

வீட்டின் வாசலில் காரின் சத்தம் கேட்டதும், மாடிப்படியில் நின்றிருந்த மரகதம் தலை தூக்கிப் பார்த்தாள்.
வேதாவை மாதாந்திர பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மிருதுளா காரை எடுத்துக்கொண்டு வந்திருந்தாள். எட்டாம் மாத கர்ப்பம் என்பதால், வீட்டில் எல்லோரும் சற்றே கவனமாக இருந்தனர்.
“அண்ணி, ரெடியா?” என்று மிருதுளா குரல் கொடுக்க, உள்ளிருந்து மெதுவாக நடந்துவந்தாள் வேதா. வயிற்றைத் தாங்கிக்கொண்டு நடந்தாலும் முகத்தில் சிரிப்பு குறையவில்லை.
அந்த நேரத்தில் மற்றொரு கார் வந்து நின்றது. அதிலிருந்து சாவித்திரி இறங்கினார். உடன் பேத்தி சுமாவும் இருந்தாள்.
“என்னம்மா, செக்கப்புக்கா கிளம்பறீங்க?” என்று கேட்டார்.
“ஆமாம் பாட்டி… போயிட்டு வந்துடறோம்,” என்று வேதா சொல்ல, மிருதுளாவும் மரியாதையாகத் தலை அசைத்தாள்.
அவர்கள் கிளம்பிச் சென்றதும், சாவித்திரி உள்ளே வந்தவுடனேயே முகம் சுளித்துக்கொண்டார்.
“ஏம்மா மரகதம்… நீ செய்வது கொஞ்சம்கூட சரியில்ல. புள்ளத்தாச்சி புள்ளையை அந்தச் சின்னப்பொண்ணுகூட அனுப்பி வைச்சிருக்கியே! ஏதாவது ஆச்சுன்னா?”
மரகதம் சிரித்துக்கொண்டே, “அம்மா, மிருதுவுக்கு எல்லாம் தெரியும். கார் ஓட்டறதும், ஹாஸ்பிடல் விஷயமும் அவளுக்கு புதுசல்ல,” என்றாள்.
“அதான் பிரச்னை! இந்தக் காலத்து பொண்ணுங்க ரொம்ப தைரியமா சுற்றுறாங்க,” என்று முணுமுணுத்தார் பிற்போக்குவாதியான சாவித்திரி .
அதைக் கேட்ட மரகதத்தின் மாமியார் சிரித்தபடி அருகில் வந்து அமர்ந்தார்.
“வாங்க சம்பந்தி… எப்ப வந்தீங்க?” என்று பேச்சை மாற்றினார்.
ஆனால் சாவித்திரி விடவில்லை.
“நாம அவங்களை நம்பி இருக்கலாமா? நாளைக்கு ஏதாவது ஒண்ணுனா யாரு பதில் சொல்வது?”
அதற்குள் காபியுடன் வந்த மரகதம், “அம்மா, எங்க காலத்துக்கும் இப்போதுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கும்மா. இவங்ககிட்ட எதையும் சமாளிக்கிற பக்குவம் நெறைய இருக்கு,” என்று மெதுவாகச் சொன்னாள்.
மிருதுளா சாதாரணப் பெண் இல்லை. சொந்தமாக தொழில் நடத்தும் திறமையானவள். வேதாவுக்கும் அவளுக்கும் வயது வித்தியாசம் இரண்டு மாதம்தான். அதனால் அண்ணி–மருமகள் உறவைத் தாண்டி நல்ல நட்பு உருவாகி இருந்தது.
வேதா அவளை 'மிருது' என்றே அழைப்பாள். அருணும் அதில் தலையிட மாட்டான்.
“நீங்க ரெண்டு பேரும் போயிட்டு ஜாலியா வாங்க,” என்று சிரித்தபடி ஒதுங்கிக்கொள்வான்.
ஆனால் இவை எல்லாம் சாவித்திரிக்கு பிடிக்காது.
“பொம்பளப் புள்ள தனியா கார் ஓட்டிட்டு போகலாமா?”
