

இது ஒரு பெண் இந்திய ராணுவத்தில் சேர்ந்த சாதாரண செய்தி அல்ல. முன்பு 10 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றிய ஒரு பெண் விமானி, தன் கணவர் விமான விபத்தில் உயிரிழந்த பின்னர் ‘வீரப் பெண்மணியாக மீண்டும் விமானப் படையில் சேருவதற்காக நடத்திய நீண்ட சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி குறித்த செய்தி.
உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய அதிரடி தீர்ப்பு, ஏற்கனவே இருந்த விதிமுறைகளில் உள்ள ஒரு இடைவெளியையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளதுடன், ஒரு வீரப் பெண்மணிக்கு நியாயம் கிடைக்க வழி செய்துள்ளது.
ஸ்குவாட்ரன் லீடர் பிரியங்கா சக்சேனாவின் வாழ்க்கையில் நடந்த இந்தத் திருப்பம், தனிப்பட்ட துயரத்தின் கதை மட்டுமல்ல; ராணுவத்தில் பெண்களின் சேவை, விதிமுறைகளின் வரம்பு, மறுவாழ்வு கொள்கை ஆகியவற்றைப் பற்றிய முக்கியமான சட்ட விவாதமாகவும் மாறியுள்ளது.
விமானப்படையில் முதல் அத்தியாயம்:
பிரியங்கா சக்சேனா 2002 ஜனவரியில் ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் பயிற்சியில் சேர்ந்தார். 2003 டிசம்பர் 20 அன்று இந்திய விமானப்படையில் குறுகிய கால கமிஷண்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விமானப்படையின் 41 பிரிவில் தன் சேவையைத் துவக்கினார். இவர் தனது பணிக்காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக சிறப்பு சான்றிதழ் பெற்றவர்.
2006 நவம்பர் 13 அன்று அவர் இந்திய விமானப்படையில் ஃபைட்டர் பைலட் ஆக இருந்த விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹாவைத் திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா தனது பணியில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்தபோது, நிரந்தரப் பணிக்கோ அல்லது சேவை நீட்டிப்புக்கோ விண்ணப்பிக்காமல், 2013-ல் விமானப்படையை விட்டு வெளியேறினார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள்.
அந்த நேரத்தில், இது ஒருநாள் மீண்டும் அவரை விமானப்படையின் கதவைத் தட்ட வைக்கும் என்று அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
வாழ்க்கையை மாற்றிய அந்த விமான விபத்து:
2021 டிசம்பர் 24 அன்று ஜெய்சால்மர் விமானத் தளத்திற்கு அருகே ஒரு மிக்21 பைசன் ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தில் இருந்த விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார். கணவரின் மரணத்துக்குப் பிறகு பிரியங்காவின் வாழ்க்கையே மாறியது.
தான் ஏற்கெனவே பத்து ஆண்டுகள் விமானப்படையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதையும், இப்போது இரண்டு குழந்தைகளின் தாயாக இருப்பதையும் கருத்தில் கொண்டு, மீண்டும் விமானப்படையில் சேர அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
“நான் ஏற்கெனவே பயிற்சி பெற்ற அதிகாரி”
இதுதான் அவரது சட்டப் போராட்டத்தின் மையக் கருத்து. பொதுவாக ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ராணுவத்தில் சில மறுவாழ்வு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 2017 நவம்பர் கொள்கையின்படி, தகுதியுடைய ராணுவத்தினரின் விதவைகளுக்கு சில சூழ்நிலைகளில் அதிகபட்சம் 35 வயது வரை வயது தளர்வு வழங்கும் நடைமுறை இருந்தது.
ஆனால் பிரியங்காவின் நிலைமை வேறுபட்டது. அவர் சாதாரணமாக கல்வித் தகுதியின் அடிப்படையில் ராணுவத்தில் புதிதாகச் சேர விரும்பும் ஒரு விதவை அல்ல. அவர் ஏற்கெனவே பத்து ஆண்டுகள் விமானப்படையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். இதனால், “முன்னாள் பயிற்சி பெற்ற பெண் அதிகாரி + விமானப்படை அதிகாரியின் விதவை” என்ற தனிப்பட்ட பிரிவுக்கு விதிமுறைகளில் தெளிவான இடம் இல்லை.
