

வெள்ளிக்கிழமை பள்ளி வாசலில், சிறப்பு தொழுகை முடித்து, வெளியே வந்தார் இஸ்மாயில் மரைக்காயர். பொசுக்கும் வெயிலில், வியர்வை வழிய நடந்தார். வெறும் கால்களோடு...
ஆம்...பல வருடங்களாக சிறப்புத் தொழுகைக்கு செருப்புகளின்றி, சென்று வருவதை கடைப்பிடித்து வருகிறார். முதுமையின் காரணமாக, சூடு தாங்காமல் கால்கள் எரியத் தொடங்கின. எப்படியோ நடந்து வீட்டை நெருங்கி விட்டார். வாசற் கதவு திறந்தே இருந்தது. "மெஹருன்னிஸா.." அழைத்தவாறே உள்ளே நுழைந்தார். ஹால் சோபாவில் கண்ணயர்ந்திருந்த மனைவியைக் கண்டதும், தொந்தரவு பண்ண விருப்பமின்றி மௌனமாக உள்ளே சென்றார்.
கிச்சன்ல யாருமே இல்லை. அடுப்பிலிருந்த பால் பொங்கி, பாத்திரத்தின் விளிம்பை எட்டிப் பார்க்க, அவசரமாக, அருகே சென்று தீயை அணைத்தார். அந்த சமயம் மெஹருன்னிஸா உள்ளே வரவே, "அடுப்பில் வைத்த பால் பொங்கி வருவது பார்த்து தீயை அணைத்து விட்டு சென்றிருக்கலாமே...?" கோபத்துடன் கேட்க,
"பாலை அடுப்பில் நான் வைக்கலையே.. ஆபிதாவாயிருக்கும். எங்கே அவள்..?" சொல்லியவாறு, "ஆபிதா" அழைத்துக் கொண்டே பின் பக்கம் சென்றாள்.
அங்கே சுற்றுப்புறம் மறந்து, அலைபேசியில் ஐக்கியமாகியிருந்தாள் மருமகள் ஆபிதா. எதிர் முனையில் சரவணன்.
"3BHK நல்லாயிருக்காம். நாளைக்கு மேட்னி போகலாம். வர்றியா.. ஆன் லைன்ல டிக்கெட் புக் பண்ணிடுறேன்," என்றாள்.
எதிர் முனையில் ஏதோ பதில் வரவே, "மாமா, மாமி ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. சனிக்கிழமை உனக்கு மதியம் லீவு தானே...? ப்ளீஸ்..ப்ளீஸ்பா.." கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
'ச்சே.. என்ன பெண் இவள்?' முணுமுணுத்தவாறு, முன்னேறிய மனைவியின் கையைப் பிடித்து, இழுத்து வந்து விட்டார் இஸ்மாயில் மரைக்காயர்.
கடந்த பல மாதங்களாக, மனைவியை இப்படி அழைத்து வருவது பல முறை நிகழ்ந்துவிட்டது. 'என்ன செய்ய... குடும்ப சூழல்... தப்பு பண்ணிவிட்டேனோ...' என்று தனக்குள் ஆறுதல் சொல்லி, கேள்வியும் கேட்டுக் கொள்வார். அப்படியென்ன குடும்பச் சூழல் வருந்துமளவுக்கு?
மகன் அமீரும், சரவணனும் பள்ளித் தோழர்கள். இரட்டையர்கள்போல் எங்கும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். பால்ய நட்பு கல்லூரியிலும் தொடர்ந்தது. அவர்கள் எண்ணம்போல் ஒரே கம்பெனியில் பணியில் சேர்ந்தார்கள். இருவரின் ஒற்றுமையான உழைப்பால், கம்பெனி வளர்ந்து உயர்ந்தது. அமீர் அத்தை பெண் ஆபிதாவை பெற்றோர் விருப்பப்படி நிக்காஹ் செய்தான். எந்தவித இடையூறுமின்றி காலம் போய்க்கொண்டிருந்தது.
திடீரென மால்களின் வளர்ச்சியில், இஸ்மாயில் நடத்தி வந்த பலசரக்கு கடை தடுமாறியது. வாடிக்கையாளர்கள் குறைந்து, பொருட்கள் தேங்கி, வீணாகி, நஷ்டத்தை ஜீரணிக்க முடியாமல் கடையை மூடும்படி ஆகிவிட்டது.
வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதே சிரமமாகிவிட்டது. இந்நிலையில், துபாயில் மூன்று வருடங்கள் பயிற்சிக்கு செல்லும் வாய்ப்பு வந்தது. அமீரும், சரவணனும் லிஸ்டில் இருந்தனர். தற்சமயம் வாங்குவதுபோல் இரு மடங்கு சம்பளம். வாய்ப்பை அமீருக்கு விட்டுத் தர முடிவு செய்தான் சரவணன். அருமையான சான்ஸ் என்றபோதிலும், அமீர் முதலில் மறுத்தான். திருமணமாகி கொஞ்ச நாட்களே ஆகி இருந்ததால், ஆபிதாவை மனசில் வைத்துப் பின் வாங்கினான்.