“வீட்டுப் பொண்ணு அடக்க ஒடுக்கமா இருக்கணும்…” என்று எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்.
அவருக்கு அடிக்கடி மைக்ரேன் தலைவலி வரும். அதற்காகத்தான் சில நாட்கள் மகள் வீட்டிற்கு வந்திருந்தார்.
அன்று மாலை, மரகதம் உள்ளே சமையலில் இருந்தாள். மிருதுளா தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டிருந்தாள். முன்திண்ணையில் சாவித்திரி, சம்பந்தி அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
திடீரென்று சாவித்திரியின் முகம் வெளிறி தலை சுற்றி கீழே சரியப் போனார்.
“பாட்டி!” என்று ஓடிவந்த மிருதுளா அவரைத் தாங்கிப் பிடித்து, ஒரு நொடியும் யோசிக்காமல் காரின் கதவைத் திறந்து, அவரை உட்காரவைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாள்.
அங்கே ஸ்கேன், எக்ஸ்ரே என்று பரபரப்பு. சுமாவுக்கு தகவல் சொல்லிவிட்டு, தனியாக எல்லாவற்றையும் கவனித்தாள் மிருதுளா.
மருத்துவர் தலையில் சிறிய அறுவை சிகிச்சை தேவைப்படுமென்றார். அதற்கான அனுமதி, மருந்து, கட்டணம்—எதையும் கலங்காமல் செய்தாள்.
சுமா வரும்போது அறுவை சிகிச்சை முடிந்து, சாவித்திரி அறைக்குக் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்.
அடுத்த மூன்று நாட்களும், சுமாவும் மிருதுளாவும் மாறி மாறி அவருடன் இருந்தனர்.
அந்த சமயத்தில்தான் வேதாவிற்கு பிரசவவலி. குடும்பமே வேறு மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நிலை. அழகான பெண் குழந்தை பிறந்த செய்தி வந்தபோது, சாவித்திரி படுக்கையிலிருந்தபடியே கண் கலங்கினார்.
“எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்,” என்று மட்டும் சொன்னார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு வேதாவும் குழந்தையும் வீட்டிற்கு வந்தனர்.
வீட்டில் புதிய உயிரின் வாசம். குழந்தையின் சிணுங்கல். இரு பாட்டிகளும் சேர்ந்து வேதாவையும் குழந்தையையும் கவனித்தனர்.
அந்த வீட்டின் எல்லா பொறுப்புகளையும் மிருதுளாதான் பார்த்தாள். குழந்தைக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது முதல், வீட்டாரின் மருந்து வரை அவளே கவனித்தாள்.
சாவித்திரி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபிறகு, மிருதுளாவைப் பற்றிய அவரது பார்வை மெதுவாக மாற ஆரம்பித்தது. ஆனால், பழக்கப்பட்ட மனம் உடனே மாறிவிடுமா? சில நேரங்களில் பழைய எண்ணங்கள் மீண்டும் தலைதூக்கும். அதே சமயம், மிருதுளா எந்த எதிர்ப்பும் காட்டாமல் தனது பொறுப்புகளை அமைதியாகச் செய்துகொண்டே இருந்தாள்.
ஒருநாள் காலை, வேதாவின் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. இரவு முழுக்க தூங்காததால் வேதா சோர்ந்துபோய் இருந்தாள். மரகதமும் சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மிருதுளா மெதுவாக முதிகில் போட்டு தட்டிக் கொடுத்தாள். குழந்தை அவள் தோளில் அமைதியாகத் தூங்கியது.
அதை கதவோரமாக நின்று பார்த்த சாவித்திரிக்கு ஏனோ மனம் நெகிழ்ந்தது.
“இவ்வளவு வேலை பாத்துக்கிட்டு இந்தப் பொண்ணு முகம் சுளிக்கவே மாட்டேங்குது…” என்று உள்ளுக்குள் நினைத்தார்.
