சிறுகதை: கதம்பம்!

Husband and Wife
Tamil short story: Husband and Wife Img credit: AI Image
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

காலை மணி எட்டு. என் கணவர் சாமி படங்களுக்குப் பூ வைத்துக்கொண்டிருந்தார். நான் பூஜைக்குத் தயார் செய்துகொண்டிருந்தேன். நித்தியபடி பூஜைதான். முடித்துவிட்டு காலை உணவை சாப்பிடுவோம்.

எதேச்சையாக கவனித்தேன்; என் கணவர் சண்முகம் சிடுசிடுவென முகத்தை வைத்துக்கொண்டு, ஏதோ முணுமுணுத்தபடி பூ வைத்துக்கொண்டிருந்தார்.

“என்ன பிரச்னை உங்களுக்கு? சாமிக்குப் பூ வைக்கும்போது கூட கடுகடுன்னு மூஞ்சில எள்ளும் கொள்ளும் வெடிக்கறது. வேலை பண்றதுக்குக் கஷ்டமா இருந்துதுன்னா நீங்க பண்ணவேண்டாம். இவ்ளோ வேலை செய்யற எனக்கு, சாமிக்கு பூ வைக்கறதுல ஒண்ணும் சிரமமில்லை. நானே செய்யறேன் குடுங்க.”

“இதுல எனக்கொண்ணும் கஷ்டமில்ல. ஆனா ஒரு வாரமா வெறும் மல்லிப்பூவை வாங்கி வைக்கறே. வாசனையா இருந்தாலும், வெறுமனே வெள்ளைவெளேர்னு பூ வச்சா, நிறைவாவே இல்ல. நானும் தினமும் உன்கிட்ட கதம்பம் வாங்கி வைன்னு சொல்றேன். நீ பழியா மல்லியை வாங்கி வைக்கறே. கோவப்படாம எப்படி இருக்கமுடியும்? மனசுக்குப் புடிச்ச மாதிரி சாமி கும்பிடக்கூட முடியல இந்த வீட்டுல.”

நான் பதில் எதுவும் சொல்லவில்லை. மௌனமாக பூஜையை முடித்தேன். இருவரும் அமைதியாகவே சாப்பிட்டு முடித்தோம். அவரே மீண்டும் ஆரம்பித்தார்.

“என்ன தெய்வானை, மல்லிப்பூ வாங்கி வச்சதுக்கு உன்கிட்ட கோவப்பட்டேனே, நீ பதிலே பேசலை. மனசு வருத்தமாயிருச்சா?”

“ம்ம்ம், அதெல்லாம் இல்ல.”

“இல்ல, நீ மௌனமா இருக்கறதுலேயே தெரியுது. உன்னை வேணும்னே தப்பு சொல்லல தெய்வானை. நீயே சொல்லேன், சாமிக்கு வெறும் மல்லிப்பூ வைக்கறதுக்கும் கதம்பம் வைக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கா, இல்லையா?

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கார்த்தி
Husband and Wife

கதம்பத்துல இருக்கற சம்பங்கி, மருகு, அரளின்னு ஒவ்வொண்ணும் ஒருவித வாசனை. கொஞ்சமா வச்சாலும் நாள் முழுக்க வாடாம, வாசனையா இருக்கும். மல்லிகை வாசனையா இருந்தாலும் கொஞ்ச நேரத்துல வாடிரும். அதனாலத்தானே கதம்பம் வாங்குன்னு சொல்றேன். பூக்காரப் பொண்ணு கதம்பம் கொண்டு வரலேன்னா பரவாயில்ல. ஆனா அவ கொண்டுவந்தும் நீ வேணும்னே வாங்காம இருக்கே. அதான் எனக்குக் கோவம் வந்துச்சு.”

“மணமணக்கற வாசனைக்குப் பெயர்போன மல்லிகை தனியா இருக்கறதால உங்களுக்கு நிறைவைத் தரலன்னு சொல்றீங்க. சம்பங்கி, மருகு, அரளி, ரோஜான்னு வச்சு கட்டற கதம்பத்துல ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வாசம். வாடற நேரமும் வித்தியாசப்படும். இன்னிக்குக் காலைல சாமி படங்களுக்கு வச்சு, நாளைக்குக் குப்பைல போடற பூவுல கதம்பம் வேணும்னு விரும்பற நீங்க, குடும்பத்துல நீங்கமட்டும் மல்லிகை மாதிரி வாசம் வீசணும்னு ஆசைப்பட்டறது எந்த விதத்துல நியாயம்?”

“என்ன தெய்வானை சொல்றே? நான் எப்போ அப்படிச் சொன்னேன்?”

