சிறுகதை: கிழக்குப் பார்த்த கடை..!

வியாபாரத்தில் திட்டமிடல் மற்றும் இடத் தேர்வின் முக்கியத்துவத்தை விளக்கும் கதை
தமிழ் கதை | An east-facing shop..!
தமிழ் கதை | An east-facing shop..!Image credit: AI Image
பிரபு சங்கர்

About 55 years of experience in journalism, writing and taking photographs. Contributed to all the Tamil magazines of all periodicities. Developed skill through the guidance of Sri Savi, Editor, Dinamani Kadir. Have written hundreds of articles on various subjects; nearly 300 short stories; 12 novels and published hundreds of photographs. Have brought out 30 books, Worked as 1. Sub Editor in Ambalam, Net magazine under Sri Sujatha and Sri Thiruppur Krishnan; 2. Sub Editor in Kumudam Bhakthi Special and 3.Editor-in-Charge for Dinakaran Aanmigam magazines.

Updated on: 
MM strip
MM strip

கோவிந்தனுக்கு சமையலில் அனுபவம் உண்டு. முக்கியமாக நொறுக்குத் தீனி வகையறாக்களைப் பொறுத்தவரை அவன் நளன் அல்லது பீமன்தான்; அல்லது இரண்டும் சேர்த்துதான்!

சமையல் காண்டிராக்டரிடம் பதினைந்து வருடங்களாக வேலை செய்து தன் யுக்தியால் வித்தியாசமான பலகாரங்கள் தயாரிப்புக்கு யோசனை சொல்ல, அதனால், அந்த காண்டிராக்டர் மாநிலப் புகழ் பெற்றார்.

பணமும், புகழும் வந்தால்தான் தலையில் கனமும் சேர்ந்து விடுமே! ‘உன்னைப் போல ஒரு கைகாரனை நான் பார்த்ததே இல்லை,‘‘ என்று ஆரம்பத்தில் சொன்ன காண்டிராக்டர், சமையல் கலைஞர்கள் பலர் அவரிடம் பணி புரிய ஆவலாக இருப்பதும், அவ்வாறே அவரிடம் வந்து சேர்ந்ததும் அவருக்குக் கிரீடம் வைத்தாற்போல ஆகிவிட்டது. அதனால், அந்தப் பாராட்டு, ‘உன்னைப்போல ஆயிரம் பேர் கிடைப்பார்கள்,‘ என்பதில் வந்து முடிந்தது.

கோவிந்தன் மீது அவர் சந்தேகப்பட ஆரம்பித்தார். போட்டி காண்டிராக்டர்களுக்கும் இவன் தன் புதுமை டிப்ஸைக் கொடுப்பானோ? ஆதாரமற்ற சந்தேகம். ஆனாலும், அவனுடைய கை ஓங்கிவிடக் கூடாது; மட்டம் தட்டி வைக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி டயலாக் விட்டார். கோவிந்தனுக்கு கோபத்துக்கும் மேல், தன் விசுவாசத்துக்குக் கிடைத்த பரிசை எண்ணி ‘இவருக்கு மேலே உயர்ந்து போகணும்‘ என்ற வைராக்கியத்தை உசுப்பி விட்டது.

தனியே பலகாரக் கடை வைத்தால், தன் திறமைக்கு வடிகாலும், அங்கீகாரமும் கிடைக்கும் என்று நியாயமாகக் கருதினான். அப்படி கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மூலமாக பெரிய அளவில் சமையல் காண்டிராக்ட் பிடிக்கலாம் என்றும் தோன்றியது. அதனால் தன்னுடைய ஓய்வு நேரத்தில், கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கூட்டிக் கழித்து, கணக்குப் போட்டு ஆறுதல் அளிக்கும் சாமியை நாடினான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ரெண்டாவது அப்பா!
தமிழ் கதை | An east-facing shop..!