அன்று மாலை சுமா வந்திருந்தாள். வழக்கம்போல் மூவரும் சேர்ந்து சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசும் விதத்தை பார்த்த சாவித்திரிக்கு, தன் இளமைக்காலம் நினைவுக்கு வந்தது. அப்போது இப்படிப் பெண்கள் சுதந்திரமாக சிரித்துப் பேசவே முடியாது. பெரியவர்கள் முன்னால் தலைகுனிந்து நிற்பதே மரியாதை என்று கற்றுக் கொடுக்கப்பட்ட காலம்.
அவர் மெதுவாக வேதாவின் பாட்டியிடம் சொன்னார், “நம்ம காலத்துல பொண்ணுங்க மனசுல என்ன இருக்கு என்பத கேக்கறதுக்கே யாருக்கும் நேரமில்லைங்க…”
அவர் சிரித்தார்.
“அதான் இப்போ காலம் மாறி இருக்கு. இந்தப் பசங்க மனசை புரிஞ்சுக்கணும்.”
அந்த இரவு, மிருதுளா சாவித்திரிக்குத் தலைவலி மாத்திரை கொடுத்து தண்ணீர் கொடுத்தாள்.
“பாட்டி, டாக்டர் நேரத்துக்கு சாப்பிட சொன்னார்ல… மறக்காம எடுத்துக்கோங்க,” என்றாள் அக்கறையுடன்.
சாவித்திரி அவளை சில நொடிகள் பார்த்தார்.
“மிருது…” என்று முதன்முறையாக அன்பாக அழைத்தார்.
“என்ன பாட்டி?”
“அன்னக்கி … நான் விழுந்தப்போ பயமா இல்லையா உனக்கு?”
மிருதுளா சிரித்தாள்.
“அதுக்கெல்லாம் நேரமா இருந்தது பாட்டி? நம்ம கண் முன்னால ஒருத்தர் கஷ்டப்படுறாங்கன்னா உடனே என்ன செய்யணும்னுதான் தோணும்.”
அந்த பதில் சாவித்திரியின் மனதைத் தொட்டது.
அடுத்த நாள் காலை, வீட்டுக்கு வந்திருந்த அக்கம்பக்கத்து பெண்களிடம் சாவித்திரி பெருமையாகச் சொன்னார்.
“எங்க வீட்டுப் பொண்ணுங்க எல்லாம் ரொம்ப சாமர்த்தியசாலிங்க அருமையான பசங்க. கார் ஓட்டுறதுல இருந்தே வீட்டு பொறுப்பு வரை எல்லாத்தையும் பாத்துக்கறாங்க.”
அதைக் கேட்ட மரகதம் ஆச்சரியமாகப் பார்த்தாள். மிருதுளா சிரித்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.
சில மாற்றங்கள் வார்த்தைகளில் வராது. நடத்தைதான் அதை வெளிப்படுத்தும். அதன்பிறகு அன்றிலிருந்து சாவித்திரியின் புலம்பல் குறைந்து, மெதுவான கொஞ்சம் கொஞ்சமாக பாசம் எட்டிப் பார்த்தது..
அந்த வீட்டில் குழந்தை பிறந்தபின் வீடே குழந்தையின் சிரிப்பால் உயிர் பெற்று இருந்தது. காலையில் வேதாவின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மிருதுளா தோட்டத்தில் நடக்கச் செல்வாள்.
சுமா வந்துவிட்டால் இருவரும் சேர்ந்து குழந்தைகளுக்கான உடைகள், விளையாட்டு பொருட்கள் என்று இணையத்தில் பார்த்துக் கொண்டே சிரித்துப் பேசுவார்கள்.
அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த சாவித்திரிக்கு, “இன்றைய பெண்களின் வாழ்க்கை வறுபட்டதாகத் தோன்றியது. அவர்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டே, தங்களுடைய விருப்பங்களையும் விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால் அதனால் அவர்களுக்கான மரியாதை குறையவில்லை என்பதையும் அவர் மெதுவாக உணர ஆரம்பித்தார்.”
ஒருநாள் மிருதுளா வேலைக்காக வெளியே கிளம்பும்போது,
“மிருது… காரை மெதுவா ஓட்டு,” என்று சாவித்திரி சொல்லிக்கொண்டு இருந்தார்.
