சிறுகதை: ஜனநாயகி!

சிறுகதை: பள்ளி மாணவிக்குத் தொல்லை கொடுத்தவனை சமயோசிதமாய் கூண்டில் அடைத்த பெண்
சிறுகதை | woman journalist
சிறுகதை | woman journalistImage credit: Chatgpt
மதுரை முரளி

மதுரை முரளி. பன்முக எழுத்தாளர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கதை, கவிதை, கட்டுரை, நாடகங்கள் எழுதி வருகிறேன். மதுரை வானொலியில் 30 நாடகங்கள் ஒளிபரப்பாகியுள்ளது. 400 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். பல பிரபல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. தினமலர் "என் பார்வையில்" கட்டுரைகள், மூன்று புதுக்கவிதைப் புத்தகங்கள் உட்பட 12 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். www.pustaka.co.in ல் 11 வலைதள மற்றும் 5 ஒலிப்புத்தகங்கள் உள்ளன. சமூகநல சிந்தனைகளே என் நோக்கம்."

Updated on: 
MM strip
MM strip

தமிழகமெங்கும் பரபரப்பைப் பற்ற வைத்த படத்துக்கான முதல் நாள் காட்சி. 'விசில்'களுக்கு இடையே வந்த ‘நாயகன்’.

ரசிகர்களோடு ரசிகையாய் காளீஸ்வரி. ஒரு பெண் பத்திரிகையாளராய், அவளைத் திரைப்பட விமர்சனம் எழுத வாய்ப்பு தேடி வந்ததும், "கரும்பு தின்னக் கூலியா?" இதுதான் காளீஸ்வரி தன்னுடைய பத்திரிகை நிர்வாகியைப் பார்த்துச் சொன்ன வசனம்.

தியேட்டர் முழுவதும் பற்றிக்கொண்ட திரைப்படக் காட்சி மற்றும் வசனங்கள் காளீஸ்வரியையும் மனசுக்குள் காயப்படுத்தியது.

"அநீதி கண்டு ஆக்ரோஷம் கொள்...!" கூடவே, மகாகவியின் "ரௌத்திரம் பழகு" என இரண்டு வீர வசனங்கள் மண்டைக்குள் இறங்கியபடியே படம் முடிந்து, தன் வண்டியின் இன்ஜினைப் பற்ற வைத்தவள், சற்று ஆக்ரோஷமாய்த் திருகி ஓட்டத் தொடங்கினாள்.

சில நிமிடத் தொலைவில் குறுக்கிட்டது ஒரு பள்ளி வளாகம். சிறியதும், பெரியதுமாய்ப் பெண் குழந்தைகள் சாலைப் போக்குவரத்தில் தத்தளித்து, சாலையோர நடைபாதைக்குக் கரை சேரும் காட்சி.

"அடடா.. இந்த இடத்தில ஒரு டிராபிக் சிக்னல் இருந்தா, குழந்தைகளுக்கு ரொம்பப் பாதுகாப்பு. இதை ஒரு பதிவாப் போடலாமே?" யோசித்தவள்,

அடுத்த கணமே வண்டியை ஓரங்கட்டிவிட்டு, வாகனப் போக்குவரத்து நெருக்கடியை 'க்ளிக்'னாள் தன் மொபைலில்.

திரைப்படக் காட்சிகள் காளீஸ்வரியின் மனதில் இன்னும் மையமாய் ஓடிக்கொண்டிருக்க, 'சட்'டென தன் கண் முன்னே நடக்கும் நிகழ்வில் பாதிக்கப்பட்டு, வினாடி நேரம் விக்கித்துப் போனாள்.

சாலையைக் கடக்க நடுங்கிய ஒரு பெண் மாணவியை, கலர் கண்ணாடி அணிந்த இளைஞன், கூலாய்க் கைப்பிடித்து உதவிய விதம், இவளுக்குள் ஓர் வித்தியாசத்தைக் காட்டியது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நாத்தனார் முடிச்சு!
சிறுகதை | woman journalist

இளைஞனின் வலது கரம் மாணவியின் கரத்தைப் பிடித்த நிலையில், இடது கரமோ இடுப்பை அணைத்தபடி நடக்க, மாணவியின் நடையில் பலவிதத் தடுமாற்றங்கள். கண்களில் ஒரு மிரட்சி.

சில நிமிடங்கள் காத்திருந்த காளீஸ்வரி, மாணவி பள்ளிக்குள் சென்றதும், 'விறுவிறு'வென அவனை நெருங்கினாள்.

"மிஸ்டர், உதவி செய்கிற போர்வையில ஒரு பிஞ்சுக் குழந்தைகிட்ட நீ நடந்தது சரியா? உன்கூடப் பிறந்தவங்க யாரும்..?...” என  உரக்கக் கேட்க

"நிறுத்து. என்ன, இல்லையான்னு கேட்கறியா? பெரிய ‘ஜனநாயகி’ன்னு நினைப்போ? ஹா..ஹா." நக்கலாய் அவன்.

