

மாலை ஆறு மணி. வாசலில் பைக் வந்து நின்ற சத்தத்தைக் கேட்டதும், சமையலறையில் காபி போட்டுக் கொண்டிருந்த வித்யா, முகத்தில் வழிந்த வியர்வையைத் தன் முந்தானையால் துடைத்துக் கொண்டபின் ஹாலுக்கு வந்தாள்...
வித்யா ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் (Manager) பணிபுரிகிறாள். தன் திறமையால் அந்தப் பதவியை எட்டியவள்.
அவளுடைய கணவன் கார்த்தி, ஒரு ஐடி நிறுவனத்தில் திட்ட மேலாளர் (Project Manager). இருவருமே காலையில் எட்டு மணிக்கு ஒன்றாகத்தான் வீட்டை விட்டுப் புறப்படுவார்கள். ஆனால், மாலை வீடு திரும்பியதும் இருவரின் உலகமும் முற்றிலும் வேறாக மாறிவிடும்.
அன்று மாலை கார்த்தி வீட்டிற்குள் நுழைந்ததும் தன் அலுவலகப் பையை மேஜை மீது வீசிவிட்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்து ரிமோட்டை எடுத்து டிவியைத் திருப்பினான்.
"வித்யா... செம டயர்டா இருக்கு, ஒரு ஸ்ட்ராங் காபி" என்று அதிகாரமாகக் குரல் கொடுத்தான்.
வித்யா காபியைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். அவள் முகத்தில் இருந்த சோர்வைக் கார்த்தி கவனிக்கவில்லை.
காபியைக் குடித்து முடித்ததும், "ராத்திரிக்கு என்ன சமையல் வித்யா? பசிக்குது. அப்புறம் நாளைக்குக் காலைல சீக்கிரம் ஆபீஸ் போகணும். டிபன் கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணிடு" என்று அடுத்த கட்டளையைப் பிறப்பித்தான்.
காலையில் அவளும் கார்த்திக்கு இணையாகத்தான் வங்கிக்கு ஓடுகிறாள்; நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கையாண்டு, கணக்குகளைச் சரிபார்த்துவிட்டு அவளும் சோர்வாகத்தான் வந்திருக்கிறாள்.
ஆனால், வீட்டிற்கு வந்த அடுத்த வினாடி அவள் ஒரு இயந்திரமாக மாற வேண்டும் என்று கார்த்தி எதிர்பார்ப்பது அவளுக்குள் பெரும் வலியை ஏற்படுத்தியது.
அன்று இரவு சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தத்தோடு வித்யாவின் மௌனமான கண்ணீரும் கலந்தது. மறுநாள் காலையிலும் இதே அவசரம் தொடர்ந்தது.
அன்று சமையல் சற்று தாமதமாகவே, கார்த்தி கோபமடைந்தான். "என்ன வித்யா இது? ஒரு சமையல் கூட ஒழுங்கா செய்ய மாட்டியா? காலையில சீக்கிரம் எழுந்து இந்த வேலையை முடிக்க உனக்கு என்ன? உன்னை விட எங்க அம்மா எவ்வளவோ பரவாயில்லை..." என்று கத்தினான்.
வித்யா அன்று அமைதியாக இருக்கவில்லை. தன் கையில் இருந்த கரண்டியை அப்படியே மேஜை மீது வைத்தாள். "கார்த்தி, நான் உங்க வீட்டு வேலைக்காரியோ அல்லது சமையல்காரியோ இல்லை.
நான் என்ன உங்க அம்மா மாதிரி வீட்டில் இருந்துக்கொண்டு வீட்டு வேலை செய்யும் பெண்மணியா? நான் வீட்டு வேலை அத்துடன், ஆபீஸ் ஒர்க் செய்யறேன். நீங்க ஒங்க அம்மாவோடு என்னை கம்பேர் பண்றீங்க?
“மும்பை ஹைகோர்ட் போன வாரம் என்ன தீர்ப்பு கொடுத்திருக்காங்கன்னு பேப்பர்ல படிச்சீங்களா? மனைவி சமையல் செய்யலைன்னா அது கொடுமை இல்லை, அவ வேலைக்காரி இல்லைன்னு சொல்லியிருக்காங்க. நானும் உங்களைப் போலத்தான் காலையில எட்டு மணிக்கு ஆபீஸ் போறேன், உங்களை விடப் பொறுப்பான வேலையைப் பார்க்கிறேன்.
"ஆனா, வீட்டுக்கு வந்தா எல்லா வேலைகளையும் நான் மட்டும்தான் செய்யணும்கிறது என்ன நியாயம்? துன்பமும் உழைப்பும் பெண்களுக்கு மட்டுமேன்னு இருக்குற இந்தச் சிந்தனை மாறணும் கார்த்தி. நாம ரெண்டு பேரும் வேலைக்குச் போறப்போ, இந்த வீட்டு வேலைகளையும் நாம ஏன் பகிர்ந்து செய்யக் கூடாது?" என்று தீர்க்கமாகக் கேட்டாள்.
வித்யாவின் வார்த்தைகளில் இருந்த நியாயமும், அவளது கண்களில் இருந்த அழுத்தமும் கார்த்தியின் ஆணாதிக்கத் திமிரைச் சட்டென்று சுக்குநூறாக்கியது.
வித்யா கேட்பதில் இருக்கும் எதார்த்தத்தை அவன் உணர்ந்தான். தன் தவறை நினைத்து வெட்கித் தலைகுனிந்த கார்த்தி, மறுநாள் காலை மெதுவாகச் சமையலறைக்குள் நுழைந்தான்.
காய்கறி நறுக்கும் பலகையை எடுத்து, "வித்யா... என்னை மன்னிச்சிடு. இனிமே சமையல், வீடு கூட்டுறது எல்லாமே நாம ஒண்ணா சேர்ந்துதான் செய்யப் போறோம். நீ காய்கறி நறுக்கு, நான் பூரிக்கு மாவு பிசையுறேன்" என்று புன்னகையுடன் சொன்னான்.
அன்று அந்தச் சிறிய சமையலறையில், இருவரின் உழைப்பும் பகிர்ந்துகொள்ளப்பட்ட போது, அங்கு "அன்பும் சமத்துவமும்" கொண்ட ஒரு புதிய விடியல் பிறந்தது.