

“அக்கா, அக்கா... எழுந்திருங்க அக்கா… மணி, என்னாவுது தெரியுமா? இப்பவே பத்தாச்சு அக்கா. எழுந்திருங்க. ‘ப்ளீஸ் அக்கா..."
“ஏண்டி வனிதா, உனக்கு இவ்வளவு பொறாமையா? நீ எப்படி நம்ம அத்தையானே? ஏன்டி உனக்குத்தான் தெரியுமில்லே, நான் எவ்வளவு கஷ்டப்படுறேன் இந்த வீட்டுலேன்னு. நிம்மதியா தூங்க கூட விடமாட்டேங்கிறியே? ம்... அந்த அளவுக்கு பொறாமை.”
“அக்கா! கோவிச்சுக்காதீங்க. நான் யாரு? உங்க புருஷனோட, தம்பி பெண்டாட்டிதானே. நான் ஏன் உங்க மேல, பொறாமை படனும். அத்தை, மாமா, உங்க வீட்டுக்காரர், டூர் போயி ஒரு வாரமாச்சு. அந்த ஒரு வாரமும், நீங்க எழுந்துகிட்டது பத்து மணிக்குத்தான். நான்தான், விடியற்காலை எழுந்து, வீட்டு வாசல் கூட்டி, கோலம் போட்டு, உங்க மகனுக்கு தனியா, இட்லி கொடுத்து மதிய சாப்பாட்டுக்கு ஒரு கலவை சாதம் செய்தும், பள்ளி வேனிலே ஏற்றியும் விட்டேன். எங்க வீட்டுக்காரருக்கும் நமக்கும், தனி சமையல். அதையும் செய்துட்டேன், விசேஷமா."
“சரி இப்ப என்ன செய்யனும் நான்?”
“அக்கா, இந்த தூங்கற பழக்கம் நாளைக்கும் தொடர்ந்தா, ‘அய்யோ’ நினைக்கவே குலை நடுங்குது. அத்தையும், உங்க வீட்டுக்காரரும், அவ்வளவு கோபக்காரங்க. அடி, உதை, ஏன் கழுத்தை பிடித்து நெறித்தாலும் நெறிப்பாரு.
நான், வீட்ல இருந்து, வேலை பார்க்கிறேன்னு சொல்லி, ஒரு வாரம் பர்மிஷன் எடுத்துக்கிட்டு, உங்களுக்கு உதவி செய்தேன். நாளைக்கு, நானும் அலுவலகம் சென்றாகனும். இனியும் தூங்காதீங்க. ‘ஆபத்து’ ‘ஆபத்து'. சொல்லிட்டேன். ஆமாம், ‘டூர்’ போனவங்க மாலை ஐந்து மணிக்கு வந்துருவாங்க, எச்சரிக்கை” என்றாள் வனிதா.
மெல்ல எழுந்தாள். வனிதாவை கட்டி, முத்தம் கொடுத்தாள். "ஒரு பெண்ணா, இன்னொரு பெண்ணை, நீ எப்படி காப்பாத்தினே. நீதான் வனிதா மனிதாபிமானமுள்ள பெண். குடும்பத்தை புரிஞ்சிக்கிட்டு, என் வீட்டுக்காரர் டெம்பராமெண்டையும் நோட் செய்துட்டு, நம்ம அத்தை குணத்தையும் சரியா எடை போட்டு, எனக்கு ஐந்து நாள் உதவியும் செய்து, நாளைக்கு இப்படி நான் உறங்கக்கூடாதேன்னு எழுப்பினே பாரு, உன்னை எப்படி புகழறதுன்னே தெரியலே," என்றவள், அவளை கட்டி முத்தம் கொடுத்தாள்.
திடீரென ஆட்டோ நிற்கும் சத்தம். உடனே வாயிலில் ஓடினாள் வனிதா. "அக்கா... அக்கா... அத்தை வந்துட்டாங்க. உடனே ஏதாச்சும் செய்து முகம் கழுவி, பொட்டு வெச்சு, ரெடியாகுங்க."
உடனே ஓடினாள் பெரியவள். அவசரம் அவசரமாக, குளித்தாள். புடவை உடுத்தி, பொட்டு வெச்சு, வெளியே வரவும் ஆட்டோவில் இருந்து இறங்கினான் முதலில் பெரியவளின் புருஷன் 'கடுவன் காத்தவராயன்'."ஏன் வனிதா, எங்கே அந்த கழுதை." கோபத்துடன் கேட்டான் பெரியவள் புருஷன்.
அவள் ஓடிவந்தாள்.
“வாங்க, வாங்க. உங்களுக்குத்தான் இத்தனை நாழி ‘கந்தஷஷ்டி கவசமும்’, ‘வேல்மாறலும்’, படிச்சிட்டு இருந்தேன். அத்தைக்கு, அடிக்கடி வயிற்று பிரச்னை, ஏற்படும். டூர்ல, எந்த தொந்தரவும் வரக்கூடாதுன்னுதான் இத்தனை பிரார்த்தனையும். நல்லவேளை அத்தை வணங்கும் முருகன் காப்பாற்றி விட்டான் என்றவள், அத்தை கையை பிடித்து, மெல்லமாக அழைத்து செல்லவும், வனிதா, தன் மாமனார் கையை பிடித்து அழைத்து வர முசுட்டு பெரிய மவன் சற்று சாந்தமாக, உள்ளே வந்தான்.
பெரியவர், பேசவே மாட்டார். இந்த அம்மாவை கட்டிகிட்டதில் இருந்து பெரியவர் வாய் சாப்பாட்டுக்கு மட்டும் தான் திறக்கும்.
