

"கலியுகம். முத்திப்போச்சுடி மீனு"
"எப்படி சொல்றே?"
"அதான், ‘லோ லோன்னு’ தெருதெருவா அலையறோமே. இதுகூடவா உனக்கு தெரியல."
"காமு, ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ. நாம உட்கார்ந்து சாப்பிட ஒண்ணும், நம்ம தாத்தா பாட்டி காலம் இல்ல. அவங்க புண்ணியவான்கள். ‘தினம் தினம்’ ‘மட்டன் சிக்கன்னு’ சாப்பிட்டு வளர்ந்தார்கள். அவர்கள் ஊட்டம் தான், நமக்கு இன்னிக்கும் இந்த அலையற, தெம்பை கொடுத்திருக்கு என்றது மீனு.
"இருந்தாலும், பாழும் ‘மனுஷனுக்கு’ இரக்கம் வேணாம். எங்கம்மாவே சொல்லியிருக்காங்க. ஒவ்வொரு வீட்டுலயும் இருக்கிற அம்மாக்கள் எல்லாம், ‘தோ தோ தோன்னு’ அழச்சு ஒரு சின்ன உருண்டை சோத்தை, நமக்கு போட்டு, தன் பிள்ளைகளுக்கு ஊட்டுவாங்களாம். இப்ப அப்படி எங்காச்சும் ‘தோ தோன்னு’ அழச்சு ஊட்டி பார்த்திருக்கியா நீ." காமு கோபத்துடன் பேசினாள்.
“என்னடி செய்யறது. எல்லாம் ஒரு அப்பன் ஆத்தா ஒரு பிள்ளைனு குடும்பத்தையே சுருக்கிட்டாங்க. அதோட, எல்லாரும் இப்ப அடுக்கு மாடி கட்டிடங்களில் வசிக்கிறாங்க. அவங்க கீழ வந்து 'தோ.. தோ.. தோன்னு அழச்சு சோறு போடுவாங்களா? கோபிக்காதே.. ஆண்டவன் நமக்கும் படி அளப்பான்டி. நம்புவோம்."
"போடி, ஆண்டவனாவது ஒண்ணாவது. எல்லாம் சுத்த வேஸ்ட். அதுக்கு, இந்த மக்கள் சொல்ற, ‘கெட்டபயபுள்ள’ சனியனே பெஸ்ட்."
"என்னடி சொல்றே?"
"ஆமான்டி. அவன் வாகனம் காக்காவுக்கு எப்படியோ மக்களால சோறு கெடச்சிடுது. ஆனா, நம்ம பைரவன் சுத்தமா சக்தி இல்லாத ஒரு ஆளு.nஅந்த ஆளுக்கு போயி நாம வாகனமா இருக்கோமே. ‘வெட்கம் வெட்கம்’."
"அந்த சாமி உசத்தி, இந்த சாமி உசத்தின்னு, மனுஷங்க தான் பேசி, அதுல வயித்தை, வளப்பாங்க. நாமெல்லாம் அப்படி பேசக்கூடாது" என்றாள் மீனு.
"ஆனாலும், என் மனசு அழத்தான் செய்யுது மீனு. ஏன் இந்த ஏ.ஐ?. எதுக்கு வொய் பை?. ஏன் மொபைல் போன்?. இதெல்லாம் வளர்ச்சி இல்ல. அழிவுக்கு மனுஷன் போட்ட பிள்ளையார் சுழி."
"அய்யோ.. இவ்வளவு விரக்தியா. டெக்னாலஜி வளர்ந்தா, நாட்டுக்கு நல்லதுதானே."
"யாருக்கு வேணும், ‘டெக்னாலஜி’ அந்த காலத்துல, ஒரு கல்யாணம்னா, அத்தனை பேர் சாப்பிட்ட சாப்பாட்டு இலைகளை எல்லாம், ரோடுல ஒரு ஓரத்துல வீசவாங்களாம். பல நாய்கள் ஒண்ணோடு ஒண்ணு சண்டை பிடிச்சாலும், அவ்வளவு சோறு கிடைக்குமாம். இந்த கூத்துல சில பிச்சைக்கார மனுஷங்களும், இருப்பாங்களாம். எங்க அம்மாதான் சொன்னாங்க. இப்ப ஏதோ ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில அடச்சி, எங்கயோ கொண்டு சேர்த்துடறானுங்க. அந்த சோறும் நமக்கு இல்லாம போச்சு."