"அமீர்.. மூணு வருஷம்தானே.. விரைவில் ஓடி விடும். தங்குவதற்கு கம்பெனியே வசதி பண்ணித் தந்து, சாப்பாடும் ஏற்பாடு செய்துவிடுவதால், செலவு கம்மி. சீக்கிரமாக உன்னுடைய வாப்பாவின் கடனை அடைத்துவிட்டு, சொந்தமாக வீடும் வாங்கிவிடலாம். கிடைத்த சான்ஸை விட்டு விடாதே..." இஞ்ச் இஞ்ச் ஆக இளக வைத்தான் சரவணன்.
"ஆ..பி..தா..?" என இழுத்தவனிடம், "நாங்க இருக்கோம். அவளையும் கம்யூட்டர் கோர்ஸில் சேர்த்துவிட்டால், நீ திரும்பி வந்ததும், நம் கம்பெனி மடிப்பாக்கத்தில் ஆரம்பிக்க இருக்கும் புது பிராஞ்சில் சேர்த்துவிடலாம்."
கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனசை மாற்றுவதில் சரவணன் ரொம்பவே மெனக்கிட்டு தயார் பண்ணி அனுப்பி, ஒரு வருடமும் கழிந்துவிட்டது.
இரு தினங்களுக்கொரு முறை சரவணன் வருவான். வங்கிப்பணி முதல் குழாய் ரிப்பேர் வரை எந்த பிரச்னையானாலும், அவனின் மொபைல் எண்ணைத்தான் சுழற்றுவார் இஸ்மாயில் மரைக்காயர். ஆபிதாவும், அவனுடன் டெய்லர் கடை, பியூட்டி பார்லர், சூப்பர் மார்க்கெட் எனப் போக ஆரம்பித்தாள். அடிக்கடி பைக்கில், அவன் பின்னால் அமர்ந்து செல்வதைப் பார்த்து அக்கம், பக்கம் சலசலப்பு முளைத்தது.
மெஹருன்னிஸா, அதிருப்தியை வார்த்தைகள் மூலம் காட்ட ஆரம்பித்தாள். ஆபிதா, சரவணன் வந்தால் சுவாதீனமாக பக்கத்தில் உட்காருவதும், அவன் சொல்லும் ஜோக்குக்குச் சப்தமாகச் சிரிப்பதும், அவன் உடைகளை விமரிசித்தும், மாமியாரின் எரிச்சலைக் கூட்டியதில், பாவம் இஸ்மாயில் மரைக்காயர்தான் திணறினார். வெள்ளேந்தியான மருமகளை, எப்படிச் சொல்லி புரியவைத்து, நிலைமையைச் சமாளிப்பது எனக் குழம்பினார். ஏடாகூடமாக சொல்லி, நிதானமாக மிதக்கும் குடும்பப் படகில், துவாரம் விழுந்து விடுமோ என்ற பயமும் அவரை அமைதி காக்க வைத்தது.
ஆனால்... இன்று ஒரு முடிவுக்கே வந்துவிட்டார். இனிமேலும் தொடர வேண்டாம் என நினைத்து, உடனடியாக செயல்படுத்த, செல்போனை எடுத்து, மகன் அமீருக்கு கால் போட, அவனும் லைனில் வந்தான்.
"வாப்பா.. எப்பவும் இரவுதானே அழைப்பீங்க... இப்ப பகல்லேயே கூப்பிட்ருக்கீங்க. என்ன விஷயம்...?" பதறியபடி கேட்டான்.
"அது வந்துப்பா... நீ ரம்ஜான் பண்டிகைக்கு வரும்போது.." எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே லைன் கட்டாகி விட்டது. மீண்டும் பல முறை முயற்சித்தும் லைன் கிடைக்க வில்லை. அவனும் அழைக்கவில்லை. இனி அடுத்த வாரம் தான் அவனைத் தொடர்பு கொள்ளமுடியும். ஆயாசத்துடன், தன்னுடைய ரூமுக்குச் சென்று, படுத்துவிட்டார்.
"என்னவோ... காரணம் தெரியவில்லை... சரவணனை நான்கைந்து தினங்களாகக் காணவில்லை. மெஹருன்னிஸாவிற்கு நிம்மதி.
ஆபிதாதான் அவனை அடிக்கடி மொபைலில் அழைத்தாள். 'சொல்லாம எங்கே போனான்... போன் பண்ணினாலும் எடுக்க மாட்டேங்கறான். சினிமாவுக்குக் கூப்பிட்டேன். முடியாதுன்னு ஏமாத்திட்டான். என்னோட போனுக்கு கவர் வாங்கனும். அவனுக்குத்தான் விவரம் தெரியும். அவன்தான் எனக்கு இந்த போனையே வாங்கிக் கொடுத்தான். வாட்ஸ்அப் மெசேஜையும் காணோம். விஷயம் இல்லாட்டியும், குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் அனுப்புவானே..' என்று புலம்பித் தவித்து விட்டாள்.