“ஏன்டி வனிதா! நீ ஏன், வீட்டுல இருக்கே? அலுவலகம் போக வேணாமா? சம்பளம் கட் செய்துர மாட்டாங்களா?" அத்தை, ஒரு அதிகாரத்துடன் கேட்டாள்.
“அத்தை, நான் நீங்க வருவீங்கன்னு விசேட பர்மிஷன் வாங்கி என் வார விடுமுறையை மாத்திக்கிட்டேன். அதனால சம்பளம் எல்லாம் கட் ஆகாது அத்தை.”
“ஏன்டி கழுதை, சாப்பாடு ரெடியா இருக்கா?" இது கடுவன் காத்தவராயன்.
"இருக்குங்க" - இது அவன் மனைவி
"சரி, இலையை போடு. பல இடம். நல்ல சாப்பாடே இல்லை. நாக்கே செத்து போச்சு ராஜாத்தி."
கோபக்கார புருஷன் இப்போதுதான் அவள் பெயரை சொல்லி கூப்பிட்டான். 'பாசம்' அல்ல 'பசி.' அவ்வளவுதான்.
“கவலை படாதீங்க. இலையில உட்காருங்க. நல்லா சாப்பிடுங்க” என்றதும், உடனே வனிதா இலையை போட்டாள்.
வரிசையாக, வனிதாவே பறிமாறினாள்.
'காய்ந்த மாடு கம்பில் ஏறுவது போல்' அணைவரும் ருசித்து ருசித்து உண்டனர்.
“அடியே பெரியவளே, எல்லாமே இந்த வனிதாதான் பரிமாறனுமா? நீ ரசத்தை எடுத்துவா. குடிக்கனும்டி. அவ்வளவு ருசியா இருக்கு. இதுவரைக்கும், நான் இந்த டேஸ்டில் ரசம் சாப்பிட்டதே இல்லியே!” என்றாள், அத்தை.
“அம்மா, ரசம் இப்ப குடிக்காதே. அடுத்து வரும்பாரு, ‘பாயசம்’. அடடா.. என்ன வாசம்! எவ்வளவு நெய்! எவ்வளவு முந்திரி! திராட்சை. ஆகா இதுமாதிரி நீ உன் வாழ்நாள்ல சாப்பிட்டே இருக்க முடியாது."
“இருக்கட்டும்டா மவனே. இந்த ஆண்டாளு ரசத்தையும் குடிப்பா. பாயசத்தையும் ஒரு பிடி பிடிப்பா” என்றதும், வனிதா சிரித்தே விட்டாள்.
“ஏம்மா வனிதா, இந்த உருளை பொறியல், அவியல், வெங்காய சாம்பார், ரசம், பாயசம் எல்லாம் உன் கை வண்ணம்தானா?"
உடனே திரும்பியபடி, அக்காவை பார்த்தாள்.
உள்ளிருந்த ராஜாத்தி, என்ன செய்வதென்று தெரியாமல், விழித்தாள்.
“அக்கா இங்க வாங்க. உங்களைத்தானே, இன்னும் சமையல் கட்டுல என்ன செய்திட்டு இருக்கீங்க. வாங்க. வந்து சொல்லுங்க. வனிதா அவசரப்படுத்தினாள்.”
“உனக்குத்தான் தெரியும். நீயே பக்குவமா சொல்லிடு” என்றாள் ராஜாத்தி.
“ஏன் வனிதா?"
“அண்ணா, அத்தனை சமையலும் அக்காதான். நான் இப்ப பரிமாறுகிறேன் இல்லியா. அத்தோடு சரி என்றதும் ‘கடுவன் காத்தவராயன்’ அசந்து போய் விட்டான். ஏன் இவ்வளவு ருசியா செய்துட்டு, ஒண்ணுமே செய்யாதமாதிரி, கிச்சனிலே ஒளிஞ்சிட்டு இருக்கே. வா புள்ள.
உனக்கு ஆசையா, பட்டு புடவை வாங்கி வந்திருக்கேன். இன்னும் பல பல உண்டு. வனிதா, நீ உனக்கு ஒண்ணும் இல்லியான்னு, நெனக்காதே. உனக்கும் உண்டு. ஆனா என் செல்லத்துக்கு கொஞ்சம் கூடத்தான். அதுதானம்மா இந்த குடும்பத்துல ஐந்து வருஷமா வாக்கப்பட்டு வந்ததில் இருந்து, உழைத்து, எங்களுக்கும் சாப்பாடு போட்டு, குடும்பத்தையும் கவனிச்சிகிட்டு, என்ன பாடு பட்டுட்டு இருக்கு,"
“வனிதா’ சிரித்தாள்.”
“ராசாத்தி அழுதாள்”.
‘கடுவன் காத்தவராயன்’ பாயசம் வரவும் தன் மனைவியின் கையை பிடித்து இழுத்து, "ஏன் இந்த அழுகை!. ஓ, இது ஆனந்த கண்ணீரா? இந்த ‘கடு கடு காத்தவராயனும்’ உன்னை புகழ்ந்திட்டேன்னு ஆனந்த கண்ணீராக்கும். இனிமே புள்ள, உனக்கு இது தொடர்ந்து கிட்டே இருக்கும்” என்றதும், அப்படியே ‘வனிதாவை கட்டி அணைத்தபடி, கிச்சனுக்கு சென்றாள், ராஜாத்தி.
“உம் பொண்டாட்டிக்கு வெட்கம்டா. நாங்க இருக்கோம்னு, உன்னைனு நெனச்சிக்கிட்டு வனிதாவை அந்த கட்டு கட்டி இழுத்துட்டு போறா பாருடா.”
எதுக்குமே வாய்திறக்காத, பெரியவர் ஊமை பரமசிவம், அன்றுதான் வாய் விட்டு, குலுங்கி குலுங்கி, சிரித்தார்.