆகிய நிலைகளை எளிதாக அடைய முடியும்.
அப்படி இருக்க ஏற்றமும் இல்லை; இறக்கமும் இல்லை .
எல்லாம் புரிதலில் தான் இருக்கிறது.
அவ்வாறு புரிதல் ஏற்படும்போது பிம்பங்கள் அறுபடும்.
நம் அடையாளங்கள் செயலற்றுபோகும். நம்மை நாம் யாருடனும் அடையாளப்படுத்த தேவை இருக்காது. அதில் நாம் மாட்டிக் கொள்ளவும் தேவையில்லை.
இப்படியான ஒரு தத்துவத்தை Robert M.Pirsig என்கிற ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் தத்துவஞானி 1970களில் அமெரிக்காவில் எழுதி ஒரு புத்தகம் தான். Zen and The Art of Motorcycle Maintenance.
இந்த புத்தகம் வாழ்க்கையின் பயணத்தின் மூலம் நாம் வாழ்க்கையின் ஞானத்தை கண்டறியலாம் என்பதை ஒரு கதையாடலாக நமக்கு விளக்குகிறது.
ஞானம் என்பது நாம் தேர்ந்து எடுக்கக் கூடிய பாதையில் தான் இருக்கிறது என்பதை விவரிக்கும் இருத்தல் மற்றும் இயக்கம் சார்ந்த அவருடைய புரிதல் மற்றும் அதை ஒரு நாவலாக எழுதிய விதம் அமெரிக்கர்கள் இடையே ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.