

‘நான் இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம். கல்யாணத்துக்கு அவசரப்பட்டிருக்க வேண்டாம்னு இப்ப நெனைக்கிறேன். இப்பக் கெடந்து அல்லாடறேன்', என அலுத்துக் கொண்டாள் அலமு.
பார்த்துப் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணி வைத்தார்கள். ஆனால் பொருந்தாத ஜோடியாப் போயிடுச்சேன்னு அலமுக்கு அங்கலாய்ப்பு அதிகம். அவள் நெனைக்கறதும் தப்பில்லைதான். அவளும் அவள் கணவனும் எதையாவது பேச உட்கார்ந்தாலே அது பிரச்னைல, சண்டைலதான் போய் முடியும்!. அப்படியொரு ராசி இருவருக்கும்.
‘சே! என்னடா வாழ்க்கை? நம்மை ஏன் ஆண்டவன் இப்படி பிணைச்சுப் போட்டான்னு' அழாத நாளில்லை அவள்.
இத்தனைக்கும் அவள் விரும்பித்தான் கல்யாணம் பண்ணிக் கொண்டாள். அவள் கல்யாணம் பண்ணிக் கொண்டது அவள் அக்கா புருஷனைத்தான். அக்காவுக்கு வாரிசு இல்லை என்பதால் அக்கா புருஷன் வீட்டுக்காரர்கள் அளவுக்கு அதிகமான சொத்து. வேற யாருக்கும் போயிடக் கூடாதேன்னு இவளைப் பெண் கேட்க, வயதுக் கோளாறோ, வசீகர தகராறோ, என்ன எழவோ... அப்ப சரின்னு தலையாட்ட, இரண்டாந்தாரமா இவளைக் கல்யாணம் கட்டிக் கிட்டாங்க!
இவள் போன நேரமோ என்னமோ அக்கா போய்ச் சேர்ந்தாள். இவளுக்கு ரெண்டு பிள்ளைகளைக் கொடுத்துட்டு கட்டினவனும் போய்ச்சேர்ந்தான்! ஆனால், இருக்கிற மாமியார்க்காரி கொஞ்சம் நல்லவள். அவள் அடிக்கடி ஒடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கற அலமுவுக்கு ஆறுதல் சொல்வாள்.
“யாருக்குப் பிரச்னை இல்லைனு நெனைக்கறே? அந்த பரமசிவன் பார்வதிக்குமே பிரச்னை இருந்ததுதானே? உனக்கொன்னு சொன்னாப் புரியும்னு நெனைக்கிறேன். ஒரு சின்ன கதைதான் அது, உனக்கு மன ஆறுதல் தரலாம்"னு சொல்லி, ஒரு கதை சொன்னாள்…
“ஒரு ராஜாவுக்கு ஒரு குதிரை இருந்ததாம். பட்டத்துக் குதிரையான அதன் பாதங்களுக்கு தங்கத்தால லாடம் கட்டச் சொல்லி அரசன் ஆணையிட்டானாம். லாயத்துல குதிரை இருந்ததாலே அதில் ஒரு வண்டு இருந்தது! அது, தன் கால்களுக்கும் தங்கத்துல லாடம் போடச் சொல்லி, பொற்கொல்லர்ட்ட கேட்டுதாம்… அதைக் கேட்ட அவர், சிரிச்சுட்டே… ‘உனக்கு எதுக்கு தங்க லாடம்?!’னு கேட்டாராம். அதுக்கு அந்த வண்டு சொல்லிச்சாம் 'நானும் ராஜா ஆளுகைக்கு உட்பட்டுத்தானே இருக்கேன்? குதிரைக்கு மாதிரி எனக்கும் போட்டா என்னன்னு?' கேட்டுதாம்.
ஆனால், பொற்கொல்லர் போடலை. ராஜா சொல்லலையே?!ஆனா, அந்த வண்டு, தங்க லாடம் போடப்பட்ட குதிரையின் சேணத்துல பறந்து போய் உட்கார்ந்துட்டு, எல்லாருக்கும் கேக்கறா மாதிரி 'ராஜா குதிரைக்கு தங்க லாடம் போட்டது ஏன் தெரியுமா? நான் அதில சவாரி செய்யறனே அதுனாலதான்னு!' உரக்கச் சொல்லிச்சாம்.
நீ அவசரப்பட்டுட்டேன்னு ஆதங்கப்படாதே.!. உனக்கு அமைந்த வாழ்க்கை, தங்க லாடம் போடப் பட்ட குதிரைன்னும், அதுல நீ சவாரி செய்ய உட்கார்ந்த வண்டுன்னும் நெனைச்சு மனச தேத்திக்கோ…! வாழ்க்கைல வருத்தப்பட்டு கண்ணீர் சிந்துவதைவிட இருப்பதை நெனைச்சு பெருமைப்படுவது இழந்ததை எண்ணி வருத்தப்பட வைக்காது!” என்று கதை சொல்லி, தன் மருமகளை மனந்தேற்றினாள்.
தன் மாமியார் பெற்ற மகனையே இழந்திருந்தாலும், ரெண்டாந்தாரமா வாழ்க்கைப் பட்டு வந்தவளுக்கு மன ஆறுதல் தந்தது இழப்பை மறக்கடிக்க வைத்தது, ஏன்….? அந்த பெண்மணியின் அனுபவம் பொன்மனம் என்பதாலா?