

“நீ கொஞ்சம் சொல்லித் திருத்தக்கூடாதா மாப்பிள்ளைகிட்ட. எந்நேரமும் ‘ப்ரியா,.. ப்ரியா... ப்ரியா...’ உடம்பு என்ன ஆகும். சொல்லு” என்று மகள் சௌம்யாவிடம் சத்தம் போட்டு சொல்லிக்கொண்டிருந்தாள் மைதிலி.
“மீதி பேர் சொல்லி என்னிக்குக் கேட்டிருக்கார் உன்னோட மாப்பிள்ளை. பட்டாத்தான் தெரியும்” என்றாள் சௌம்யா.
“உனக்கு அவரை உன்னோட பிடிக்குள்ள வைச்சிக்கத் தெரியலை. கடைசியில அவர் மட்டுமில்ல நீயும்தான் கஷ்டப்படப் போறே. உங்களை என்னால புரிஞ்சிக்க முடியலை…” என்று அலுத்துக்கொண்டாள் மைதிலி.
வீடு பெருக்கிக்கொண்டிருந்த அஞ்சலைக்குப் பாம்புச் செவி. பேசியது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாள். ‘இப்படியொரு விஷயம் இருக்கா? கார்த்திக் சாருக்கு ப்ரியா அப்படிங்கிற பெண்ணொட தொடர்பு. யார் அந்தப் ப்ரியா?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
அஞ்சலை ஒரு நடமாடும் ரேடியோ பெட்டி. அவள் வேலை செய்யும் வீடுகளில் கிடைக்கும் கிசுகிசுக்களைப் பாரபட்சம் இல்லாமல் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வாள். ‘நான் கேட்ட கிசுகிசு பெறுக இவ்வையகம்’ என்பது அவள் தாரக மந்திரம். அவளின் கிசுகிசுக்களைக் கேட்க 40 குடும்பங்கள் கொண்ட அந்தக் குடியிருப்பில் சில வேலைக்காரிகளும், அங்கு வசிக்கும் பல பெண்களும் ஆவலோடு காத்துக்கொண்டிருப்பார்கள்.
வீட்டு வேலையைச் சீக்கிரமே முடித்து, இந்தச் செய்தியை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளத் துடித்துக்கொண்டிருந்தாள் அஞ்சலை. “கார்த்திக் சாரை ரொம்ப நல்லவர்ன்னு நினைச்சேன். அவருக்கு ஒரு பெண்ணோட தொடர்பா? இதை ஏன் சௌம்யா தட்டிக் கேட்காம இருக்காங்க? பெரிய இடத்து விஷயமே புரியறதில்லை” என்று நினைத்துக்கொண்டாள்.
சௌம்யா வீட்டில் வேலை முடிந்தவுடன் அவளுடைய சிநேகிதி கலாவைப் பார்க்க விரைந்தாள் அஞ்சலை. கலாவும் அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் வேலை செய்பவள். சில வீடுகளில் வேலை செய்வது தவிர, மொட்டை மாடி மற்றும் மாடிப்படிகளைப் பெருக்குவது, வாசலைப் பெருக்கி கோலம் போடுவது ஆகிய வேலைகளைச் செய்பவள். அதனால், அவளுக்கு அந்தக் குடியிருப்பில் எல்லோரையும் தெரியும். தனக்குக் கிடைக்கும் கிசுகிசுக்களைக் குடியிருப்பின் காவல்காரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் மகத்தான பணியையும் செய்து கொண்டிருந்தாள் கலா.
அஞ்சலையைப் பார்த்தவுடனே, இன்று நல்ல கிசுகிசு கிடைத்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள் கலா. “கலா, நான் சொன்னா நீ நம்பமாட்டே. கார்த்திக் சாருக்கு ப்ரியா அப்படின்னு ஒரு பெண்ணோட தொடர்பு இருக்காம்,” என்றாள் அஞ்சலை.
“கார்த்திக் சாரா, நிஜமாவா சொல்ற. அவர் அப்படிப்பட்டவர் இல்லையே,” என்றாள் கலா.
“சௌம்யா அம்மா, அவங்க அம்மாவோட இதைப்பத்தி பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கும் எல்லா விஷயமும் தெரியும்” என்றாள் அஞ்சலை.
“இந்தக் காலத்தில யாரை நம்பறதுன்னு தெரியலை. ‘அந்த ப்ரியா’ யாருன்னு தெரிஞ்சுதா?” என்று ஆர்வமாகக் கேட்டாள் கலா.
“தெரியலை, அது யாருன்னு கண்டுபிடிக்கணும்” என்றாள் அஞ்சலை.
கலா யோசிக்க ஆரம்பித்தாள். “நம்ம குடியிருப்பில மூனு ப்ரியா. ஒன்னு பல்லு போன பாட்டி. சந்திரா அம்மாவோட 5 வயசு குழந்தை பேரு ப்ரியா. பத்தாம் நம்பர் வீட்டிலே இருந்த ப்ரியா வீட்டைப் பூட்டி வைச்சு அமெரிக்கா போய் ஒரு வருஷமாச்சு. அதனால, நம்ம குடியிருப்பில யாருமில்லை” என்றாள்.
“கார்த்திக் ஐயா ஆபிஸ்ல ப்ரியான்னு இருக்காங்களா, தெரியுமா” என்று கேட்டாள் அஞ்சலை.
“நம்ம வாட்ச்மேன் முனுசாமி சம்சாரம் கவிதா கார்த்திக் ஐயா ஆபிஸ்லதான் வேலை செய்றா. அவளைக் கேட்டுக் கண்டுபிடிச்சுடலாம்” என்றாள் கலா.
