

கவிஞர் தூசியை 1995 வரை தமிழக மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1970ல் அவதரித்தார்.
தன் 25 ஆவது வயதில்தான் தன் முதல் புதுக்கவிதையை ஒரு வாரப் பத்திரிக்கைக்கு அனுப்ப 1995ல் அது பிரசுரமானது. கவிதை இதுதான்:
அவள் வானத்தை அண்ணாந்து பார்த்தாள்
நிலவு இவள் முக அழகைப் பார்த்து ஒளிந்துகொண்டது
மேக இடுக்கில்…
இதற்கு ஆர்ட்டிஸ்ட் வரைந்த ஒரு பிரபல நடிகை சாயல் படத்தோடு இருந்ததால் இதை எல்லோரும் படித்தார்கள்.
கவிஞர் தூசியின் பெயர் சின்னப்பதாஸ்.. ஊர் தூக்கணாம் பாளையம். தூசி என தனக்கு பெயர் சூட்டிக்கொண்டார்.
ஒரு கவிதை பிரசுரம் ஆனாலும் ஆனது. அதை செராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு தெரிந்த இடங்களில் எல்லாம் தன் கவிதைத் தொகுப்புகளை பிரசுரிக்க நச்சரித்தார்.
புதுக்கவிதை என்ற பெயரில் ஒரு நாலு வரிகள் பிரபல எழுத்தாளர்களின் நாவல்களின் நடுவில் இருந்து உருவி கவிதை என போட்டு விடுவார்.
இயந்திரங்கள் கண்ணடித்தன
இனியா தடுக்கி விழுந்தபோது..
இப்படியாக மொக்கை போட்டுத்தள்ளினார்.. அவருடைய ஜாதக விசேஷமோ என்னவோ சில பத்திரிக்கைகள் பிரசுரித்தும்விட்டன.
உள்ளூரில் பள்ளிகளில் விழா ஏற்பாடு செலவுகளை இவர் ஏற்று 'கவிஞர் தூசி சிறப்புரை' என முதலில் சாக் பீஸால் போர்டில் எழுதி வைத்தார்கள் வெளியில்.. பின் போஸ்ட்டர்.. பின் ஃப்ளக்ஸ். விழாக்களில் போய் பேசி தன் செலவில் பரிசுகள் வழங்கினார்..
இப்படியாக அக்கம் பக்கம் பள்ளிகள் ஆண்டு விழாக்களில் அழைப்புகள் வர ஆரம்பித்தன.
தன் செலவில் பொன்னாடைகள் மாலைகள் போட சில பேரை ஏற்பாடு செய்துவிடுவார். கூட்டத்தின் நடுவில் சிலர் அமர்ந்து இவர் உரையாற்றும்போது ஒரு மொக்கை கவிதை சொல்ல பலத்த கைதட்டல் விழும். என்னவோ ஏதோ என குழந்தைகள் கை தட்டி வைக்கும்.இவர் தமிழ்க் கவிதைகளுக்கு நாளடைவில் தமிழில் ஒரு டிக்ஷனரி மாதிரி எழுதி விளக்கம் போட்டார்கள் சிலர்.
அவருடைய லேட்டஸ்ட் கவிதைகள் ஃபேஸ்புக் இன்ஸ்டாவில் வலம் வருகின்றன.. லேடஸ்ட்டாக வருவது இதுதான்..
வானம் இடிந்து கொட்டியது..
ரேஷன் கடை மூட்டை ஓரத்தில் கிழிந்து அரிசி கொட்டியது
சிதறிய அரிசி நனைந்து ஊறியது..
வரிசை கலையவில்லை.. நின்றவர்கள் தலைதான் கலைந்திருந்தது.
இது தூசியின் கவிதை.. இதை ஆஹா ஓஹா என்று பலரும் பாராட்டினார்கள். (அது தூசியின் சொந்த செலவு ஏற்பாடு என அறிக)
ஏழ்மையின் அவலம் இதில் எடுத்துரைக்கப்படுகிறது என ஒரு பேராசிரியர் விளக்கம் எழுதினார். அந்த விளக்கத்துக்கு அவருக்கு பி ஹெச் டி கிடைத்தது.
கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் சினிமா பாடல் வரிகளை நைஸாகச் சுட்டு மேலும் கீழும் சில அர்த்தம் புரியாத வார்த்தைகளைப் போட்டு விடுவார் தூசி.
உதாரணத்துக்கு...
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் கல்வி.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில்
நிற்பவர் இல்லை.
நம் நாடு என்னும் தோட்டத்திலே நேற்று பூத்து காய்ந்து நிற்கும் மல்லிகையே..
(இது மூன்று பழைய எம் ஜி ஆர் பட பாடல் வரிகளைச் சுட்டது)
சில கவிதைகளுக்கு தூசிக்கே அர்த்தம் தெரியாது
சாலையில் விழுந்தவன் எழவில்லை…
ஆம்புலன்ஸ் வந்து தூக்கிச் சென்றது உடலை..
நாய் கவ்விச் சென்றது அவன் ஒரு கால் செருப்பை.
இதற்கு ஒரு பட்டி மன்றமே நடத்தினார்கள்.. கவிஞர் தூசி இதில்
சமூக அவலத்தைச் சொல்கிறாரா அல்லது சமூக பொறுப்பைச் சொல்கிறாரா.
இதற்கு பொருள் உதவி செய்தவர் கவிஞர் தூசிதான்.
சில விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த சூட்சுமம் தெரிந்தது.
இந்தப் பட்டிமன்றம் டி.வி.யில் ஒளிபரப்பானது.
இப்படியாக அவர் போட்ட பல மொக்கை கவிதைகளை மக்கள் மத்தியில் கொண்டுசேர்த்து அவர் பெயரை கல்யாண வீடுகள், ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்டுகளில் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள், விஜயதசமி வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள் என்ற பெயரில் தூசி போட்டோவுடன் ஃப்ளெக்ஸ் பேனர் வைக்க ஏற்பாடு செய்தார்.
இதெல்லாம் பழைய கதை. இப்போவெல்லாம் தூசி ஒரு நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள ஒரு லட்சம் வசூலிக்கிறார்.
அவருடைய பேத்தல்கள் புத்தகமாக வெளியாகி நாலாவது பதிப்பு, ஐந்தாவது பதிப்பு... என ஓடிக்கொண்டு இருக்கிறது.
சம்பந்தம் சம்பந்தமில்லாத வார்த்தைகளில் எழுதி சில பிரபல இசை அமைப்பாளர்கள் இசையில் தூசியின் சினிமா பாடல்களும் வந்துவிட்டன.
சமீபத்தில் 'குண்டாந்தடி' படத்தில் தூசி அவர்களின் ஹிட் ஆன பாடல் வரிகள் இதோ..
சப்பிச் சாப்பிடற முட்டாயை
கடைசியில் கடிச்சுத் தின்னாதே…
மென்று தின்ன தேவையில்லே குலோப் ஜாமுனை
இப்படியாக பல்லவி இருந்து... இப்போது எல்லா சோஷியல் மீடியாக்களிலும் இந்தக் குத்துப்பாட்டுதான் வைரல்..
படத்தில் சம்பந்தம் சம்பந்தமில்லாமல் நடிகை ஜிகின்னா ஆடி இருந்தார்.. (கண்கள் கூச.)
ட்ரெயிலரில் தூசியின் பாட்டு என பளிச் பளிச் என ஓடும்.. அதைக் காட்டியே ஏரியாக்களை விற்றார் ப்ரொட்யூசர்.
மியூசிக் போட்டவர் ஹிப் ஜிப் இனிருத். டிரம்ஸ் அடியில் வரிகள் காதில் விழாது.. அர்த்தம் புரியாது என வைத்துக்கொள்ளுங்கள். இப்போவெல்லாம் பாட்டு புரியாமல் எழுதறதுதானே ஃபேஷன்.
இப்போதெல்லாம் கவிஞர் தூசி பாட்டு இருந்தால் ஏரியாக்கள் நன்கு விற்கின்றன.
மக்களை பழக்கிவிட்டார் தூசி அவர் வரிகளை ரசிக்க.
எத்தனை மொக்கை போட்டாலும் நெட்டிசன்ஸ் கிண்டல் அடிக்க என ஒரு ஆள் இருக்காரே என்ற வகையில் ஓடிக்கொண்டிருக்கிறது இலக்கிய உலகம்.