

சுமதிக்கு இப்போது அறுபத்தி இரண்டு வயது.
வீட்டின் முன் வராண்டாவில் பழைய இரும்பு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். மாலை வெயில் சற்றே தணிந்திருந்தது. தெருவில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் சத்தமாக ஓடிக் கொண்டிருந்தனர். அவள் கையில் தேநீர் டம்ளர் இருந்தது. ஆனால் அது குளிர்ந்து போயிருந்தது.
“என்னம்மா… டீயை குடிக்கலையே?” என்று பக்கத்து வீட்டுக் கமலம் கேட்டாள்.
சுமதி மெதுவாக சிரித்தாள்.
“குடிக்கறதெல்லாம் மறந்து போயிடுது கமலம்… சில நினைவுகள் வந்தா…”
அவள் பார்வை வெறுமையாக தூரம் சென்றது.
"அப்படி என்னம்மா யோசனை உங்களுக்குள்ள?" என்று அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள் கமலா.
“உனக்கு தெரியுமா கமலம்… நான் சின்ன வயசுல இருந்து தங்க வளையலுக்கு ஆசைப்பட்டவள்டா…”
அவள் குரலில் ஒரு மென்மையான உடைச்சல் இருந்தது.
எழுபதுகளில் பிறந்த சுமதியின் வாழ்க்கை எப்போதுமே கணக்குப் புத்தகம்தான்.
அப்பாவும் அம்மாவும் மில்லில் வேலை. காலையில் போனால் இரவு தான் வீடு. வீட்டு வாசலில் அரிசி மூட்டையின் தூசி, உடம்பில் பருத்தி நார், முகத்தில் சோர்வு.
ஆனா அந்தச் சோர்வுக்குள்ள கூட பிள்ளைகளை கரையேற்றணும் என்ற பிடிவாதம் இருந்தது.
“சுமதியைக் கல்யாணம் பண்ணிட்டோம்னா அடுத்த பொண்ணை எப்படியாவது கரையேற்றிக்கலாம்…” என்று அவள் அம்மா அடிக்கடி சொல்வாள்.
சுமதிக்கு அப்போது இருபது வயசு கூட இருக்காது.
அவள் ஆசைகள் எல்லாம் பெரியதில்லை.
வருடத்துக்கு ஒரு புதுத்துணி. அது கூட தீபாவளிக்குத்தான். கண்ணாடி வளையல் வாங்கினால் இரண்டு மாதம் பார்த்துப் பார்த்து அணிவாள். உடைந்து போனால் மனசே உடைந்து போன மாதிரி இருக்கும்.
அதனால்தான் தங்க வளையல் மீது அவளுக்கு ஒரு அலாதியான ஆசை.
திருமணத்துக்கு அங்கும் இங்கும் கடன் வாங்கி பத்து சவரன் நகை போட்டார்கள். அதில் மூன்று சவரனில் இரண்டு வளையல்கள்.
அந்த வளையலை முதலில் கையில் போட்ட நாள் இன்னும் அவளுக்கு மறக்க முடியவில்லை.
அவள் கைகளை அவளே திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இது நம்ம கையா?” என்று மனசுக்குள்ளே கேட்டு கொண்டாள்.
திருமணம் முடிந்து முதல் முறையாக தாய் வீட்டுக்குப் போன போது அவள் அம்மா வளையலைப் பார்த்து கண்களைத் துடைத்துக் கொண்டே சொன்னாள்:
“சுமதி… நம்ம நிலைமைக்கு இதை தினமும் போடாதே. விசேசம் இருந்தா மட்டும் போடு. கவனமா வை.”
அந்த ஒரு வார்த்தை அவளின் வாழ்நாள் முழுக்க சட்டமாகி விட்டது.
புகுந்த வீடும் வசதி வாய்ந்தது இல்லை.
கணவன் ராஜா நல்லவன் தான். ஆனால் நல்லவனாக இருப்பது மட்டும் வாழ்க்கைக்கு போதுமா?
மில் சம்பளம் கடனுக்கு போகும். வீட்டு வாடகை, மருத்துவ செலவு, மின்சாரம்… ஒவ்வொரு மாதமும் மூச்சை நெரிக்கும்.
ஒரு வருடம் போகும் முன்னே நகைகள் அடகு கடைக்கு போயின.
“இது மட்டும் சீக்கிரம் மீட்டிடலாம்…” என்று ராஜா சொன்னான்.
ஆனால் அந்த “சீக்கிரம்” பதினைந்து வருடம் நீண்டது.
பேங்கில் நகையை வாங்கியதும் அது வீட்டிற்கு வரவே இல்லை.
நேராக வங்கியின் லாக்கருக்குள் போய், அப்படியே புதிய மினுக்கு மாறாமல் உறைந்து கிடக்கும்.
சில நிமிடங்கள் மட்டும் அதை எடுத்துப் பார்த்து மீண்டும் அதே குளிர்ந்த இரும்பு அறைக்குள் ஒப்படைத்து விடுவாள்.
சுமதியின் தங்க வளையல் வாழ்க்கையும் அப்படித்தான்—
வெளியே வந்து அவளின் கைகளில் சில கணங்கள் மட்டும் உயிர் பெற்று,
பிறகு தன் பழைய மினுக்கோடு வங்கியின் இருட்டில் மௌனமாக உறைந்து போகும்.பிறகு சுமதி ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்குப் போனாள்.