"மாமா, நாளைக்கு அவன் வீட்ல போயி பார்ப்போமா..?" கேட்டவளிடம், "இந்த வாரம் கொஞ்சம் வேலையிருக்கு.. அடுத்த வாரம் பார்க்கலாம்.." என சமாளித்துவிட்டார். அவருக்குமே, சரவணனைக் காணாத ஏக்கம் இருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. உள் மனசு மட்டும் சொன்னது, 'ஆபிதா அக்மார்க் நல்ல மருமகள்' என்று.
அடுத்த வாரம், நடைபயிற்சி முடித்து, இஸ்மாயில் மரைக்காயர் வீட்டினுள் நுழைந்ததும், பின்னாலேயே, கையில் ஸ்வீட்பாக்ஸ், கட்டைப் பையுடன் முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் சரவணன் வந்தான்.
"வாப்பா, என்னை ஆசிர்வதியுங்கள்." நமஸ்கரித்து எழுந்தவன், ஸ்வீட்டை கையில் கொடுத்து, "எனக்குக் கல்யாணம் முடிவாகி விட்டது. மதுரைப் பொண்ணு. அமீர்கிட்ட சொல்லலை. ரம்ஜான் சர்ப்ரைஸாக இருக்கட்டுமே. ஏய்.. ஆபிதா உனக்கு ஒரு புதுத்தோழி வரப்போறா.. ஜாலிதான்.. முந்திரிக்கொட்டையாட்டம் அமீர்கிட்டே சொன்னே குட்டு தான்,"... செல்லமாகக் குட்ட சிணுங்கினாள் ஆபிதா. முகம் சுழிக்கும் மனைவியைக் காணாததுபோல் இருந்தவரின், மனதில் "ரொம்பவே இடம் கொடுத்து விட்டேனோ.." என்று எழுந்த எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.
சரவணன், பையிலிருந்த, புடவை டப்பாவை எடுத்து ஆபிதாவிடம் கொடுத்தான். பின், "வாப்பா.. எங்க கல்யாணத்துல, தாலி கட்டும்போது, மாப்பிள்ளை ஒரு முடிச்சுதான் போடணும். மீதி ரெண்டு முடிச்சையும், உடன் பிறந்த சகோதரி போடணும். அதுக்கு நாத்தனார் முடிச்சுன்னு பேரு. முடிச்சுப்போட்ட கைக்கு மோதிரமும் போடுவோம். நா ஒத்தப் பிள்ளைங்கறதாலே, திருச்சி சித்தி பொண்ணு பூஜாவை போடச் சொல்லலாம்ன்னு அம்மா சொன்னாங்க. அதுக்கு நா முடியாதும்மா; நாத்தனார் முடிச்சை என் தங்கச்சி ஆபிதா தான் போடுவா.
வேற யாருக்கும் அந்த சான்ஸ் கிடையாதுன்னு அழுத்தமாச் சொல்லிட்டேன். பெண் வீட்ல சம்மதிக்கணுமேன்னு தயங்கினாங்க அம்மா. நா பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு, பெண்ணோட அம்மாவிடமே பேசினேன். முதலில் யோசிச்சாங்க. அப்புறம் ஓ.கே சொல்லிட்டாங்க. அவங்களே ஆபிதாவிற்கு புடவையும் செலக்ட் பண்ணிக் கொடுத்தாங்க. வாப்பா, நீங்களிருவரும் பெர்மிஷன் தரணும்..." என்றான்.
இஸ்மாயில் மரைக்காயர் மனைவியைப் பார்த்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் மெஹருன்னிஸா தலைகுனிந்தாள். "எனக்கு பவள மோதிரம் போடணுமாக்கும். அப்பத்தான் முடிச்சுப் போடுவேன். டீல் ஓகேயா?" ஆபிதா வெள்ளேந்தியாய் கேட்டு, சிரிக்க மெஹருன்னிஸாவும் சிரிப்பில் கலந்துகொள்ள அங்கே ஆனந்தம் நடனமாடியது.
அடுத்த வாரம்... வெள்ளிக்கிழமை இரவு, அலைபேசியில் அழைத்த அமீர், "வாப்பா..போனவாட்டி பேசும்போது, ஏதோ சொல்ல வந்தீங்க. லைன் கட்டாயிடுச்சு. நானும் பிஸியாகிட்டேன். என்ன விஷயம்? " கேட்டான். "ரம்ஜானுக்கு வரும்போது, தேவையான ஏற்பாடுகளுடன் வந்து போகும்போது ஆபிதாவையும் கூட்டிட்டுப்போ. அங்கே, மாலில் வேலைக்கு சேர்த்துவிடு. அவளும் சம்பாதித்தால் சீக்கிரம் கடனை அடைச்சிடலாம்ன்னு சொல்ல நினைச்சிருந்ததை மறைச்சு,"நீ வரும்போது உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்காம். சரவணன் சொன்னான்" என்று மட்டுமே கூறி, "போனை ஆபிதாவிடம் கொடுக்கிறேன், பேசு" என்றவாறு "ஆபிதா..." என்று அழைத்தார் அக்மார்க் அன்பு மருமகளை!