“துவண்டு போகாதே. பைரவர் கைவிட மாட்டார். நம்பிக்கைதான் வாழ்வு. உன் முன்னோர்கள் அவ்வளவு உயர் ரகத்தை சார்ந்தவர்கள். வயதானதால், இனி பிரயோசனம் இல்லை என்று கருதிய, சுயநல மனிதன், நடுத்தெருவில் விட்டு போய்விட்டான். என் பெற்றோர்கள் கதையும் இதுதான். இப்போ நாம் நடுத்தெருவிலேயே பிறந்து, இங்கேயே பொழுதை கழிக்க வேண்டியிருக்கு. உன் ஆத்திரம் புரியுது. நீ நாளு நாள் பட்டினி. நான் மூன்று நாள் பட்டினி. அதான், உனக்கு கோபம் அதிகமா வர்றது" என்றதுமே காமு ஓடியது.
எங்க ஓடுது. மீனு பார்த்தது. அது பெரிய பங்களாவின் முன்தான் ஓடி நின்றது.
குரைத்தது. குரைத்தது. அந்த பங்களா ஓனர் மாடியில் இருக்கும் கதவை திறந்து வெளியே லைட் போடவும், காமு ஒரே பாய்ச்சலில் பாய்ந்து, அந்த பெரும் கேட்டை தாண்டி, கடுமையான உக்கிர சண்டை.
உடனே விவரம் புரிந்து கொண்ட முதலாளி, தீ அணைப்பு துறைக்கு போன் செய்தார்.
அவர்கள் வருவதற்குள், எல்லாம் முடிந்து விட்டது.
பத்தடி கொடிய விஷமுள்ள ராஜ நாகம் காமுவால் கொல்லப்பட்டது. ஆனாலும் சிறு சிறு பாம்பு கடிகளால்; விஷம் ஏற காமு மயங்கி விழுந்து விட்டது.
தீ அணைப்பு துறையினரின் அறிவுரை பேரில் உடனடியாக கால்நடை மருத்துவர் வரவழைக்கபட்டார். ‘விஷம் முறிக்கும்’ ஒரு ஊசி.
சற்று நாழியில் கண் திறந்த காமு, "அடியே மீனு.." என்று குரைத்தது.
வாசலில் இருந்த மீனுவும், பதிலுக்கு குரைத்தது.
அந்த பங்களா ஓனர், ஒரு சினிமா தயாரிப்பாளர். உடன் தான் எடுக்கும் படத்துக்கான இயக்குநருக்கு, போன் செய்து, "நம் கதைபடி நமக்கு வேண்டிய ‘புல் டாக் வகை நாய்’ கிடைத்து விட்டது. இதுக்கு பயிற்சி கொடுத்து நாம் நடிக்க வைக்கலாம்.
பத்தடி கேட்டை ஒரே தாவலில் தாவி கொடிய விஷமுள்ள ராஜ நாகத்தை கடுமையாக சண்டையிட்டு கொன்று விட்டது. அது மட்டும் அப்படி செய்யாதிருந்தால் அந்த நாகம் என் வீட்டில் எங்காவது புகுந்து யார் உயிருக்காவது நிச்சயம் ஆபத்து ஏற்பட்டிருக்கும்" என்றதும் இயக்குநரும் சம்மதித்தார்.
உடன், நாயின் தலையை தடவிக்கொடுத்து, வீட்டில் செய்திருந்த சிக்கன் பிரியாணியை கொடுத்து மகிழ்வித்தார். காமு கேட் போய் போய் குரைத்தது.
"ஓ.. இதன் தோழி வாயிலில் இருக்கிறாள். அதான் தான் மட்டும் உண்ண விரும்பாமல், அவளை அழைக்கிறது" என்று புரிந்து கொண்டு, கேட்டை திறந்து, வாயிலிலேயே அதற்கும் பிரியாணி போட்டார் தயாரிப்பாளர்.
“நன்றிடி காமு” மீனு குரைத்தது.
“எல்லாம் பைரவன் அருள்” என்றது காமு.
இப்போது மீனு யோசித்தபடி நடந்தது. இனி, நாம் இங்கிருந்தால், நம் தோழியையும், தெருநாயாக மீண்டும் துரத்தி விடுவார்கள். நமக்கும் ‘பைரவன்’ நிச்சயம் ஒரு வழி காட்டுவான் என்று மனதில் நினைத்து, நாள் முழுதும் சுற்றிவிட்டு கடைசியில், இரவில் ஒரு பங்களாவின் எதிரில், பெரும் மரத்தின் கீழ் படுத்து உறங்கியது.