"ஏய், ஏய்... உன் வார்த்தை எல்லை மீறுது. உன்னைய மாதிரி ஜென்மங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்க ..." முகத்தைத் திருப்பிக்கொண்டவள், மீண்டும் தன் வண்டிக்குத் திரும்பிப் புறப்பட்டாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நிமிஷக்கதை!
சிறுகதை | woman journalist

மனதுக்குள் ஓர் உறுத்தல்.

“அவனை அப்படியே மாட்டி விட்டிருந்தா, அடுத்து தப்பு செய்ய மாட்டானே. அவசரப்பட்டு வந்திட்டமோ?..” என்ற சிந்தனையுடன்  ஓட்டிய காளீஸ்வரி வண்டியை, பின்னால் இருந்து வந்த வண்டி ஒன்று 'சட்டென மோத, சற்றே தூர வீசப்பட்டாள். தலையிலிருந்த தலைக்கவசம் தெறித்து ஓடியது.

இடப்பக்கம் சரிந்த வண்டி, சீறிக்கொண்டு கிடந்தது இன்னும் உறுமலுடன். "அடடா, கவனமா ஓட்ட வேணாமா? வலதுபக்க சிக்னல் போட்டுட்டு, இடப்பக்கம் திரும்பினா எப்படி?..." என்றவாறே காளீஸ்வரி வண்டியின் சிக்னலைத் துரிதமாய் மாற்றிவிட்டு, வண்டியை நிமிர்த்தி ஸ்டாண்டு போட்டவன், காளீஸ்வரிக்கு உதவுவதற்கு கையை நீட்ட, வலதுகை சிராய்ப்புக் காயத்துடன் வலியில் முனகியவளாய் எழுந்த காளீஸ்வரியின் கண்களில் அதே... ‘அவன்’ நக்கல் சிரிப்புடன்.

"இங்கே பாரு, அமைதியா, நல்லபடியா உன்வழியை மட்டும் பார்த்து நட. வீணா, என் வழியில குறுக்கிட்டு, உன் உடம்பைப் புண்ணாக்கிகாதே. இப்பப் புரியுதா நான் யாருன்னு உனக்கு?.. " என்றவன், தொடர்ந்து, தரம் தாழ்ந்த சொற்களில் திட்டிவிட்டு மீண்டும் சிரித்தான் வக்கிரமாய்.

தடுமாறி தானே எழுந்த காளீஸ்வரியின் கண்களில் கோபம், வெறுப்பு ஒரு கூட்டணியாய். காளீஸ்வரிக்கு உடல் வேதனையைக் காட்டிலும், மனவேதனை மலையளவாய்.

சுற்றுமுற்றும் பார்வையை ஓட்டியவள், ஒரு தீர்மானத்தோடு பேசினாள்.

"நீ தப்பு மேல தப்பு பண்ணுறே. உன்னோட செயலுக்கு நிச்சயம் சிக்குவே...!" என்றவளாய், வண்டியை அப்படியே விட்டுவிட்டு,

சிறுகதை |  Woman journalist
சிறுகதை | Woman journalistImage credit: Gemini AI

மனம் குறிப்பிட்ட திசையில் சமயோசிதமாய் நடக்க, பின் தொடர்ந்தவன் "அங்கே" தொட்டான் இவளையும்.

மேலும் இரண்டடி நடந்தவள், "சடக்" கென திரும்பி, பின் தொடர்ந்தவனை இரண்டு அடி கொடுத்தாள்.

அப்படியே சற்று அருகிலிருந்த டிராபிக் சிக்னல் கேமராவை நோக்கி பாவனையாய் அவனின் நடத்தையை செய்கையில் காட்டி, அலைபேசியில் அவசர அழைப்பு விடுக்க, 'சிங்கப்பெண்கள் அதிரடிப்படை’ அடுத்த சில நிமிடங்களில் அங்கே ஆஜர். தொடர்ந்து நடந்த பல நிமிட விசாரணையில், அவனது குற்றம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

கூடுதலாய், காளீஸ்வரியின் தகவல் அடிப்படையில், பள்ளி முன் இருந்த கேமரா காட்சிகளும் கூடுதல் சாட்சியாக, உடன் சிங்கக் கூண்டிற்குள், குள்ள நரியாய் அடைக்கப்பட்டான் அவன்.

மறுநாள், காளீஸ்வரியின் சமயோசிதம் மற்றும் மன உறுதி வெகுவாய் முதல் பக்கத்தில் பாராட்டப்பட்டது. அன்று காளீஸ்வரியே அனைத்து  நாளிதழ்களிலும், "ஜனநாயகி" ஆனாள்.