

"டர்" என்று உடை கிழியும் சத்தம் கேட்டது. சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள் தேவகி. பாண்டியன் ஸ்டோர்ஸின் வெள்ளம் போன்ற கூட்டத்தின் சலசலப்புகளில் அந்த "டர்" சத்தம் பிறரது காதுகளில் விழவில்லை. அவரவர்கள் தங்களுக்குப் பிரத்யேக ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக அவளுக்குச் சில அடிகள் தாண்டி நின்று கொண்டிருந்த விற்பனை பிரதிநிதி பெண்ணிற்குக் கூட அந்த "டர்" சத்தம் கேட்கவில்லை.
தேவகி சற்று முன்பு தான் தனக்குப் பிரத்யேகமான ஆயத்த சுடிதாரினைத் தேர்ந்தெடுக்க, ஆயத்த சுடிதார்கள் மலை போல் குவிந்து கிடந்த அந்தப் பகுதிக்கு வந்திருந்தாள். ஒவ்வொரு சுடிதாராக அவள் எடுத்து பார்க்கும் பொழுது ஒரு சிகப்பு நிறச் சுடிதார் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அந்த சிகப்பு நிற சுடிதாரின் இடுப்பிற்கு அருகே சாய்வுக் கோணத்தில் ஒரு பாக்கெட் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பாக்கெட்டு எவ்வாறு உள்ளது என்று அவள் கைவிட்டு விலக்கிப் பார்க்கும் பொழுது பாக்கெட்டின் அருகே இருந்த துணி "டர்" என்ற சத்தத்துடன் கிழிந்து விட்டது.
அவ்வாறு கிழிந்ததற்கு முழுமுதற் காரணம் தேவகி தான். அவள் அந்தச் சுடிதார் உடையை கவனமாக கையாளவில்லை. ஆனால் அந்தக் கிழிந்த சிகப்புச் சுடிதாரினை வாங்கி கொண்டு செல்வதற்கு அவளது மனம் ஒப்பவில்லை. சுற்றுமுற்றும் அவள் பார்த்தாள். அவ்வாறு "டர்" என்று அந்த உடை கிழிந்த சத்தம் அவளது காதுகளில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பானதைப் போல் பலத்த சத்தத்துடன் ஒலித்ததைப் போல் தோன்றியது. ஆனால் சுற்று முற்றும் இருந்த நபர்களுக்கு அந்த "டர்" சத்தம் கேட்டது போல் தெரியவில்லை.
தேவகி அந்த சிகப்பு நிற சுடிதாரினை மலை போல் குவிந்திருந்த சுடிதார் குவியலுக்குள் இரகசியமாக நுழைத்து விட்டாள். மறுபடி வேறொரு சுடிதாரினைத் தேர்ந்தெடுக்க கைகளால் துழாவிய போது மறுபடியும் அதே கிழிந்த சிகப்பு நிற சுடிதார் அவள் கைகளில் வந்தமர்ந்தது. அந்தச் சிகப்பு நிற சுடிதாரினை மறுபடியும் ஓரமாக வைத்துவிட்டு மற்றொரு ஓரத்தில் தனது தேடுதல் வேட்டையை நடத்தினாள்.
அதேபோன்று மற்றொரு சிகப்பு நிற சுடிதாரினை அவள் தேர்ந்தெடுத்தாள். இந்தச் சுடிதாரிலும் பாக்கெட் இருந்தது. அவள் அதனை மிகவும் கவனமாக கையாண்டாள். அப்போது எந்த ஒரு "டர்" சத்தமும் கேட்கவில்லை. அந்தச் சுடிதாரினை அணிந்து கொள்வதற்கு கடையின் ஒப்பனை அறைகளை நோக்கி நடந்தாள்.
