

மேல் தட்டு மனிதர்களைக் தாண்டி, விளிம்பு நிலை மக்களின் சமையலறைகளில் ஒளிந்திருக்கும் பாரம்பரிய ருசிகள் எப்போதுமே தனித்துவமானவை. ஸ்ரீரங்கத்தில் சாமான்ய மக்களின் எளிய கைமணத்தில் உருவான ‘கதம்ப சாதம்’ எத்தகைய ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது? பாரம்பரிய நறுமணம் மாறாமல், எந்தவித பெரிய பக்குவமும் இல்லாமல் இந்த எளிய சோற்றை எப்படி சுவையாகத் தயாரிப்பது? வாருங்கள், நாவில் கரையும் அந்த கிராமத்து மணமிக்க சமையல் ரகசியத்தை இப்போதே தெரிந்து கொள்வோம்!
சமையல் என்பதில் மையலும் இருப்பதாலோ என்னவோ எனக்கு அந்த கலையில் கொஞ்சம் மையல் ஜாஸ்தி. எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரின் விசேஷங்களை சாமான்ய மக்களிடம் கேட்டு தெரிந்துகொள்வேன். மேல் தட்டு மனிதர்கள் பொது நீரோட்டத்தில் கலந்துவிடுவார்கள். ஆனால் விளிம்பு நிலை மனிதர்கள் தமது தனித்தன்மையை பாதுகாக்க போராடுவதை கண்டிருக்கிறேன். அவர்களிடம் அந்த ஊர் சாப்பாடு பற்றி கேட்டால் சில ‘ரெசிப்பி’களை சொல்வார்கள்.
ஸ்ரீரங்கத்தில் நான் விரிவுரையாளராக பணியாற்றிய போது காட்டு நரசிங்க பெருமாள் கோயிலின் பிரசாதமான அக்கார அடிசிலும் சாமான்யர்களின் கதம்ப சாதமும் என்னை மிகவும் கவர்ந்தது. அக்கார அடிசில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். அதற்கு நிறைய நெய் தேவை. அது நமக்கு கட்டுப்படியாகாது. கதமபச் சோறு அல்லது கதம்ப சாதம் பற்றி காண்போம். பச்சரிசியில் பொங்கினால் சாதம். புழுங்கல் அரிசியில் வடித்தால் சோறு. அங்கு உள்ளவர்கள் புழுங்கலரசி சோற்றையும் சாதம் என்று தான் சொல்வார்கள். எனக்கு அந்த சொல் மிகவும் அந்நியமாகத் தோன்றும். சோறு என்பதே செந்தமிழ் சொல்.
கதம்பச் சோறு செய்ய பெரிய பக்குவம் எல்லாம் தேவையில்லை. புதியவர்கள் கூட எளிதாக செய்யலாம். சோறை தனியாக வடித்து கொள்ள வேண்டும். அல்லது குக்கரில் வைத்து எடுத்து கொள்ளலாம். நாட்டு காய்கறிகளான கத்திரிக்காய், முருங்கைக்காய், பூசனிக்காய், புடலங்காய், வாழைக்காய், அவரைக்காய் போன்றவற்றை பொடியாக நறுக்காமல் பெரிய துண்டுகளாகவும் நறுக்காமல் முக்கால் அங்குல அளவுக்கு நறுக்கி கழுவி வைத்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும். காய் ஒரு கால் கிலோ இருக்கும் என்றால் ஒரு சிறிய எலுமிச்சை சைஸ் அளவுக்கு புளியை எடுத்து அரிசி களைந்த தண்ணீரை வீணாக்காமல் அதில் ஊறப்போட்டு கரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
அரிசி களைந்த முதல் தண்ணீரை கீழே ஊற்றிவிடலாம். ஆனால் இரண்டாம் தண்ணீரை காய்கறி நறுக்கவும் மூன்றாம் தண்ணீரை பருப்பு வேகப் போடவும் வைத்துக்கொள்வது சாலச் சிறந்தது.
புளித்தண்ணீரை அடுப்பில் வைத்து நுரை கூடியதும் நறுக்கி வைத்த காய்கறிகளை அதில் போட்டு, மஞ்சள் தூள், சீரகத்தூள், மல்லித்தூள் (1:2:3 என்ற அளவில்) தேவைப்பட்டால் கொஞ்சம் மிளகாய் தூள் போட்டு வேக விடுங்கள். தண்ணீர் அதிகம் ஊற்றக் கூடாது. சரி தண்ணீரில் வேக வைக்க வேண்டும். கொஞ்சம் வெந்நீர் தனியாக முதலிலேயே எடுத்து வைத்துவிட்டால் தண்ணீர் பற்றாமல் போகும்போது ஊற்றிக்கொள்ளலாம்.
துவரம் பருப்பை தனியாக வேக வைத்து பருப்பு மலர்ந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பருப்பு வேகப் போட்டதும் சிறிது பெருங்காயம் போட்டு, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றினால் விரைவாக வெந்து மலர்ந்துவிடும்.
பொங்கி பொங்கி வந்து அடுப்பை அணைக்காது. இப்போது சோறு, பருப்பு, காய்கறி மூன்றும் வெந்து தயாரானதும் அவற்றை கலக்க வேண்டியது தான் பாக்கி. சோறை ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் போட்டு ஆறவிடுங்கள். அதன் மீது வெந்த பருப்பை பூத்தூவலாக கொட்டுங்கள். பின்பு வெந்த காய்கறிகளை கரண்டியால் எடுத்து ஆறிய சோற்றின் மீது மெதுவாக சுற்றிப் போடுங்கள்.
ஒரு அடுப்பில் கடுகு, உளுந்தம்பருப்பு கொஞ்சம் பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒன்றிரண்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை தாளித்து கொட்ட வேண்டும் (எண்ணெய் காய்ந்ததும் இந்த வரிசைப்படி ஒவ்வோன்றாக போட வேண்டும்) அத்துடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத் தூளை (மூன்றும் சேர்த்து ஒரு டீஸ்பூன் அளவு) நெய்யிலோ தேங்காய் எண்ணெயிலோ சிறு தீயில் லேசாக வறுத்து ஆறவிட்டு சோற்றில் கொட்ட வேண்டும்.
இப்போது லேசாக கரண்டி காம்பால் ஒரு முறை கிளறிவிடுங்கள். தென்னை விசிறி இருந்தால் அந்த விசிறி கம்பால் கிளறிவிடுவது இன்னும் சிலாக்கியம். நெய் விடுகிறவர்கள் விடலாம். கொஞ்சம் ஆற விட்டு பின்பு பரிமாறினால் புளிப்பு காரம் சோற்றுடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், ஹோட்டல் சுவையை மிஞ்சும் வகையில் பாரம்பரியமான மணமும் சுவையும் நிறைந்த கதம்ப சாதத்தை உங்கள் வீட்டிலேயே மிகக் குறைந்த பொருள்களைக் கொண்டு எளிதாக தயார் செய்து குடும்பத்தினரை அசத்தலாம்.