

இன்று ஆபீஸ் போனதும் எப்போதும்போல மனது சஞ்சலப்படும்படி கேள்வி கேட்டு சங்கடத்தை உண்டாக்குபவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டே புடவையை பின்பண்ணியபடி "அத்தை நான் ஆபீஸ் கிளம்பறேன்" என்றாள் வர்ஷா..
"இரும்மா வர்ஷா... உனக்கு லஞ்ச் ரெடி பண்ணிட்டேன்.. சாத்துக்குடி ஜுஸ் எப்போதும் போல பாட்டிலில் வச்சுருக்கேன்... உடம்பு இப்போதான் தேவலை.. இன்னும் ஒரு வாரம் லீவ் எடுத்துக்கோன்னு சொன்னா கேட்க மாட்டேங்கறே..." என்று மாமியார் ராதா சொல்ல...
"இல்லை அத்தை... ஏற்கனவே 15 நாள் லீவ் போட்டாச்சு. இன்னிக்கு போயே ஆகணும். பென்டிங் ஒர்க் நிறைய இருக்கு. அத்தை... அப்புறம் அன்விகா..." னு வர்ஷா ஆரம்பிப்பதற்குள்,
"அன்விகாவை வேதாந்த் ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே ஆபீஸ் போயிட்டான்... நீ தூங்கிட்டு இருந்தே... பாவம் டயர்டா இருப்பேன்னு எழுப்பலை.. சான்ட்விச் அப்புறம் ஆப்பிள் கட் பண்ணி கொடுத்துவிட்டு இருக்கேன்..
ப்ரீகேஜி தானே 12 மணிக்கெல்லாம் வந்துடுவா... மாமா போய் கூட்டிட்டு வந்துடுவார். அவளுக்கு தனியா காய் பண்ணப் போறேன்.. பருப்பு சாதம் பிசைந்து நெய் விட்டு கொடுத்துடறேன்... நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆபீஸ் கிளம்பி போ... ஓலா புக் பண்ணியாச்சா?" என்று கேட்டபடியே கணவன் கண்ணனுக்கு டிபன் கொடுக்க சமையல் ரூமுக்குள் சென்றாள் ராதா...
பின்னாலேயே சென்ற வர்ஷா "அத்தை" என்று அழைக்க அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும்,
"என்னம்மா வர்ஷா என்ன ஆச்சு?" என்று சற்றே கவலையுடன் கேட்ட மாமியார் ராதவிடம் "ஒண்ணுமில்லை அத்தை.. சாயந்தரம் வந்து உங்ககிட்ட பேசறேன்.. கேப் வந்தாச்சு.. வரேன் அத்தை வரேன்... மாமா..." என்று சொல்லிவிட்டு, அவசரமாக ஹேண்ட் பேக் லஞ்ச் பேக் எல்லாம் எடுத்துக்கொண்டு கேபில் ஏறினாள் வர்ஷா..
வேதாந்த் - வர்ஷாவிற்கு கல்யாணம் ஆகி அன்விகா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. கல்யாணம் ஆகி வந்த புதிதில். 'மாமியார் நம்மிடம் எப்படி நடந்துகொள்வார்? பல வீடுகளில் கேள்விப்படுவதுபோல கொடுமைப்படுத்தும் மாமியாராக இருந்தால் என்ன பண்றது?' என்று பல கேள்விகள் மனதில் எழத்தான் செய்தன..
"வர்ஷா... நீ கல்யாணம் ஆன கையோடு தனிக்குடித்தனம் போயிடு... இந்தக் காலத்தில் மாமியார் மாமனார்கூட இருப்பதெல்லாம் சாத்தியம் இல்லை..." என்று ஆபீஸில் கூட வேலை பார்க்கும் ஷாஷியும் மாலினியும் சொல்ல... வர்ஷாவின் நெருங்கிய தோழி தாராதான் "இங்க பாரு வர்ஷா.. உன்னோட மாமியார் மாமனார் ரொம்ப நல்ல மாதிரின்னு பார்த்த உடனேயே தெரிஞ்சுதுனு நீயே சொல்லி இருக்கே...