ஒப்பனை அறையில் அந்த சிகப்பு நிற சுடிதாரினை போட்ட போது மிகவும் கவனமாக போட்டுக்கொண்டாள். கிழிந்து விடுமோ என்ற ஒரு பயம் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. அந்தச் சிகப்பு நிற சுடிதாரிலும் ஏதேனும் கிழிந்திருக்குமோ என்று கழுத்து முதல் முட்டி வரை இருந்த எல்லா பகுதிகளையும் கவனமாக ஆராய்ந்தாள். அந்தச் சுடிதாரை முழுவதுமாக திருப்பிப் போட்டு பின்பகுதிகளிலும் ஏதேனும் கிழிந்து உள்ளதா என்று கவனமாக ஆராய்ந்தாள். எங்கும் கிழியாமல் சுடிதார் நன்றாகவே இருந்தது. மறுபடி அந்தச் சுடிதாரை எடுத்து ஒப்பனை அறையை விட்டு, வெளியேறி அதனை வாங்க முடிவு செய்தாள்.
அந்தச் சுடிதாரைக் கவனமாக கையாண்டு, அதனை மடித்து வாங்குவதற்கு கடையில் இரசீதுகள் கொடுக்கும் பகுதியை நோக்கி நடையைப் போட்டாள். ஆனால், அவள் காதுகளில் "டர்.. டர்" என்ற சத்தம் அவ்வப்போது சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அவள் நான்காவது மாடியில் சுடிதாரைத் தேர்ந்தெடுத்து விட்டு தரைத்தளத்தில் உள்ள இரசீது போடும் இடத்தை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தபோது இதயத்தில் படபடப்பு அதிகரிக்க தொடங்கியது. பலவித எண்ணங்கள் மனதில் ஓடத் தொடங்கின.
"ஐயோ! அந்தக் கிழிந்து போன சுடிதாரை ஏதாவது ஒரு பெண் தெரியாமல் தேர்ந்தெடுத்து விட்டு அணிந்து கொண்டால் அவளுக்கு மானபங்கம் ஏற்பட்டு விடுமே! அவளது கிழிந்த ஆடையினால் அவளுக்கு மானம் கப்பலேறி அவளுக்கு எத்தகைய மன உளைச்சல் ஏற்படுமோ?"
"ஏதாவதொரு பெண் அந்தக் கிழிந்து போன சுடிதாரினை கவனித்து அதனை இந்தக் கடையில் விற்கிறார்களே என்று எண்ணினால், கடைக்கு அல்லவா கெட்ட பெயர்!"
இந்த மன ஓட்டங்கள் தேவகியின் உடலை நடுங்க செய்தன. நான்காவது மாடியில் இருந்து தரைத்தளத்திற்கு படியில் இறங்க இறங்க அவளுக்கு உடலில் பதட்டமும் கால்களில் நடுக்கமும் ஏற்பட்டது. நான்காவது மாடியில் சன்னமாக ஒலித்த "டர்" ஒலி, ஒலிபெருக்கியின் சத்தத்தைக் கூட்டுவது போல், இறங்க இறங்க, அதிகரித்துக் கொண்டே வருவதைப் போல் தோன்றியது. தரைத் தளத்தில் கால் வைத்தவுடன், அரசியல் கூட்டங்களில் ஒலிபரப்பப்படும் ஒலிபெருக்கியின் ஒலி போல காதுகளில் பலமாக ஒலிப்பது போல் தோன்றியது. தேவகி தனது காதுகளைப் பொத்திக் கொள்வதற்காக, தனது கைகளைக் காதுகளை நோக்கி நகர்த்தினாள்.
"என்னம்மா! கடையில் ஓடுற சினிமாப் பாட்டு சத்தம் அதிகமா இருக்கா? குறைக்கணுமா?" என்றார் அருகில் இருந்த ஒரு வயதான விற்பனைப் பிரதிநிதி.
தேவகியின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய தொடங்கியது. தேவகியால் மேலும் நடக்க முடியவில்லை. தேவகி மறுபடியும் மாடியை நோக்கி செல்ல எத்தனித்தாள். மறுபடியும் அதே கிழிந்த சுடிதாரை வாங்கலாம் என சுடிதார் பகுதியை நோக்கி விறு விறுவென நடை போடலானாள். மறுபடி எண்ண ஓட்டங்கள் மனதில் ஓடத் தொடங்கின.
