

ஜெ. ஷீலா கிறிஸ்டி டீச்சருக்கு தூரத்து சொந்தம் என்பது பொடிக்கல் தெறித்துக் கண்ணில் விழுந்தமாதிரி நினைவுக்கு வந்து நடுக்கம் எடுத்தது. கையிலிருந்த ஸ்கேல் நழுவி விழுந்தது. அவள் அப்ப்ப்ப்படி அழுவாள் என்றோ என் ஆசிரியை உத்யோகம் அவ்வளவு சீக்கிரத்தில் முடிவுக்கு வந்து விடுமென்றோ எதிர்பார்த்திராத நான் சுற்றிலும் பார்த்து முழித்தேன். வகுப்பில் மறுபடி கசகசவென்று பேச்சு. இம்முறை என்னைக் குறித்தான கிண்டலும் கேலிப்பார்வைகளும்.
“ம். நல்லா மாட்னியா... பெரிய தமிழ்ப் புலவரா நீ.. க்ளாஸ் டீச்சர் கிட்டப் போய் சொல்லப் போறா ஷீலா. அந்த மணியடிக்கிற தண்டவாளத்துல கட்டித் தொங்கவுடப் போறாங்க பாத்துக்கோ. புட்டின்னா சொல்ற. உன் கண்ணு எப்டி இருக்குன்னு மொதல்ல பாருடி...” என்று எல்லாரும் சிறுத்த என் கண்ணைப் பார்த்துக் சிரித்த மாதிரி இருந்தது எனக்கு.