“நீங்க நேரடியா அப்படிச் சொல்லல. ஆனா உங்களுடைய பேச்சும், நடவடிக்கையும் சமீப காலமா அப்படித்தானே இருக்கு. இவ்வளவு வருஷங்களா வீட்ல நீங்க வச்சதுதான் சட்டம். நீங்க சொல்றதைத்தான் நானும், பசங்களும் கேட்டுட்டிருந்தோம்.

இப்போ வீட்டுல மருமகளும் பேரனும் புது வரவா இருக்காங்க. அவ வீட்ல அவ வளர்ந்த முறை வேற மாதிரி இருக்கும். அவளோட பழக்கவழக்கங்கள் வேற. அந்தத் தலைமுறையே வேற. உங்க பேரன் அதுக்கும் அடுத்த தலைமுறை. அவங்களோட எண்ணங்களும், செயல்பாடுகளும் உங்களோட ஒத்துப் போகணும்னு எவ்வளவு கோபப்படறீங்க.

எவ்வளவோ நல்ல விஷயங்களுக்கு சரியான தீர்வை உங்க மருமக சொல்றா. ஏத்துக்க முடியுதா உங்களால? வீட்டுக்கு ஒரு சாமான் வாங்கற விஷயத்துலகூட நீங்க சொல்றதுதான் சரின்னு அவகிட்ட சண்டைக்கு நிக்கறீங்க.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கால்பந்து..!
Husband and Wife

பேரன் சின்னக் குழந்தை. வீட்ல இருக்கற சாமான்களை அங்கங்கே தூக்கிப் போடறான். நீங்க வேண்டாம்னு சொல்றதை வேணும்னு அடம்பிடிக்கறான். அதுக்கு குழந்தைகிட்ட கோவப்படறீங்க.

இவ்வளவு வருஷங்களா நீங்க சொல்றது பிடிக்கலேன்னாலும், வேற வழியில்லாம நானும், நம்ம பசங்களும் பொறுத்துகிட்டோம். ஆனா எல்லாரும் அப்படி இருக்க முடியாதில்லையா. உங்களோட இந்த குணத்தால நம்ம பசங்களே நம்மகிட்ட இருந்து கொஞ்சம் ஒதுங்கித்தான் இருக்காங்க.

இப்போ நாம ஒரே வீட்ல இருக்கறோம்னு பேரு, ஆனா ஒரே குடும்பமா இல்லை. எப்படி கதம்பத்துல ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு குணத்தோட இருக்கோ, குடும்பமும் அப்படித்தானே. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு குணத்தோடதானே இருப்போம்.

இவ்வளவு ஏன், முப்பது வருஷமா கணவன் மனைவியா வாழற எனக்கும், உங்களுக்குமே நிறைய விஷயங்கள் ஒத்துப் போறதில்ல. ஆனாலும் பொறுத்துப் போய்தானே வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கோம். அதேமாதிரி தானே உங்க மகன், மருமகள், பேரன் எல்லாம். வேற வேற குணங்கள், சிந்தனைகள் இருக்கற அவங்களை, ஏன் உங்களால அப்படியே ஏத்துக்க முடியல.

நீங்க தனிக்காட்டு ராஜா மாதிரி இருக்கணும்னா, நாம தனியா, இந்த மல்லிகைச் சரம் மாதிரிதான் இருக்கணும்.

குடும்பம் கதம்பம் மாதிரிதானே. எல்லாரையும் அவங்கவங்க குணங்களோட ஏத்துக்கிட்டு, விட்டுக்கொடுத்து, புரிஞ்சுகிட்டு வாழ்ந்தாத்தானே குடும்பம் நிம்மதியா இருக்கமுடியும். பக்கத்து பக்கத்துல நெருக்கமா கட்டியிருக்கற சம்பங்கியும், மருகும், அரளியும் நான்தான் பெஸ்ட்னு போட்டி போடறதா என்ன?

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தகுதிகள் முக்கியம்!
Husband and Wife

ஏதோ என் புத்திக்கு எட்டினதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம். அப்புறம் இன்னொரு விஷயம், நாளையிலிருந்து கண்டிப்பா கதம்பம் வாங்கி வைக்கறேன். கோபப்படாதீங்க.”

இவ்வளவு அழகாக, தெளிவாக குடும்பம் ஒரு கதம்பம் என்று தனக்குப் புரியவைத்த தன் ஆசை மனைவியின் புத்திசாலித்தனத்தை பெருமையோடு பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் சண்முகம். இப்போது அவர் மனதில் ஒரு தெளிவு பிறந்திருந்தது. கதம்பத்திற்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com