

ராகவன் உதகையில் படிப்பை முடித்துவிட்டு குன்னூரில் தொலைபேசி இலாகாவில் வேலைக்குச் சேர்ந்தார். தினமும் ஊட்டியிலிருந்து குன்னூர் சென்று மாலை ஊட்டி திரும்பி விடுவார்.
நன்றாக வேலை செய்வார். அவர் அலுவலகத்தில் விஜயலட்சுமி என்று ஒரு பெண்ணும் வேலை செய்து வந்தார். விஜயலட்சுமி ராகவனை மிகவும் விரும்பினார். அடிக்கடி அவரிடம் பேசி வருகிறார்.
ஆனால், ராகவன் நல்ல பழகினாலும் ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணினார். விஜயலட்சுமிக்கோ நாட்கள் போகபோக அவரது காதல் ஆழமான காதல் ஆனது.
ராகவனுக்கு விஜயலட்சுமி தன்னை விரும்புகிறார் என்று நன்றாகவே தெரியும். ஆனால் அவர் காதலிக்கத் தயராக இல்லை.
ஒரு நாள் விஜயலட்சுமி நேரிடையாகவே ராகவனிடம், “என்னைக் கல்யாணம் செய்துகொள்கிறீர்களா..?” எனக் கேட்டார்.
ராகவனுக்கு தர்மச்சங்கடமான நிலை. அவர் பணிவாக சொன்னார்:
“நீங்கள் வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள். ஐ யம் சாரி…!”
அன்று அவர் ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு சென்றுவிட்டார். அவர் மனம் உடைந்துதான் ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இரண்டு நாட்கள் வரவில்லை. மூன்றாம் நாள் வந்தார். டீ நேரத்தில் விஜயலட்சுமி மீண்டும் கேட்டார்:
“ஏன் கல்யாணம் வேண்டாம் என்கிறீர்கள்…?” எனப் பக்குவமாகக் கேட்டார்.
ராகவன் “பிறகு சொல்கிறேன்…!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
விஜயலட்சுமி, ராகவனுக்கு தன்னைப் பிடித்து உள்ளது என்று தோன்றியது. ஆனால் என்ன காரணம்? எதற்காக வேண்டாம்? காரணம் தெரியாமல் தவித்தார்.
விஜயலட்சுமி பிறந்த நாள். ஆபீசுக்கு வந்ததும் ராகவனுக்குத்தான் 5 ஸ்டார் கொடுத்தார். ராகவன், விஜயலட்சுமியை வாழ்த்திவிட்டு 5 ஸ்டார் சாப்பிட்டார்.
மீண்டும்… மீண்டும்... விஜயலட்சுமியின் கேள்விக்கு ராகவனின் மழுப்பலான பதில்...
விஜயலட்சுமி நேரிடையாகவே ராகவனிடம் கேட்டார்:
“ஏன் உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையா…?”
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை… என் பிரச்சனை. உங்களுக்கு நான் பிறகு சொல்கிறேன்…!” என்று சொல்லிவிட்டு தனது இருப்பிடம் சென்றார்.
விஜயலட்சுமி பயங்கரச் சோகத்தில் இருந்தார்.
ராகவனுக்குச் சிக்கல். தனது கதையைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார்.
மறுநாள் சற்றுக் கோபமாகவே விஜயலட்சுமி கேட்டார்:
“உங்களுக்குக் காதல் பிடிக்கலையா அல்லது என்னையே பிடிக்கவில்லையா...?”
“சரி… லஞ்ச் டைமில் வெராண்டாவுக்கு வாருங்கள். பேசலாம்” என்று சொல்லிவிட்டு பணிக்குச் சென்றார்.
லஞ்ச் டைம். இருவருமே சாப்பிடவில்லை. ராகவன் ஆரம்பித்தார்:
“லட்சுமி… உனக்கு ஒன்று தெரியாது. நான் ஸ்கூலில் +2 படிக்கும்போது… எனக்கு ஒரு அண்ணன் இருந்தார். அவர் பெயர் சம்பத். அவர் ஒருவரை மிகவும் காதலித்தார். அந்தப் பெண்ணும் காதலித்தது. ஆனால், வீட்டில் பணக்கார மாப்பிள்ளை பார்த்ததும் சம்பத் அண்ணனை மறந்து பணக்கார மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்ய ஒப்புக்கொண்டார் அந்தப் பெண்.
காதலித்த பெண்ணின் கல்யாண நாள். சம்பத் மழம்புலா அணையில் இருந்தார். கல்யாண முகூர்த்த நேரம்… அவர் அணையில் விழுந்து உயிரைவிட்டார். சம்பத் அண்ணன் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இருவரும் கிரிக்கெட் விளையாடுவோம். வீட்டில் இருக்கும்போது செஸ் விளையாடுவோம். அவன் படு புத்திசாலி. அவன் தற்கொலை செய்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
அன்றுமுதல் காதல் மீது வெறுப்பு. என்னால் சம்பத்தை மறக்க முடியவில்லை. காதலே வேண்டாம் என்று எண்ணினேன்.
அதுதான் நீங்கள் மீண்டும் மீண்டும்… ம்ம்ம்.. மீண்டும் மீண்டும் என்னை கேட்டபோது நான் நழுவினேன். இப்போது சொல்லுங்க…?”
“ராகவன்… அது ஒரு விபத்து என்று நினையுங்கள். நடந்தது நடந்துவிட்டது. உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை வேண்டாமா…?”
ராகவன் நீண்ட யோசனைகளுக்குப் பிறகு,
“லட்சுமி… உன் வீட்டு முகவரி தா… நான் வரும் ஞாயிற்றுக்கிழமை என் அம்மா, அப்பாவோடு உங்கள் வீட்டிற்கு வந்து பெண் கேட்கிறேன்… போதுமா?”
வெரண்டாவில் இருந்த விஜயலட்சுமி, ராகவனுக்கு முத்தம் கொடுத்துவிட்டு ஓடினாள்.
ஞாயிற்றுக்கிழமை… இனிய நாள்… இரு வீட்டாரும் மீண்டும் மீண்டும் பேசியபடி இருந்த ராகவன் – விஜயலட்சுமி ஜோடிக்குக் கல்யாணத் தேதியை நிச்சயம் செய்தார்கள்.