நள்ளிரவு. ஏதோ நிழல் உருவம். சுட்டென எழுந்தது மீனு.
அதற்குள் கேட்டை தன் கையில் இருந்த இரும்பு கட்டை கொண்டு பெயர்த்து உள்ளே சென்றது ஒரு முகமூடி உருவம்.
கேட் பூட்டப்பட்டது.
மீனு ஓடினாள். அவளால் கேட்டை காமுவை போல் தாவ முடியவில்லை. ஆனால் விடாமல் குரைத்தது. வீட்டின் உட்புறம் இருந்து வெளிச்சம் வர துவங்கியது.
இப்போது ‘பைரவா’ என்ற மீனு ஒரே தாவலில் தாவி வீட்டின் உள் புகுந்தது.
மறைந்திருந்த முகமூடி அங்கும் இங்கும் தப்பிக்க ஓடினான்.
உடன் வீட்டு ஒனர் காவல் துறைக்கு போன் போட்டார். அவர் பெரும் இன்ப்ளுயன்ஸ் உள்ள செல்வந்தரான வைர வியாபாரி.
அதற்குள் பலமான சண்டை.
திருடன் கீழே சாய்ந்தான். அவன் முகமூடியை கடித்து துப்பியது மீனு.
காவல்துறை உயர் அதிகாரியே வந்தார்.
"அய்யோ இவனா..?! இவனைத்தான், நாங்கள் பல ஆண்டுகளாக தேடிக்கொண்டிருக்கிறோம். இவன் பல மாநிலங்களில் தேடப்படும் குற்றவாளி. மிகக் கொடூரமானவன். செய்யாத கொலைகளும் இல்லை. கொள்ளைகளும் இல்லை" என்ற அதிகாரி நாயை தடவி அதை சோதித்தார்.
"அய்யா.. இது நங்கு மோப்பம் பிடிக்கும் உயர் ரக அல்சேஷன் வகை நாய். இதை நாங்கள் எங்கள் தேவைக்காக பயன் படுத்திக்கொள்கிறோம்" என்றதுமே வைர வியாபாரி கையெடுத்து கும்பிட்டார்.
"வேணாம். என் வீட்டு நாய் இறந்து போய், ஒரு வாரம்தான் ஆகிறது. நான் இன்னொரு நாய் வாங்குவதற்குள், எப்படியோ மோப்பம் பிடித்து, ஒரு பெரும் கொள்ளைக்காரன், வந்து விட்டான். அவன் எங்களை கொலையும் செய்திருப்பான். எனவே, இதை நானே நன்கு வளர்த்து வைத்துக்கொள்கிறேன்" என்றார்.
அதிகாரியும் "சரி" என்றவர், "ஏங்க உங்களுக்கு ‘நைட் கேட் கீப்பர்’ கிடையாது" என்றதுமே, மீனு ஓடிப்போய் அந்த வாட்ச்மேனை காட்டியது.
"அய்யோ பாவம்" அவன் வாயில் துணி அடைக்கப்பட்டு, கையும் காலும் கட்டப்பட்டிருந்தன.
உடன், அவனை அதிகாரி விடுவித்து, தண்ணீர் கொடுத்து, புத்துணர்ச்சி ஏற்படுத்தினார்.
"வாட்ச்மேன், இனி கவலை வேண்டாம். துணைக்கு ஒரு உயர்ரக அல்சேஷன் கொடுத்திருக்கேன். நீ இரவில் தைரியமாக காவல் காக்கலாம். ஆனால் உன்னைப்போல் இந்த அல்சேஷனையும் தூங்க செய்து விடாதே" என்றதும், காவல் அதிகாரியே சிரித்து விட்டார்.
‘இப்போது அல்சேஷனுக்கு உறங்க மெத்தை. அது தவிர உண்பதற்கு விலை உயர்ந்த பிஸ்கேட்டுகள் கொடுத்து அதை கௌரவப்படுத்தினார்’.
இரவு ஆனால், மீனு “குட் நைட் பைரவா” என்ற விதமாக குரைக்கும்.
“குட் நைட் பைரவா” என்று எங்கிருந்தோ காமுவின் குரல் கேட்கும்.