

இயற்கை இருக்கிறதே! அதன் விளையாட்டை அப்படியே புரிந்துகொள்ள மனிதனுக்கு இன்னும் எவ்வளவு காலமாகுமோ தெரியவில்லை. ஏனெனில் அது எவ்வழியிலும் செல்லாமல் தன் வழியிலேயே செல்லும். எப்பொழுது என்ன செய்யும்? எவ்வாறு மாறும் என்பதையெல்லாம் கணிக்கும் அளவுக்குக் கம்ப்யூட்டர் ஏதும் வரவில்லை.
ஏஐ என்று என்னதான் மனிதன் மார்தட்டிக் கொண்டாலும், அதனிடம் எந்தப் பாச்சாவும் பலிக்கவில்லை. உலகின் மத்தியில் அமைந்த மிடில் ஈஸ்ட் நாடுகள் நாளடைவில் வளர்ந்து, உலகின் அனைத்து நாடுகளுக்கும் எங்கள் நாடுகளே பாதை என்று இறுமாந்திருந்த நேரத்தில்தான் ஆரம்பித்தது ஈரான்- அமெரிக்கப் போர். துபாயும், அபுதாபியும், கத்தாரும், ஓமனும் உயரே பறக்கும் விமானங்களை அதிக அளவில் இயக்கி ஆதாயம் கண்டு வந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முகிழ்ந்தது போர்!
ஓரமாக இருந்த சூரிக்கிற்கும், பிராங்க்பர்ட்டுக்கும் நல்ல நேரமாக அது அமைந்துவிட, மக்கள் மத்தியக் கிழக்கு நாடுகளைப் பெரும்பாலும் தவிர்த்து விட்டு, சுற்று என்றாலும் பரவாயில்லை, பயமின்றிப் பயணம் செய்வதே முக்கியம் என்றெண்ணித் தங்கள் பயணங்களை அந்த ரூட்டுகளில் அமைத்துக்கொள்கிறார்கள்.
அவனும் அப்படித்தான். துபாய் வழியாகப் போக முதலில் டிக்கட்டைப் பதிவு செய்தவன், ரிஸ்க் வேண்டாமென்று அதனை உடனடியாகக் கான்சல் செய்து விட்டு பிராங்க்பர்ட் வந்து விமானத்தைப் பிடித்தான். அந்த ஜெர்மன் விமான நிலையத்தின்மீது ஒரு காலத்தில் உயிரையே வைத்திருந்தவன், இப்பொழுதெல்லாம் அதனை அவாய்ட் செய்வதையே விரும்பினான்! இரண்டுக்குமே காரணம் அவளும், காதலுந்தான்!
சுமதியை அவன் முதன்முலாகச் சந்தித்தது இந்த விமான நிலையத்தில்தான். வீல் சேரில் வயதான தாத்தாவுடன் பாட்டரி கார் ஏறும் அவசரத்தில் தன் காபின் லக்கேஜைக் கவனிக்காது விட்டுவிட்டு இறங்கிவிட, வயதான தன் தாயுடன் அதே பாட்டரி காரில் வந்த அவன், அவளை அழைத்து லக்கேஜை ஞாபகப்படுத்த, காதல் பொறி இருவரது உள்ளங்களிலும் சிறுமூட்டமாகப் பரவியது.
உள்ளே கனலும் தீயாக அது கனன்று கொண்டிருந்திருக்க வேண்டும். மீண்டும் ஒரு கான்பரன்சு இருவரையும் ஒன்றாகச் சேர்க்க கனன்றது பற்றிக்கொள்ள, காதல் ஒளி பிரகாசம் காட்டத் தொடங்கிவிட்டது. அப்புறமென்ன?
ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரைன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்
மயங்கிப் பறந்தனர் பறவைகள் போல்!
இந்த உலகம் இருக்கிறதே! காதலிக்கும்போது அது பூத்துக் குலுங்கும் ஊட்டி மலர்க் கண்காட்சியாக உள்ளத்தின் ஓரமெல்லாம் உற்சாகத்தைப் பீய்ச்சியடித்துக் கிறங்க வைக்கும்! 24 மணி நேரமும் இதயக் கூட்டில் இன்பக் கிளி சிறகடித்துக்கொண்டே இருக்கும். உணவும், உறக்கமும்கூட வேண்டாதவையாகி விளையாட்டு காட்டும். நினைவுகள் எல்லாமும் நிம்மதியில் திளைக்கும்.
மாறாக, காதல் கைகூடவில்லையென்றால் முகாரி ராகமே முகவரியாகும். சஹாராப் பாலைவனத்தில் தனியாகச் சிக்கிக்கொண்டதைப் போன்ற உணர்வு, உள்ளும் வெளியும் கொல்லும். இது இரண்டு எக்ஸ்ட்ரீம் என்றால், இப்பொழுதெல்லாம் மூன்றாவதாக ஒன்று முளைத்திருக்கிறது. காதலிப்பது; கல்யாணம் செய்துகொள்வது; பிடிக்கவில்லையென்று விலகி வாழ்ந்துகொண்டே விவாகரத்து வழக்கு போடுவது.
