

பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் (வயது 88) என்ற செய்தி தென்னிந்திய திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகில் கானக்குயிலாக வலம் வந்த பாடகி எஸ். ஜானகி நேற்று உடல் நல குறைவு காரணமாக மைசூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. சமீபத்தில் இவரது ஓரே மகன் மறைந்தது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய திரையிசை உலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தன் குயில் குரலால் மொழிகளைக் கடந்து வயது வித்யாசமின்றி சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்டவர் எஸ். ஜானகி என்றால் மிகையாகாது.
ஆம்... தலைமுறைகளைக் கடந்து தனது அசாதாரணமான கொஞ்சும் குரலால் ரசிகர்களின் மனங்களைக் கட்டிப்போட்ட ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ந் தேதி ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த எஸ். ஜானகி, சிறு வயது முதலே இசையின் மீது தீராத ஆர்வம் கொண்டவராக, நாதஸ்வர வித்வான் பைடிசுவாமி என்பவரிடம் முறையாக இசை பயின்று, 1957-ஆம் ஆண்டு 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம் திரையுலகில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கி, அதே ஆண்டில் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அறிமுகமாகி, மிகக் குறுகிய காலத்திலேயே தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத குரலாக மாறியது சிறப்பு. மேலும் இந்தி, துளு, சௌராஷ்டிரா, சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் என 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி சாதனை படைத்தவர்.
பிறந்தது ஆந்திரா எனினும் தமிழகத்தை தன் கலையின் பிறந்தவீடாக கொண்டு இளையராஜாவின் இசையில் எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களை பாடிய ஜானகி அன்றைய எம். எஸ். வி முதல் ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் என இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் வரை பாடி தலைமுறைகள் தாண்டிய கலைஞராக தனது தடத்தை பதியவைத்தவர்.
4 தேசிய விருதுகள், பல்வேறு மாநில அரசின் உயரிய விருதுகள் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் எனினும் நெற்றியில் வட்டப் பொட்டுடன், கழுத்தை மூடிய ஜாக்கெட்டுகள், எளிய கைத்தறி சேலைகள் என எவ்வித பந்தாவும் இன்றி எளிமையின் சிகரமாகவே இறுதிவரை வாழ்ந்தவர் எஸ். ஜானகி.
திரையுலகில் எத்தனையோ பாடகிகள் வந்து சென்றாலும் எஸ். ஜானகி மட்டும் தனித்தன்மை பெற்றவராக அறியப்படுவதற்கு காரணம் அவரின் குழந்தை முதல் கிழவி வரை பொருந்தும் அசாத்திய குரல் வளம் மட்டுமல்ல; ஒரு கலைஞருக்கு இருக்க வேண்டிய மிக உயரிய பண்பான 'சுயமரியாதை' யுடன் வாழ்ந்து காட்டியதும் எனலாம்.
கலைஞர்கள் தங்களின் திறமைக்கான அங்கீகாரமாக விருதுகளை எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால், எஸ். ஜானகி விருதுகளை விட தன் சுயமரியாதையையும் தன்னுடைய சக தென்னிந்தியக் கலைஞர்களின் கௌரவத்தையும் மிக உயர்வாகக் கருதிய காரணத்தினால் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மபூஷண்' விருதையே நிராகரித்து தனது எதிர்ப்பை காட்டியவர்.
2013 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மபூஷண்' விருதை அறிவித்தது. ஆனால், அந்த விருதை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
இதற்குக் காரணமாக அவர் கூறியது இந்தியத் திரையுலகில் பலரையும் சிந்திக்க வைத்தது. அந்த நேரத்தில் அது மிகப்பெரிய விவாதத்துக்கு வழிவகுத்தது.
"இந்த விருது 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். தென்னிந்தியக் கலைஞர்களை மத்திய அரசு எப்போதும் தாமதமாகவே அங்கீகரிக்கிறது. காலம் கடந்த இந்த விருது எனக்கு தேவையில்லை. என் ரசிகர்களின் அன்பும், கைதட்டலுமே எனக்குப் போதுமானவை" என்று அவர் அந்த விருதை ஏற்க மறுத்த காரணத்தை தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் மத்திய அரசின் விருதுக் குழுவினர் தென்னிந்தியக் கலைஞர்களின் திறமையையும் உழைப்பையும் உரிய நேரத்தில் அங்கீகரிப்பதில்லை என்ற தன் ஆதங்கத்தை அவர் பதிவு செய்தார். அதுவரை பாடகியாக அறியப்பட்டவர் இதன் பிறகு 'சுயமரியாதை சுடராக' பெருமை பெற்றார். ஒரு கலைஞருக்கு இருக்க வேண்டிய கௌரவம் மற்றும் மரியாதையை வெளிப்படுத்தியதன் காரணமாக மற்றவர்களிடமிருந்து ஒரு படி சிறந்த மேன்மையை பெற்றவரானார் ஜானகி.