ஷாஷியும் மாலினியும் சொல்றதை கேட்டு தனிக்குடித்தனம் போயிடாதே... ஆரம்பத்தில அட்ஜஸ்ட் பண்ணிக்க உனக்கும் கஷ்டமாக இருக்கும்.. உன் மாமியார் மாமனாருக்கும் கஷ்டம்னு சொல்லமாட்டேன்... ஆனா கண்டிப்பாக அட்ஜஸ்ட் பண்ணிக்க அவங்களுக்கும் கொஞ்சம் டைம் ஆகும்... அவங்க கண்டிப்பாக உன்னை பொண்ணு மாதிரிதான் பார்த்துப்பாங்க..." என்று கூறி தனிக்குடித்தனம் என்ற எண்ணமே வரக்கூடாது என்ற தொனியில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவள்.
ஆரம்பத்தில் சில விஷயங்களில் சின்ன சின்ன வேறுபாடுகள் வரும்போதெல்லாம் "இங்கே பாரு வர்ஷா... இதையே உன் அம்மா சொன்னா நீ தப்பா எடுத்துப்பியா? மாட்டே இல்லையா? அதே மாதிரி உன் மாமியார் சொல்றத எதையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்காதே...
"ஏன் வர்ஷா.. நீ ஏன் சமைக்கிறே.. உன் மாமியார் சும்மாதானே இருக்காங்க. அவங்க பண்ணட்டும்.. நீ ஆபீஸ் வர்றே? எவ்வளவு ஒர்க் லோடு... இனிமே நீ சமையல் பண்ணாதே.. உன் மாமியாரை பண்ணச் சொல்லு" என்று லஞ்ச் டைம் இல் ஷாஷியும் மாலினியும் ஒரு நாள் பார்த்தால் போல் வர்ஷாவிடம் சொல்வது வழக்கம்.. சமயத்தில் வர்ஷா மனதிலும் ஏன் நாமே எல்லாம் செய்யணும் என்ற நினைப்பு வரும்... அப்போதெல்லாம் தாரா சொல்வதை நினைத்துப் பார்த்து கண்டுகொள்ளாமல் சிரித்தபடியே கடந்து சென்று விடுவாள் வர்ஷா...
இப்படி சுமுகமாக வாழ்க்கை போய்க்கொண்டு இருந்தபோது வைரல் இன்ஃபெக்ஷன் முதலில் வேதாந்த்திற்கு வந்தது... டாக்டரிடம் காட்டி ஒரு வாரம் மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டு கொஞ்சம் தேவலையானதும் வர்ஷாவுக்கு வைரல் இன்ஃபெக்ஷன் ஆரம்பித்து விட்டது... ஜுரம் அனத்தியது.. வேளாவேளைக்கு கஞ்சி ஜுஸ் கொடுத்து டைம்க்கு மாத்திரை கொடுத்து பார்த்துக்கொண்டார் மாமியார் ராதா.. குழந்தை அன்விகா எப்போதும் தாத்தா பாட்டியுடன் ரொம்ப பாசமாக இருப்பாள்.. அதனால் அவளைப் பார்த்து கொள்வதை தங்கள் வாழ்க்கையில் கிடைத்த வரமாகத்தான் நினைத்தனர் ராதாவும் கண்ணனும்..
பதினைந்து நாட்கள் கழித்து இன்றுதான் ஆபீஸ் போகிறாள் வர்ஷா... கேபில் உட்கார்ந்தபடி நினைவுகளை அசைபோட்டு கொண்டு இருந்த வர்ஷாவிடம் "மேடம் உங்க ஆபீஸ் வந்தாச்சு..." என்று டிரைவர் சொல்ல ஜீ பே பண்ணி விட்டு இறங்கினாள் வர்ஷா...