பிராங்க்பர்ட்டிலிருந்து சென்னைக்கு 9 மணி நேர, நடுவில் ஸ்டாப் இல்லாத பயணம்! அவன் ஏறியதிலிருந்தே மனம் பின்னோக்கிப் போய், சுமதியுடன் காதல்கொண்டு சுற்றிய நாட்களையும், அம்மாவிடம் நைசாகப் பேசிப் பேசியே அவள் மனத்தைக் கரைத்து, அவளைக் கைப்பிடித்ததையும், கணவன்-மனைவியாக அவர்கள் வாழ்ந்த நாட்களையும் அசை போட்டு வந்தது! அந்த லயிப்பில் அவன் சீட்டிற்கு முன்னர் இருந்த ஸ்க்ரீனில் ஓடிய எதையும் அவ்வளவாகக் கவனிக்கவில்லை.
திடீரென்று லேசாக விமானம் குலுங்க ஆரம்பிக்க, கேப்டன் சீட் பெல்ட் போட்டுக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்தார். அப்பொழுதுதான் அவன் ஸ்க்ரீனை நோட்டம் விட்டான். சென்னையில் இறங்க ஆறு மணி 5 நிமிடங்கள் இருப்பதாகவும்,10,140 மீ உயரத்தில் பறப்பதாகவும், க்ரவுண்ட் ஸ்பீட் மணிக்கு 902 கி.மீ., என்றும் விபரங்களை விலாவாரியாக ஒப்பித்துக்கொண்டிருந்தது திரை.
இனிமையாக ஓடிய வாழ்வில், மிக மெல்லியதாகத்தான் அந்த விரிசல் ஏற்பட்டது.
முதலில் ஹேர் லைன் க்ராக்தான் என்று இருவருமே எண்ணியிருக்க வேண்டும். ஆம்!
வெளிநாட்டில் தங்கிப் பணிபுரிவதே விருப்பமானது என்று அவனும், உள் நாட்டில் இருந்தால் உற்றாரையும் கவனித்துக்கொள்ளலாமே என்று அவளும் எண்ணினர்.
விளையாட்டாக ஆரம்பித்த வீம்பு இறுக்கமாகிப் போக, அவன் வெளிநாடு செல்ல, அவள் உள்ளூரிலேயே தங்க, இடைவெளி அதிகமாகிப் போக, மனங்களும் விலக ஆரம்பித்தன. இருவரின் உறவினர்களும் உசுப்பேத்த, இருவரும் டிவர்ஸ் கேட்டு நீதி மன்றப் படியேறினர்.
அடுத்த வார ஹியரிங்குக்காகத்தான் அவன் வந்துகொண்டிருக்கிறான். சற்றே குலுங்கிய (Turbulence) விமானம் மீண்டும் சரியாகப் பறக்க ஆரம்பிக்க, அவனுக்கு எதுவோ பொறியில் பட்டது போலிருந்தது.
நன்றாக ஆரம்பித்த தன் காதல் திருமணத்தில் முடிந்தபிறகும், அதனைப் போற்றிப் பாதுகாக்காது தான் தவறு செய்துவிட்டோம் என்று அவன் மனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆரம்பித்தது- அவன் மீதே!
9 மணி நேர விமானப் பயணத்தில் ஓரிரு நிமிட டர்புலன்சுக்காக யாரும் பயணத்தை நிறுத்தி விடுவதில்லை. அந்த நேரத்தில் உஷாராக இருந்துகொள்ள வேண்டும், அவ்வளவுதான்! மணவாழ்க்கையும் அது போல்தான்! சிறு சிறு பிணக்குகளுக்காக இணைந்த வாழ்க்கைப் பயணத்தை நடுவிலேயே முறித்துக்கொள்வது முட்டாள்தனமானது அல்லவா? அவன் முடிவுக்கு வந்துவிட்டான்! சுமதி சொன்னதுபோல இந்தியாவுக்கே வந்து விடுவதென்று!
தாத்தாவுக்காகத்தான் அவள் இந்தியாவில் தங்க வேண்டுமென்று அவனிடம் அடம் பிடித்தாள்! அந்தத் தாத்தா ‘அவனோடு சேர்ந்து நீ வாழவேண்டும்’ என்று கூறிவிட்டுக் கண்ணை மூடிவிட்டார். இப்பொழுது அவள் வெளிநாடு போகத் தயார்! அவனோ உள் நாட்டிலேயே தங்கத் தயார்! இயற்கையின் விளையாட்டை நாம் எப்படித்தான் புரிந்துகொள்வது?
விமானம் இன்னும் உயரத்திலேயே பறந்துகொண்டிருக்கிறது! ஆனால் அவர்கள் இருவரின் மனங்களும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்!….
அடுத்த வாரம் கோர்ட்டில் டிவர்ஸ் கேஸ் ஒன்று விலக்கிக் கொள்ளப்படும்!