அதை கேட்ட மரகதமும் வேதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
அக்கறை வந்த இடத்தில் குறைகள் தானாகக் குறைந்துவிடுகின்றன.
ஒருநாள் வீட்டில் அன்றாட நிகழ்வுகளைப் பார்த்த சாவித்திரி மீண்டும் தொடங்கினார்.
“ஏன் மரகதம்… என் பேரனும் மாப்பிள்ளையும் குடும்பத்தைப் பாத்துக்க மாட்டாங்களா? ஏன் மிருதுவ பெரிய மனுஷி ஆக்கறே?”
அந்த நேரத்தில் அருகில் இருந்த வேதாவின் பாட்டி மெதுவாகச் சிரித்தார்.
“சம்பந்திம்மா… நம்ம காலம் வேற. இப்போ பசங்களுக்கு தெளிவு அதிகம். எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கறாங்க.”
சாவித்திரி அமைதியாக இருந்தார்.
“நம்ம அருணே சில விஷயங்களை மிருது கிட்ட பேசித்தான் முடிவெடுக்கறான். அதுல என்ன தவறு?”
அவர் மெதுவாகத் தொடர்ந்தார்.
“வாழ வந்த வீட்டுல, அவங்க வாழ வழி நாம அமைத்து கொடுக்கணும். குடும்ப விஷயத்துல கலந்துக்க உரிமை கொடுக்கணும். அப்பதான் அந்த வீடு அவர்களோட வீடுனு தோணும்.”
மரகதத்தை நோக்கி சிரித்தார்.
“மரகதம் கல்யாணம் ஆகி வந்தப்போதே, வீட்டுப் பொறுப்பெல்லாம் நான் ஒப்படைச்சுட்டேன். இப்ப அவளும் அதையே செய்றா.”
"அப்புறம் சம்பந்திம்மா, நம்ம காலத்தில் பெண்கள் தனியாக தெருமுனைக்குக்கூட செல்ல முடியாது. வீட்டின் ஆண்கள் எடுத்த முடிவுதான் இறுதி. ஆனால் இப்போது கணவன்–மனைவி இருவரும் சேர்ந்து ஆலோசித்து முடிவெடுக்கிறார்கள். ஒருவருக்கொருவர் துணையாக இருக்காங்க சம்பந்திம்மா… அதனால இப்ப பொண்ணுங்க எதையும் தைரியமா சமாளிக்கறாங்க. அவங்கள நாம வழி நடத்தினா மட்டும் போதும்.”
அவருக்குள் ஏதோ மாறத் தொடங்கியது.
‘நாம ஊருக்கு போனதும் கமலிக்கிட்ட பொறுப்பை ஒப்படைக்கணும்…’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.
காலம் மெதுவாக நகர்ந்தது.
சுமாவிற்கும் திருமணம் முடிந்து பெண் குழந்தை பிறந்தது. அதே சமயம் மிருதுளாவுக்கும் அழகான பெண் குழந்தை.
மூன்று குடும்பங்களும் சேர்ந்து சுவிட்சர்லாந்து சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.
விமான நிலையத்தில் மூன்று இளம் அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். சிரிப்பு, பரபரப்பு, புகைப்படங்கள்- எங்கும் உற்சாகம்.
சுமா ஓடிவந்து சாவித்திரியின் தோளை அணைத்துக்கொண்டாள்.
“எப்படி இருக்கு பாட்டி… எங்க புதுக் கூட்டணி?” என்று கேட்டாள்.
சாவித்திரி மூன்று குழந்தைகளையும் பார்த்தார். பிறகு மிருதுளாவை நோக்கி ஒரு நிமிடம் நீண்ட சிரிப்புடன்.
“போங்கப்பா… நீங்க சுத்துற இடமெல்லாம் என் கொள்ளுப் பேத்திகளுக்கும் காட்டுங்க. ஜாலியா போயிட்டு, எங்க பேரன்களையும் பத்திரமா கூட்டிட்டு வாங்க.”
அவரது முகத்தில் இழையோடியது புதிய தலைமுறையைப் புரிந்துகொண்ட பாசத்தின் சிரிப்பு.