அடுத்த நாளே துப்பறிந்து விடை கண்டுபிடித்த சந்தோஷத்தில் வந்தாள் கலா. “அஞ்சலை, ப்ரியா யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன். கார்த்திக் சார் ஆபிஸ்ல திவாகர்ன்னு ஒருத்தர் வேலை செய்றார்.
அவங்க சம்சாரம் பேரு ப்ரியா. கார்த்திக், திவாகர் இரண்டு பேரும் ரொம்ப ஃப்ரெண்ட்ஸ் அப்படின்னு சொன்னாங்க.”
“ஆமாம், திவாகர் அவங்க சம்சாரம் ரெண்டு பேரும் கார்த்திக் சார் வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க. அந்த அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. அதனாலதான் கார்த்திக் சார் இப்படி அவங்க மேலே பைத்தியமா இருக்காரா?” என்றாள் அஞ்சலை.
இதற்குள் இந்த வதந்தி அரசல் புரசலாக திவாகர் காதில் விழுந்தது. கார்த்திக், திவாகர் வீட்டிற்கு அடிக்கடி வருவதுண்டு. கார்த்திக், ப்ரியா இருவருமே நிறைய புத்தகங்கள் வாசிப்பவர்கள். ஆகவே, கார்த்திக் வந்தால் ப்ரியா அவனிடம் நிறைய பேசுவாள். அவனுக்கு அவன் மனைவி மேலும், கார்த்திக் மேலும் நல்ல நம்பிக்கை உண்டு. இந்த வதந்தியைப் பற்றி மனைவியுடன் மனம் விட்டுப் பேசினான் திவாகர். விசாரித்துப் பார்த்ததில் கார்த்திக் வீட்டு வேலைக்காரி மூலம்தான் இந்த வதந்தி வந்ததாக கவிதா கூறினாள். ஒரு வேளை கார்த்திக்கின் மனைவி சௌம்யா ஏதேனும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். ஆகவே இருவரும் கார்த்திக் வீட்டிற்குச் சென்று கணவன், மனைவி இருவரிடமும் மனம் விட்டுப் பேசுவது என்று முடிவு செய்தார்கள்.
திவாகர், ப்ரியாவுடன் கார்த்திக் வீட்டிற்குச் சென்றான். சௌம்யா கலகலப்பாகப் பழகுபவள். வழக்கம்போல உற்சாகத்துடன் அவர்களை வரவேற்றாள் சௌம்யா. ப்ரியா தயங்கியபடியே இந்த வதந்தியைப் பற்றி சௌம்யாவுடன் சொல்லி, அதைப்போல எதுவுமில்லை என்றாள்.
சௌம்யா, “என் கணவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் ஒருபோதும் உங்களையும் என் கணவரையும் சந்தேகப்பட்டதில்லை. அப்படியிருக்க, யார் இந்த வதந்தியைக் கிளப்பியது?” என்று கேட்டாள்.
இந்த வதந்தி ஆரம்பித்தது அஞ்சலையிடமிருந்து என்று தெரிந்தவுடன் அஞ்சலியைக் கூப்பிட்டாள் சௌம்யா. “என்ன அஞ்சலை, எதுக்கு இப்படி ஐயாவைப் பத்தி வதந்தி கிளப்பி விட்டிருக்க” என்று கோபமாகக் கேட்டாள் சௌம்யா.
“நானா எங்கம்மா சொன்னேன்... உங்க அம்மா உங்ககிட்ட கேட்டாங்க. நீங்களும் ஒத்துக்கிட்டீங்க” என்றாள் அஞ்சலை.
“என்ன அஞ்சலை, மாப்பிள்ளைப் பத்தி நான் சொன்னேன்னு பொய் சொல்றே?” என்று கேட்டபடி வந்தாள் மைதிலி.
“மாப்பிள்ளை எந்நேரமும் ப்ரியா, ப்ரியான்னு இருக்காரே, நீ திருத்தக்கூடாதா அப்படின்னு நீங்க உங்க மகள்கிட்ட கேட்டீங்களே அம்மா” என்றாள் அஞ்சலை.
“நாசமாப் போச்சு. மாப்பிள்ளைக்கு மூனு வேளை, டிபன், சாப்பாட்டு எல்லாத்துக்கும் ஊறுகாய் வேணும். அவர் எப்போதும் ப்ரியா ஊறுகாய் வாங்குவார். ப்ரியா ஊறுகாய்ன்னு முழுசா சொல்லாம ப்ரியா அப்படின்னு சொன்னேன். ஊறுகாய் நிறைய சாப்பிட்டு அல்சர் வந்து அவஸ்தைப் படக்கூடாதுனு நினைச்சு சொன்னேன். அரையும், குறையுமா காதில வாங்கிண்டு இதை கிசுகிசுன்னு பரப்பியிருக்க நீ...” கடிந்து கொண்டாள் மைதிலி.
“என்னை மன்னிச்சிருங்கமா...” என்றாள் அஞ்சலை.
“அஞ்சலை. நீ பண்ணின இந்தக் காரியத்திற்கு உன்னை வேலையை விட்டு நிறுத்தலாம். நான் அதைப் பண்ண விரும்பலை. வேலை செய்யற இடத்தில அவங்க பேசறதைக் கேட்டு, தப்புத் தப்பா புரிஞ்சிக்கிட்டு, அதை கிசுகிசுவா மீதிப்பேர் கிட்ட சொல்றதனால குடும்பங்கள் பாதிக்கப்படும்னு நீ புரிஞ்சிக்கணும். இனிமேயானும், கிசுகிசு பரப்பறதை நிறுத்து” என்றாள் சௌம்யா.