காலை ஐந்து மணிக்கு எழுந்து சமைத்து, பிள்ளைகளை பள்ளிக்குக் கிளப்பி, பேருந்து பிடித்து வேலைக்கு போவது. இரவு திரும்பும் போது கால்கள் எரியும்.
ஆனால் அவள் மனசில் ஒரே எண்ணம்.
“இந்த முறை வளையலை மீட்டிடணும்.”
சிறுகச் சிறுக சேமிப்பாள்.
ஆனா ஒவ்வொரு முறையும் வாழ்க்கை அவளை விட வேகமாக ஓடும்.
ஒரு வருடம் மகளுக்கு பள்ளி ஃபீஸ்.
மற்றொரு வருடம் மாமியாருக்கு ஆபரேஷன்.
பிறகு வீட்டுக்கடன்.
இறுதியில் சொந்த வீடு கட்டும் நேரம் வந்தது.
அன்று ராஜா மெதுவாக கேட்டான்.
“நகை விற்றுடலாமா சுமதி…? இல்லனா வீடு கட்ட முடியாது…”
சுமதி பேசவில்லை.
அன்று இரவு எல்லோரும் தூங்கிய பிறகு அவள் மட்டும் விளக்கை அணைக்காமல் உட்கார்ந்திருந்தாள். முன் மேசையில் அவளுடைய வளையல்கள்.
அவள் மெதுவாக அதைத் தொட்டாள்.
“நான் உன்னை போடவே இல்லையே…” என்று உயிருள்ள ஒன்றிடம் பேசுவது போல சொன்னாள்.
அடுத்த வாரமே அவை விற்கப்பட்டன.
ஆனால் சொந்த வீட்டு வாசலில் முதல் நாளாக கால்வைத்த போது அவள் சிரித்தாள். கண்களில் நீரும் இருந்தது.
காலம் மாறியது.
சுமதி வேலைக்குப் பதவி உயர்வு பெற்றாள். சம்பளம் உயர்ந்தது.
ஆனால் செலவுகளும் உயர்ந்தன.
சில நகைகள் மீண்டும் வாங்கப்பட்டன. ஆனால் அவை அலங்காரத்துக்கு இல்லை. அவசரத் தேவைக்கான சேமிப்பு.
மகளுக்கு முப்பது சவரன் போட்டு திருமணம் செய்தாள்.
பேத்திக்கு காதணி, செயின், வளையல் — எதைக் கண்டாலும் வாங்கிக் கொடுத்தாள்.
“பாட்டி, இவ்வளவு நகை எதுக்கு?” என்று பேத்தி கேட்டால் அவள் சிரிப்பாள்.
“போடு மா… பொண்ணு அழகா இருக்கணும்…”
மருமகளுக்கு வளைகாப்புக்கு மூன்று சவரன் வளையல் செய்து போட்ட நாளில் எல்லோரும் பாராட்டினார்கள்.
“சுமதி அக்கா ரொம்ப பெரிய மனசு…”
அவள் சிரித்தாள்.
ஆனால் அந்த வளையலை மருமகளின் கையில் போடும்போது ஒரு நொடி அவள் பார்வை தன் கவரிங் வளையல் அணிந்த கைகளைத் தொட்டது.
இன்று அவள் ஓய்வு பெற்றிருக்கிறாள்.
மாத சம்பள வாழ்க்கை முடிந்தது.
கையில் கிடைத்த தொகையை மகனிடம் கொடுத்துவிட்டு இப்போது அமைதியாக வாழ்கிறாள்.
ஆனால் இப்போது அவள் ரப்பர் வளையல் கூட அணிவதில்லை.
அலங்காரம் என்ற எண்ணமே அவளிடம் இருந்து விலகி விட்டது போலிருந்தது.
“ஏன் சுமதி? இப்போ வாங்கிக்கலாமே தங்க வளையல்…” என்று கமலம் மெதுவாக கேட்டாள்.
சுமதி நீண்ட நேரம் பேசவில்லை.
பிறகு தன் சுருங்கிய கைகளைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்:
“தெரியல கமலம்… இத்தனை வருஷம் வாழ்க்கை முழுக்க எல்லாருக்கும் போட்டுப் பார்த்தேன். எனக்காக மட்டும் எதையும் வாங்கிக் கொள்ள மனசு பழகவில்லை.”
அவள் கண்கள் கலங்கின.
இப்போ வாங்கினாலும்… அந்த ஆசை நிறைவேறுமா?
தங்க வளையல் வேண்டும்னு ஆசைப்பட்ட சுமதி… அந்தப் பொண்ணு எப்போவோ செத்துட்டாளே…”
வராண்டாவில் அமைதி விழுந்தது.
தெருவில் ஒரு சிறுமி கண்ணாடி வளையல் சிணுங்கச் சிணுங்க ஓடிப்போனாள்.
அந்த சத்தம் கேட்டவுடன் சுமதி தன்னறியாமல் திரும்பிப் பார்த்தாள்.
அவள் கண்களில் ஒரு கணம் பழைய ஒளி மின்னியது.
அடுத்த நொடி அது மறைந்துவிட்டது.