
“அத்திம்பேர்” என்ற எருமைக்குரல் மூன்றாவது தெருவிலிருந்து கேட்டது.
சத்து என்ற அசத்து எமஹாவில் புயல் வேகத்தில் வந்து கொண்டிருந்தான்.
வீட்டு வாசலில் எமஹாவை மல்லாக்கப்போட்டு ஆணியை செவுத்திலிருந்து புடுங்குவது போல் எடுத்தான்.
மேற்கண்ட ஜந்து என் வீட்டு சர்வாதிகாரியின் தம்பி அதாவது என் மைத்துனன்.
“பாலாஜி என்னை பிக்கப் பண்ண ரயிலடிக்கு ஏன் வரலை?” கோபமாய் கேட்டான்.
“என்னடா மரியாதை இல்லாத பேசறே?” நானும் சீறினேன்.
“மச்சான் வரான்னு அழைக்க வரலை உனக்கெல்லாம் என்னய்யா மரியாதை?”
“ஏன்டா நீ என்ன சம்பந்தியா மாலை போட்டு மரியாதையா கூட்டி வர? மாசாமாசம் அமாவாசை வரா மாதிரி வரே. என்னை விட ரூட் உனக்குதான் நல்லா தெரியும்...”
“பாத்தீங்களா திமிரை? இது அக்கா மாலு காதில் விழுந்தா என்னாகும் தெரியுமா?” மிரட்டினான்.
“விழுந்தாச்சு. உங்களை மாட்டுக்கொட்டகையில் சாணி அள்ளி ராட்டி தட்டச்சொன்னால் நீங்க என் தம்பியோட மல்லுக்கட்டிக்கிட்டு நிக்கறீங்க!” மாலு விரட்டினாள்.
“போ, மாலு. மாடு இன்னும் சாணியே போடலை,” என்றேன்.
“போடற நேரம் தான். பின்னாடியே நில்லுங்க சூடா சாணி போட்டா சூட்டோட சூடா ராட்டி தட்டிடலாம். நேரத்தோட வேலை பாருங்க.” சத்து விரட்டினான்.
“கொஞ்சம் கூட சுறுசறுப்பு இல்லாத மனுஷன்,” மாலு குறைபட,
“எல்லாம் நீ கொடுத்த செல்லம். சரியா வேலை செய்யலைனா வீட்டுக்குள்ளே விடாதே!”
“வாயி என்ன வாயி? ஏன்டா நீதான் வேலைக்கு போகலைனு உன் பெண்டாட்டி உன்னை துரத்தி விட்டுட்டா...”
“வேலை! வேலை! சாமார்த்தியம் உள்ளவன் வேலைக்கு போவானா? சொந்தமா பிஸினஸ் செய்து நாலு பேருக்கு வேலை தருவான்.”
“சரிடா. அது வேலை. சாமார்த்தியம் உள்ளவனுக்கு. உன்னைப்பற்றி பேசு."
“பாருக்கா உனக்கு முன்னாடியே என்னை காயப்படுத்தரார். இப்ப நான் செய்யப்போற தொழிலை பற்றி கேட்டால் அசந்துடுவே!”
“கொஞ்சம் இரு. என்னங்க எங்க வாயை பாத்துக்கிட்டு. போய் சாணி அள்ளுங்க...” என்று விரட்டினாள் மாலு.
“வேலை சாமார்த்தியம் உள்ளவன் சகவாசத்தை விட மாடுங்க சகவாசம் மேல்...” என்றபடி இடத்தை காலி செய்தேன்.
“அக்கா அவரை விரட்டாதே! பிஸினஸில் அவருக்கும் பெரும் பங்கிருக்கு” என்று பெருங்குண்டை தூக்கிப்போட்டான்.
“டேய் என்னை விட்டுடு” கையெடுத்து கும்பிட்டேன்.
“அது எபடி விடறது? வர லாபத்தை அப்படியே கொண்டு போற அளவுக்கு நான் கல் நெஞ்சக்காரனில்லை.”