"ஐயோ! நான் புதிய சுடிதாரைத் தேர்ந்தெடுத்து உடைமாற்றி மறுபடி வெளி வருவதற்குள் 10 நிமிடங்கள் ஆகிவிட்டனவே. இந்தப் பத்து நிமிடத்திற்குள் அந்தச் சிகப்பு சுடிதாரை வேறு ஒரு பெண் எடுத்திருக்கக் கூடாதே! "
உடனே, அருகில் இருந்த மின் தூக்கியை நோக்கி நடந்தாள். அங்கு கூட்டம் அலைமோதியது. நேரத்தை வீணாக்க விரும்பாமல் மாடிப்படிகளைப் பயன்படுத்தி விறுவிறுவென மாடிப்படிகளில் ஏறினாள். அவளைக் கண்ட மற்ற நபர்கள் என்ன அவசரம் இந்த பெண்ணிற்கு என்று எண்ணினர்.
மற்றவர்கள் எண்ணங்களைப் பொருட்படுத்தாமல் வெகுவேகமாக நாலாவது மாடிக்குச் சென்று, சுடிதார்க் குவியலை நோக்கி வேகமாக நடந்தாள். அங்கு முன்பு கண்ட அதே விற்பனைப் பிரதிநிதி நின்று கொண்டிருந்தாள்.
தேவகி பரபரப்பாக வருவதைப் பார்த்து விற்பனைப் பிரதிநிதி பதட்டத்துடன் கேட்டாள். "என்னக்கா? எதையாவது தவற விட்டுட்டீங்களா?" என்றாள் விற்பனைப் பிரதிநிதிப் பெண்.
"ஆமாம். என் கைல இருக்கிற மாதிரி இன்னொரு செகப்புச் சுடிதார் இந்தக் குவியல்ல இருக்கு. அது எனக்கு வேணும்" என்றாள் தேவகி.
தேவகி அந்தச் சுடிதார்க் குவியலில் சிகப்புச் சுடிதாரைத் துழாவிக் கொண்டிருக்க, மறுபுறம் விற்பனைப் பிரதிநிதியும் அத்தகையச் சுடிதாரைத் தேடினாள். அந்தச் சுடிதார் மறுபடி தனக்குக் கிடைக்க வேண்டும் என்று தேவகி தனது இஷ்டதெய்வமான முருகனைப் பிரார்த்தித்தாள்.
விற்பனை பிரதிநிதியின் கைகளில் அந்தச் சிகப்புச் சுடிதார் அகப்பட்டது. தேவகி அந்த விற்பனைப் பிரதிநிதியை நன்றியுடன் நோக்கினாள்.
"இந்தாங்கக்கா. நீங்க கேட்ட செகப்புச் சுடிதார். ஆனா இங்க இடுப்பு பாக்கெட் கிட்ட கிழிஞ்சிருக்கு. நாங்க இத ரிட்டன் பண்ணிடறோம்" என்றாள் விற்பனைப் பிரதிநிதி.
"இல்லம்மா. அத ரிட்டன் பண்ணாதீங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, அத நான்தான் தவறுதலா கிழிச்சிட்டேன். அது என்னோட தப்புதான். அத நானே வாங்கிக்கிறேன். வீட்டு கிட்ட டெய்லர் கிட்ட கொடுத்து தச்சு போட்டுக்கிறேன்" என்றாள் தேவகி.
விற்பனைப் பிரதிநிதி தேவகியைப் பாராட்டும் விதமாக பார்த்ததும், தேவகியின் உடம்பில் இருந்த படபடப்பு நீங்கி, உடம்பிலும் பழைய தெம்பு வந்து குடி கொண்டது. மனம் குளிர்ந்திருந்தது. கிழிந்த சிகப்புச் சுடிதாரை எடுத்துக் கொண்டு நல்ல சிகப்புச் சுடிதாரை அங்கேயே வைத்துவிட்டு தேவகி பொருட்களுக்கு இரசீது போடும் இடத்தை நோக்கி நடை போட்டாள்.
இப்பொழுது அவளது காதுகளில் அந்த "டர்" சத்தம் கேட்கவில்லை.