விமானப்படை மறுத்தது:
பிரியங்காவின் கோரிக்கையை அரசு மற்றும் விமானப் படை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது வயதும் தடையாக இருந்தது. ஏற்கெனவே இருந்த கொள்கையின் 35 வயது என்ற வரம்பை அவர் கடந்திருந்தார். மேலும், அவர் தனது குறுகிய காலப் பணியை முடித்துவிட்டு தன்னிச்சையாகச் சேவையிலிருந்து வெளியேறியிருந்ததால், மீண்டும் அதே அடிப்படையில் பணியில் சேர உரிமை கோர முடியாது என்று அரசுத் தரப்பு வாதிட்டது. மேலும் அரசு தரப்பு, கருணை அடிப்படையில் யாருக்கும் அரசு வேலை அல்லது ராணுவப் பதவி உரிமையாகக் கிடையாது எனவும் மறுத்தது.
ராணுவ தீர்ப்பாயத்தில் முதல் போராட்டம்:
விமானப்படையின் மறுப்புக்குப் பிறகு பிரியங்கா ராணுவ தீர்ப்பாயத்தை அணுகினார். “என்னை மீண்டும் விமானப்படை வேலைக்கு எடுத்துக்கொள்ளுங்கள்” என்பது மட்டுமில்லாமல், முன்பு 10 அல்லது 14 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றிவிட்டு பின்னர் ராணுவத்தினரின் விதவைகளாக மாறும் பெண்களுக்கு மீண்டும் சேவைக்குத் திரும்பும் வகையில் ஒரு கொள்கை உருவாக்க வேண்டும் என்பதும் அவரது வாதத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. அங்கும் அவருக்கு நிவாரணம் கிடைக்காத சூழலில் அவர் உச்ச நீதி மன்றத்தை நாடினார்.
உச்சநீதிமன்றத்தில் திருப்பம்:
இந்த வழக்கின் மிக முக்கியமான திருப்பம் 2026 செப்டம்பரில் ஏற்பட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு,
பிரியங்காவின் வழக்கு “மிகவும் தனித்துவமானது” என்று குறிப்பிட்டது. அவர் ஒரே நேரத்தில் முன்னாள் விமானப்படை அதிகாரி, விமானப்படை அதிகாரியின் விதவை என இரண்டு தகுதிகளைப் பெற்றிருக்கிறார். இந்த இரு நிலைகளையும் ஒன்றாகக் கொண்டவர்களைப் பற்றிய தெளிவான கொள்கை ஏற்கெனவே இல்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், அவருக்கு இரண்டு பள்ளி வயது மகள்கள் இருப்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.
சட்டப்பிரிவு 142 – முக்கியமான சட்ட ஆயுதம்:
இந்த வழக்கில் மிகவும் முக்கியமான சட்ட அம்சம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142 ஆகும். இச்சட்டப்பிரிவு, ஒரு வழக்கில் “முழுமையான நீதி” கிடைக்கத் தேவையான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க அனுமதிக்கிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திய உச்சநீதிமன்றம், பிரியங்கா சக்சேனாவை மீண்டும் விமானப்படையில் சேர்க்க உத்தரவிட்டது.
ஆனால் இங்கே ஒரு முக்கியமான நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்தது. இந்தத் தீர்ப்பு ஒரு தனிப்பட்ட வழக்குக்கான ஒருமுறை நிவாரணம் மட்டுமே; இதை எதிர்கால வழக்குகளுக்கான பொதுவான முன்னுதாரணமாகக் கருதக்கூடாது என்று தெளிவுபடுத்தியது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பிரியங்கா சாக்சனா ஒரு ஆண்டு கால புத்தாக்கப்பயிற்சி முடித்துவிட்டு, அதற்குப் பிறகு கட்டாய மருத்துவத் தகுதிகளையும் பூர்த்தி செய்ய பின் மீண்டும் இந்திய விமானப் படையின் ஸ்குவாட்ரன் லீடர் பிரியங்கா சாக்சனாவாக மீண்டும் வானில் பறப்பார்.