‘‘அந்த காண்டிராக்டர் நம்மளைக் கழட்டி விட்டுட்டார் சாமி. சுயமா பலகாரக் கடை வெச்சு காலத்தை ஓட்டலாம்னு நினைக்கறேன். வழக்கம்போல நீங்கதான் எனக்கு யோசனை சொல்லணும். ரெண்டு இடம் அதுக்குத் தோதா வந்திருக்கு சாமி. இதிலே எது எனக்கும் என் எதிர்காலத்துக்கும் சரிப்பட்டு வரும்னு சொல்லுங்களேன்,‘‘ என்று கேட்டுக் கொண்டான்.

அவனுடைய நட்சத்திரம், பிறந்த தேதி, பலகாரக் கடை வைக்கும் பகுதி என்று எல்லா விவரங்களையும் கேட்டார் சாமி. ஒரு கணக்கு வாத்தியார் போல கூடுவதும், கழிப்பதும், பெருக்குவதும், வகுப்பதுமாக கிரகங்களைப் பெரேடு எடுத்தார். அவர் விரல் தொட்டுவிடாதபடி நல்ல கிரகம் விலகிப் போவதைத் தடுத்து, அதை இழுத்து ஜாதகக் கட்டத்துக்குள் கொண்டு வந்தார்.

இனி இவரிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட கிரகங்கள், அவர் காட்டிய கட்டங்களில் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டன.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: வாழ்க்கை எட்டிப் பார்க்கும் தூரம்தான்!
தமிழ் கதை | An east-facing shop..!

ஒரு பத்து நிமிட ஜோதிட விளையாட்டுக்குப் பிறகு, ‘‘கோவிந்தா, நீ சொன்ன ரெண்டு இடமும் ஒண்ணுக்கு ஒண்ணு பார்த்தபடி எதிரும் புதிருமா இருக்கு. நீ என்ன பண்றே, கிழக்கு பார்த்த இடத்தைப் பிடிச்சுக்கோ. அங்கே கடை ஆரம்பி. அமர்க்களமா இருப்பே,‘‘ என்று அவனுக்கு அருள் வாக்கு சொன்னார்.

அவரை மனம் நெகிழ கும்பிட்டுப் போன கோவிந்தன், அவர் யோசனைப்படியே செய்தான் - ஒரே மாதத்தில் ஓகோகோவென்று கடை கொள்ளாத வாடிக்கையாளர் கூட்டம்!

சாமிக்கு நெருக்கமானவர் அவரிடம் வந்தார். ‘‘உங்க வாக்கு பலிச்சிடுச்சே! கோவிந்தன், மலையப்பனாகி விட்டானே! தீர்க்கதரிசனம்தான் உங்களுக்கு…!’’ என்று பாராட்டினார்.

தமிழ் கதை |An east-facing shop and astrology
தமிழ் கதை |An east-facing shop and astrologyImage credit: AI Image

சாமி சிரித்தார். ‘‘கோவிந்தன் கடை வைக்கும் இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் பஸ் டெர்மினஸ், ரயில்வே ஸ்டேஷன் ரெண்டும் இருக்கிறது. மாலை வேளைகளில் ஆபீஸ், கல்லூரி, பள்ளி முடிந்து வருபவர்கள் பஸ் ஸ்டாண்டில் அல்லது ஸ்டேஷனில் இறங்கி இடப்புறமாக நடந்து வருவார்கள்.

கிழக்கு பார்த்த பலகாரக் கடையைத் தாண்டித்தான் அவர்கள் போக வேண்டும். வியாபாரம் பெருகாதா என்ன? கோவிந்தன் பார்த்திருந்த இன்னொரு கடை மேற்கு பார்த்தது. பஸ்ஸையோ ரயிலையோ பிடிக்க காலை வேளையில் அவசரமாக செல்பவர்கள் இந்தக் கடையை சீண்டுவார்களா என்ன? அதேமாதிரி மாலையில் வீடு திரும்பும்போது சாலையைக் குறுக்காகக் கடந்து மேற்கு பார்த்த கடையில் வாங்கவும் யோசிப்பார்கள். அதனால் கிழக்கு பார்த்த கடைதான் சரி.’’

‘சாமி சும்மா ஆரூடம் சொல்லவில்லை, அனுபவரூடமாகத்தான் சொல்லியிருக்கிறார்!‘ என்று நினைத்துக் கொண்டார் நெருங்கியவர்.

logo
Kalki Online
kalkionline.com