மேலும் 2013-ஆம் ஆண்டின் பத்ம விருதுகள் பட்டியலில் தென்னிந்தியர்களை விட வடஇந்தியக் கலைஞர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததையும் அவர் தைரியமாக சுட்டிக்காட்டியது அன்று பேசப்பட்டது. மத்திய அரசின் விருதுக்கு முன்பாக தன் சுயமரியாதையை உரக்கச் சொன்ன துணிச்சல், அவரை ஒரு சிறந்த ஆளுமையாகவும் உயர்த்தியது.
எஸ். ஜானகியின் குரல் கடவுளின் ஸ்பெஷல் வரம் எனலாம். ஆம் எந்த ஒரு கதாபாத்திரத்திற்கும், எந்த ஒரு உணர்வுக்கும் ஏற்ப தன் குரலை மாற்றிக்கொள்ளும் அசாத்திய வித்தை தெரிந்தவர் என்பதால் இசையமைப்பாளர்களுக்கு அவர் ஒரு பெரும் வரப்பிரசாதமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகத்தில் உருகிய 'சிங்கார வேலனே தேவா..', இளமை பொங்கும் 'செந்தூரப்பூவே' வில் பதின்ம வயதினரை கனவில் மூழ்க வைத்து, 'டாடி டாடி ஓ மை டாடி' என மழலையாக கொஞ்சி, 'அடி ஆத்தாடி இளமனசு ஒண்ணு...' என்று கிராமத்து ஸ்டைலில் கவர்ந்து, 'நேத்து ராத்திரி யம்மா' என ரொமான்ஸ் பாடலிலும் வெளுத்துக் கட்டியவர். இவை இவரது இசைப் பெருங்கடலில் சிறு துளி சான்று. இவரது ஒவ்வொரு பாடல்களும் நம்மை அதற்குள் இழுத்து பயணிக்க வைத்து விடும் அற்புத சக்தி கொண்டது என்றால் மிகையல்ல.
பன்முகக் குரல் வித்தைக்காரராக நாட்டுப்புற பாடல்களுடன் ஆன்மீகம் முதல் மேற்கத்திய பாடல் வரை தனது இசைப் பரிமாணத்தை விரிவுபடுத்திக் கொண்டே இருந்த உச்ச காலகட்டத்தில் தனது ஓய்வை அறிவித்து அதிலும் தனது தனித்தன்மை காட்டியவர்.
இறுதிப் பாடலான "அம்மா பூவினு..." (2016) என்ற மலையாளப் பாடலோடு. "நான் நீண்ட காலம் பாடி விட்டேன், எனக்கு இப்போது வயது ஆகிவிட்டது. இனிவரும் காலங்களில் ஓய்வெடுக்கவும், இளைய தலைமுறை கலைஞர்களுக்கு வழிவிடவும் விரும்புகிறேன்" என்று கூறி தன் 60 ஆண்டுகால திரையிசை பயணத்திலிருந்து கம்பீரமாக விடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பிற மொழிகளில் பாடும்போது உச்சரிப்பில் எந்தத் தவறு வந்துவிடக் கூடாது என்பதில் அவர் காட்டிய அக்கறை இளைய தலைமுறையினர் கற்க வேண்டிய பாடம். அவர் பாடிய தாலாட்டுப் பாடல்களால் கண் அயர்ந்தோம். சோகப் பாடல்களால் இதயம் நனைந்தோம். இளமையான துள்ளல் பாடல்களால் உற்சாகமானோம். இந்த கானக்குயிலின் புகழ் பாடல்களால் நிரம்பும் காற்றுள்ள வரை திரையிசை வரலாற்றில் மட்டுமல்ல நமது மனங்களிலும் அழியாமல் நிலைத்திருக்கும்.