

அப்பாவைக் காணவில்லை.
இரண்டு நாட்களாக அப்பாவைக் காணவில்லை. திங்கள் கிழமை காலையிலே ஆபீஸ் கிளம்பும்போது, அப்பா நடுக்கூடத்தில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
"அப்பா, நான் கிளம்பறேன். ஜாக்கிரதையா இரு. வெயில் ரொம்ப அதிகமா இருக்கு. வெளியே எங்கும் போகாதே. சொம்பு நிறைய குடிக்க மோர் கரைச்சு வெச்சிருக்கேன். தாராளமா குடிச்சுக்கோ. ஒரு மணிக்கு நான் வந்துவிடுவேன்..." என்று சொல்லிக்கொண்டு அடுத்த தெருவில் இருக்கும் அலுவலகத்திற்குப் புறப்பட்டாள் கல்பனா.
"சரி. நீ கவலைப்படாதே..." என்று பதில் அளித்துவிட்டு டிவி பார்ப்பதை தொடர்ந்து இருக்கிறார் சேதுமாதவன்.
மதியம் ஒரு மணிக்கு கல்பனா வழக்கம்போல் வீட்டிற்கு வந்தாள். வாசற்கதவு உள்ளும் வெளியும் தாழ் போடாமல் சாத்தியிருந்தது.
கல்பனா அப்பாவை எங்கும் தேடினாள். தேடி சோர்ந்து விட்டாள்.
மாடியில் இருந்த பங்கஜம் மாமியை போய் விசாரித்தாள். பங்கஜம் மாமியின் பேரன் பத்ரிதான் தாத்தாவை டிவி பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டதாகச் சொன்னான். பிறகு ஒன்றும் தெரியவில்லை.
கல்பனா உடனடியாக கணவர் ரகுவிற்கு போன் போட்டு விஷயத்தைச் சொல்லி, ஆபீசுக்கு லீவு சொல்லி தளர்ந்து உட்கார்ந்து விட்டாள்.
வீட்டுக்கு வரும் வழியில், அருகிலிருக்கும் பஸ் ஸ்டான்ட், கடைகள் என்று நோட்டம் விட்டுக்கொண்டே, எங்கும் கண்ணில் சேதுமாதவன்.தென்படவில்லை என்பதால் ரகுவும் கவலையோடு வந்துசேர்ந்தான்.
"கல்பனா! அப்பா போட்டோ ஒண்ணு கையில் எடுத்துக்கோ. நாம போலீஸ்லே புகார் கொடுத்து விடலாம். கிளம்பு..." என்று துரிதப்படுத்தவே,
இருவரும் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து திரும்பினர்.
இன்று இரண்டாவது நாள்.
கல்பனா இன்னும் ஐந்து மாதங்களில் முதல்முதலாக தாயாக போகிறாள். அந்தச் சுகமான எண்ணங்களில் மிதந்து கொண்டிருந்தவளுக்கு அப்பாவைக் காணவில்லை என்பது டென்ஷன் தான்.
அப்பா எங்கே, எப்படித் தனியாக தவிக்கிறாரோ என்ற கவலையில் சோர்ந்து கண் அசந்துவிட்டாள்.
மொபைல் மணி அடிக்கவே எழுந்தவள் மறுபக்கம் குரல் கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
“ அப்பா! அப்பா!”
“ நீ எங்கே இருக்கே?”
கண்களிலிருந்து தன்னை அறியாமல் நீர் வழிந்தது.
“நான் வீட்டிலே தானே இருக்கேன். நீ எங்கே காணாம என்னை தனியாக விட்டு போயிட்டே? இங்கே யார் எல்லாமோ வந்து இருக்காங்க. எனக்கு அவங்களைத் தெரியலை. கல்பனா, நீ சீக்கிரம் வா.”
“அப்பா, போன் அவர்கள்கிட்ட குடு”.
“சார், ரொம்ப நன்றி. அப்பாவின் குரல் கேட்டதில். எங்கே இருக்கிறார் அவர் இப்பொழுது?”
“மேடம், அவர் நேற்று இரவு விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து இருந்தார். போலீஸ் ரவுண்டு போனபோது அவர் தனியாக உட்கார்ந்து இருந்ததைக் கவனித்து, அவரிடம் தகவல் கேட்டபோது அவருக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அதனால் அவரை அருகில் இருந்த ஆனந்தா ஹோட்டல் சாப்பாடு வாங்கிக் கொடுத்தோம். அங்கேயே ரூம் போட்டு தூங்கவைத்து, காலையில் இங்கே ஸ்டேஷனுக்குக் கூட்டி வந்தோம்.
வயர்லெஸ் அலர்ட் அறிவிப்பு எங்களுக்குப் போலீசார் கண்ட்ரோல் ரூமில் இருந்து வந்தது. கூடவே போட்டோ ஃப்ளாஷ் பண்ணினாங்க. நீங்க வந்து அழைத்து போகலாம் அம்மா.”
“ உடனே கிளம்பறேன் ஐயா. ஜாக்கிரதையாக அவர் அங்கே இருக்கட்டும்.”
ரகுவுக்கு விஷயத்தைச் சொல்லி உடன் இருவரும் கார் எடுத்துக்கொண்டு கிளம்பினர்.
கண்டமங்கலம் B6 காவல் நிலையம் அடைந்தவுடன், கல்பனா சிறு குழந்தையைப்போல் ஓடிச்சென்று அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.
அவர் உடை எல்லாம் அழுக்காகவும், குளிக்காமலும் இருந்ததைக் கண்டு அவளால் சகித்துக்கொள்ள முடியவில்ல.
ரகு உள்ளே வந்து "மாமா,எங்களைக் கவலையில் ஆக்கிட்டீங்களே! வாங்க, நாம போகலாம்."
“எங்கே போகணும்? நம்ம வீடுதானே. இவர்கள் எல்லாம் யார் தெரியல. ஆனால், நல்ல மனுஷா" என்று ஒன்றும் விளங்காமல் மகளின் கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு அவளைப் பின்தொடர்ந்து மகுடி முன்னால் பாம்புபோல காரில் ஏறிக்கொண்டார்.
"பெரியவர் நல்லா இருந்தவர், உயர் பதவிலிருந்து ஓய்வு பெற்றவர். ஓராண்டு முன் அவர் மனைவி இறந்தபின் அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். அதான் இப்படி..." என்று சொல்லிய
ரகு போலீசாருக்கு நன்றி சொல்லி, தன் வீட்டு விலாசத்தைக் கொடுத்துவிட்டு வந்தான்.
கார் சென்னை அசோக் நகரை நோக்கிப் பறந்தது.