நான் எத்தனை தடவை உன் வீட்டுக்கு வந்திருக்கேன்... உன் மாமியாரும் மாமனாரும் எந்த வேற்றுமையும் இல்லாமல்தான் உன்கிட்ட பழகறாங்க... பாசமா இருக்காங்க... மனசுல குப்பை மாதிரி தேவையில்லாத எண்ணங்களை சேர்த்து வச்சுக்காதே" என்று நல்லதனமாக எடுத்து சொல்லும் தோழிதான் தாரா..
தாரா சொல்வது போல் சின்ன சின்ன வேறுபாடுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போய்விடுவார்கள் இருவரும்... இதோ கல்யாணம் ஆகி அன்விகா பிறந்து ஸ்கூலுக்கும் போக ஆரம்பித்தாகி விட்டது.. வருடங்கள் ஓடுகின்றன... வர்ஷா காலையில் சீக்கிரம் எழுந்து சமையல் பண்ணி விடுவாள்.. மாமியார் ராதா மாலை நேரங்களில் ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து விடுவாள்... தேங்காய் துருவி வைத்து விடுவார் மாமனார் கண்ணன்.. அதனால் சமையல் பெரிய விஷயமாக தெரியவில்லை வர்ஷாவுக்கு.. லஞ்ச் வேதாந்தக்கும் வர்ஷாவுக்கும் கட்டுவது ராதாதான்.. வேலைக்கு ஆள் வருவதால் அதை மேற்பார்வை செய்ய வேண்டிய வேலை ராதாவிற்கும் கண்ணனுக்கும்..
கேபினுக்குள் நுழைவதற்குள் நலம் விசாரித்த அனைவரிடமும் பேசிவிட்டு திரும்பிய வர்ஷாவிடம் ஷாஷியும் மாலினியும் வந்து "வர்ஷா.. உனக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டதும் நாங்க இரண்டு பேரும் ரொம்ப கவலைப்பட்டோம்..
நீ எப்படி இருக்கியோ? உன் மாமியார் உனக்கு சமைச்சு போட்டாங்களா...? உன்னை பார்த்துண்டாங்களான்னு ஒரே கவலை.. உன்னைப் பார்க்க வரலாம்னு இருந்தோம்... ஆனா கொடைக்கானல் டூர் ஆறு மாதம் முன்னாடியே புக் பண்ணி இருந்தோம்.. உனக்கு தெரியுமே... நீதான் என்னால் வர முடியாதுனு சொல்லிட்டியே... நேத்துதான் வந்தோம்... ஆமா.. நீ ஏன் இப்படி இளைச்சு துரும்பா போயிட்டே...? உன் மாமியார்..." என்று இழுத்ததும்,
"ஷாஷி, மாலினி நான் உடம்புக்கு வந்து படுத்ததில் இருந்து இன்னிக்கு சரியாகி வரவரைக்கும் என்னைப் பார்த்துண்டது என் மாமியாரும் மாமனாரும்தான்... நீங்க இரண்டு பேரும் அவங்களைப் பத்தி எதுவும் பேச வேண்டாம்" என்று கறாராக சொல்லிவிட்டு, கேபினுக்குள் நுழைந்ததும் முதலில் தாராவிற்கு போன் பண்ணினாள்...
உடம்பு சரியில்லாமல் இருந்த போது அடிக்கடி வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு போன தோழி தாராவிடம், "தாரா.. இன்னிக்குத்தான் ஆபீஸ் வந்தேன்...
நான் ஜுரத்தில் அவஸ்தைப்பட்டபோது என் மாமியாரும் மாமனாரும் அம்மா அப்பா எப்படி பார்த்துப்பாங்களோ அப்படி என்னை பார்த்துண்டாங்க..
எத்தனையோ தடவை அவங்களைப் பத்தி குறையாக நான் சொன்ன போதெல்லாம் நீ எனக்கு எவ்வளவு அட்வைஸ் பண்ணி இருப்பே... இப்ப புரிந்துகொண்டேன் தாரா.. அவங்க என் மாமியார் இல்லை என் அம்மா.. நானும் அவங்க மருமகள் இல்லை... மகள்தான்" என்று கூறிய வர்ஷாவின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் அவள் கைகளை நனைத்தது.