

சேதுராமன் ஒரு வங்கி ஊழியர். அவருக்கு ஒரு மகன். வெங்கடேஷ். சுட்டிப்பயல். சேதுராமன் இப்போது இரண்டு ஆண்டுகளாக வேலைக்குப் போவதில்லை. ‘லாஸ் ஆஃப் பே’யில் விடுப்பு எடுத்துவிட்டார்.
அவர் இப்போது ஒரு மனநோயாளி. டாக்டரிடம் சென்று மருந்துகள் வாங்கியும் அவற்றை சரிப்பட சாப்பிடுவது இல்லை.
அவர் வாழும் காரணம், தான் உயிருக்கு உயிராக நேசித்த லட்சுமி இரண்டு வருடங்களுக்கு முன் வெளியே ஸ்கூட்டரில் போகும்போது ஒரு லாரி பின்னால் வந்த மோதியது. அவர் ஹெல்மெட் போட்டு இருந்தும் பயன் இல்லை. தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சேதுராமனுக்கு தாங்க முடியவில்லை. அவர் அவ்வளவு நேசித்த லட்சுமி ஒரே நொடியில் இறந்தது அவரை மிகவும் பாதித்தது.
எதிலும் ஆர்வம் இல்லை. அவர் வாழ்வது வெங்கடேஷூக்காகத்தான்.
இவர் வசிப்பது போரூர் அருகே உள்ள சபரி நகரில்தான். இன்று அவர் பக்கத்து வீட்டுக்கு ஒரு நடுத்தர வயது பெண் வந்திருந்தாள். அவர் பெயர் கீதா.
கதவின் பூட்டை திறக்க முடியவில்லை. துணைக்கு பக்கத்து வீட்டு வெங்கடேஷ் வந்தான். அவனாலும் முடியவில்லை. ஒரு சுத்தி எடுத்து வந்து பூட்டை உடைத்தான். சுமார் 20 வருடங்களாக காலியாக இருந்த வீடு. ஒரே தூசி மயம்.
அது கீதா அப்பா வீடு. இப்போது அவர் இல்லை. கீதா தபால் துறையில் பெரிய பொறுப்பு பெற்று இருந்த ஆபிசர். இப்போதுதான் சபரிநகர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்ட்டராக வந்துவிட்டார்.
அவர் கதவை திறக்க உள்ளே தூசி படிந்த கடிதம். தேதி பார்த்தார். தனக்கு வந்த காதல் கடிதம். ஆம்.. பழைய கதை எல்லாம் ஞாபகம் வந்தது.
சேதுராமன் வீட்டில் நுழைந்தவுடன் வெங்கடேஷனுடைய தந்தையைப் பார்த்ததும் கீதாவிற்கு அதிர்ச்சி. பேரிடி. கீதா சேதுராமனை அடையாளம் கண்டுவிட்டார். ஆனால் சேதுராமனுக்கு எதுவும் நினைக்க முடியவில்லை.
சரியாக 20 வருடங்களுக்கு முன்….
சேதுவும், கீதாவும் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் ஒன்றாக கணிதம் படித்தார்கள். பாடங்கள் சந்தேகங்களைத் தவிர ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டார்கள். சில மாதங்களில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. கல்லூரி புல்வெளியில் அமர்ந்து இருவரும் உணவை ஷேர் செய்து சாப்பிடுவார்கள்.
ஊட்டியில் கீதாவின் பெரியப்பா இருந்தார். அவர் வீட்டில் இருந்துதான் கீதா படித்தார். அப்பா சென்னை சபரி நகரில் இருந்தார்.
சேது-கீதா காதல் கல்லூரியில் எல்லோருக்கும் தெரியும். கல்லூரி மட்டும் அல்ல. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா என்று இரண்டு பேரும் ஊட்டியில் வலம் வந்து காதலித்தார்கள். அவர்கள் காதல் ஆழமானது.
இப்போதும் கீதாவிற்கு எல்லாம் ஞாபகம் இருந்தது. ஆனால், சேதுவுக்கு எதுவும் ஞாபகம் இல்லை. கீதா, வெங்கடேஷ் மூலம் சேதுவின் துயரம் பற்றி அறிந்தார். எனவே, ஒரு திட்டம் போட்டார். வெங்கடேஷ் மூலம் சேதுவை ஒரு 5 நாட்களுக்கு ஊட்டிக்குச் செல்ல சம்மதிக்க வைத்தார்.
சேதுவுக்கு டிமினிஷியா (ஞாபக மறதி) வந்துள்ளதை புரிந்துகொண்டு அவரைக் குணப்படுத்த ஊட்டிக்கு அழைத்துச் சென்றார்.
அதே கல்லூரிக்கு போய் புல்வெளியில் சேதுவிடம் “சேது சாப்பிடலாமா..?” எனக் கேட்டார். சேதுவுக்கு ஷாக்…! தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா என்று எல்லாம் சுற்றினார்கள். சேது - வெங்கடேஷை கீதா நன்கு கவனித்துக்கொண்டார்.
ஊட்டி வந்ததில் இருந்து சேதுவுக்கு மீண்டும் பழைய நினைவுகள் வந்தன. 5 நாட்கள் முடிந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் ஏறி அமர்ந்தனர். அப்போது சேது “நீங்க கீதாதானே..?” என்று கேட்க... கீதா அழுதார்.
சேதுவுக்கு முழுமையாக ஞாபகம் வந்தது.
இரண்டாம் வசந்தம் துவங்கிவிட்டது…!