“பாத்தீங்களா? நீங்க கரிச்சு கொட்டினாலும் சத்து உங்க மேல பாசம் வைச்சிருக்கறதை...”
“பாசம் இல்லைடி வேஷம்... ஆட்டுக்கு அலங்காரம் பண்றது அழகு படுத்த அல்ல வெட்டத்தான்.”
“இவரு கிடக்கார்டா நீ நியூ பிஸினசை பத்தி சொல்லு.”
“ஈஈ பேஸ்ட்.”
“ஈஈ பேஸ்ட்டா? என்னடா பேத்தறே?"
"பாலாஜிக்கு புரியாது. கொஞ்ச நேரம் கேளுங்க...” நக்கல்.
“அப்பவும் புரியலைனா?“
“பானட்டையும், டிக்கியையும் மூடிக்கிட்டு சொன்னபடி வேலையை செய்யுங்க” மாலு கடுப்படித்தாள்.
“அப்படி போடு. அக்கா. நாம மட்டும் பிஸினஸ் பத்தி பேசுவோம். பாலாஜி ஸ்லீபீங் பார்ட்னர்.”
“சரி நான் தூங்கப்போறேன்,” கழட்டிக்க பார்த்தேன்.
“பாருக்கா இவருக்கு இவ்வளவு தான் அறிவு. நாம பிஸினஸ் பேசுவோம். ஈஈ பேஸ்ட் யூஸ் பண்ணினால் எங்கே வேணாலும் வாய் விட்டு சிரிக்கலாம்!”
“அதுக்கென்ன இப்போ?”
“ஐயோ அக்கா பாலாஜி மாதிரி பேசறியே! ஈஈ பேஸ்ட்டை நாம தயாரிக்கறோம்." குரலில் சகுனியின் சாயல்.
“அப்படியா? சூப்பர்” மாலு உற்சாகத்தி்ல் குதித்தாள்--–
“ஈஈ பேஸ்ட் தயாரிக்க லைசென்ஸ், ஃபார்முலா, இடமெல்லாம் வேணுமே...” வாயை கொடுத்தேன்.
“கேட்டேனா? உங்களை கேட்டேனா?” கடுப்பானான் சத்து.
“நான் சித்தர் மூலிகையெல்லாம் ஆராய்ந்து ஃபார்முலாவை ரெடி பண்ணிட்டேன். லைசென்ஸ் பாலாஜி பேரில் எடுத்தாச்சு. இப்ப இடம் பற்றி கேட்டால் எப்படி?” அழுதான் சத்து.
அழுகை சென்டிமென்ட் தான் லேடீஸ் பக்கம் ஒர்க்-அவுட் ஆகுமே.
“நான் நம்ம வீட்டு கொல்லை வராண்டாவை தரேன்... “என்றாள் வள்ளல் மாலு.
“அதுக்கு வாடகை தருவேன். கட்டாயம் வாங்கிக்கனும்,” சத்து சொல்ல, வெடிச்சிரிப்பு வந்தது எனக்கு.
என்னை ஒரு மாதிரியாய் பார்த்தபடி வராண்டாவில் செட்டிலானான் சத்து.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து பூஜை போட்டு ஏதோ ஒரு மெஷினை ஓடவிட்டான் சத்து. உழைப்பாளி தான்.
“ஐயோ! நில நடுக்கம்! வீட்டை விட்டு வெளியே ஓடு” என்று ஓடி வந்தவளை,
“பயந்தாங்குளி ஒன்னுமில்லை, பேஸ்ட்தயாரிக்கற சத்தம்” என்றேன்.
“என்னடா இப்படி நாறுது! என்ன மூலிகைடா யூஸ் பண்றே?” அரைத்தூக்கத்தில் கேட்டாள் மாலு.
“அது மட்டும் ரகஸ்யம்,” என்றான் பந்தாவாய்.
“ஏதுடா இந்த மெஷின்?” என்று கேட்டேன்.
“புதுசு. நேத்து ராத்திரி வாங்கினேன். குளிச்சிட்டியா அக்கா?”
“இன்னும் பல்லே தேய்க்கலை”
“விளங்கும் வீடு.. போய் பல்லை தேச்சிட்டு வா. பாலாஜி, நீங்களும் தான்.” அன்புக்கட்டளையிட்டான்.
“என்னடா வரவேற்பு பலமாயிருக்கு?”
“நீங்க குளிச்சிட்டு வாங்களேன் சொல்றேன்...”
“சொல்லுடா ரொம்ப ஓவரா பண்றே” மாலுவும் சேர்ந்து கொள்ள,
“சரி அப்புறம் உங்க இஷ்டம். தலைவிதி” என்று முனக,
“என்ன தலைவிதிங்கறே?” பகீரென்றது.
லிப் ரீடிங் பண்றான். ஜாக்ரதை உஷாரான சத்து “தலைவி இஷ்டம்னு சொன்னேன்” சமாளித்தவன், “இந்த புது மிஷின் இம்போர்ட்டட். 17லட்சம். அத்திம்பேர் அக்கா பேரைச்சொல்லி 17லட்சத்திற்கு ஒரு செக் போடுங்க...” அசால்டடா கேட்டான்.
“போடா. பதினேழு பைசாவுக்கு கூட தரமாட்டேன்” என்றேன். “பாருங்க அக்கா வர லாபத்தை நானா தூக்கிட்டு போகப்போறேன்?” நடித்தான்.
“அதானே. லட்சத்த பற்றி கவலைப்பட கூடாது. நம்ம லட்சியத்தைப்பற்றி மட்டுமே கவலைப்படனும். நான் செக் தரேன்டா” என்று செக்கை சூடாய் தர, “அக்கா நீ இருக்கவேண்டிய இடமே வேற. மகாலக்ஷ்மியை மார்வாடி கிட்டே அடகு வைச்சா மாதிரி உன்னைப்போய்… இவரிடம் நிரந்தரமா விட்டுடாரே” என்று பாராட்டி, "வலது கையாலே விளக்கேற்றி பிசினசை ஆரம்பி...” என்றான்.
மாலு ஸ்டைலாய் விளக்கேற்ற, செல்லில் ஃபோட்டோ எடுத்தான் சத்து!
“முதல் பேஸ்டை நீங்க வாங்குங்க” என்று என்னிடம் நீட்ட, “தேங்க்ஸ்” என்று வாங்க, "பணம் கொடு” என திட்ட, பையிலிருநத கடைசி 2000 ரூபாவை நீட்டினேன். என்னை ஒரு மாதிரி பார்த்து “சரி பேங்கில் மாத்திக்கறேன்,” என்றான்.
ஒருவழியாக, கடைகளுக்கு சப்ளை முடித்து, ராத்திரி வெளியூர்களுக்கு சப்ளை பண்ண கிள்ம்பினான் சத்து.
அடுத்த நாள் ஊர்பூரா மொத்தமா என் வீட்டில்!
“என்னய்யா பேஸ்ட் இது? தேய்ச்ச உடனே வாய் வெந்து போயி, ரெண்டு பேர் செத்துப்போய் இருபது பேர் வாந்தி மயக்கம்...?”
“அப்படியா? எனக்கு ஒன்னும் தெரியாது. எல்லாம் சத்துதான்” என்றேன்.
“உன் பேரும் அட்ரஸூம் தானே பேஸ்டில் போட்டிருக்கு.”
அதற்குள் ஒருவன் “கொல்லையில் புது மெஷினிருக்கு. அதை உடைங்கடா” என்று கத்த,
கூட்டம் உள்ளே போய் அதை உடைக்க, “ஐயா! மெஷின் 17 லட்சம்” என்று கதறினேன்.
குறுக்கே வந்த மாலு சிசுவேஷன் புரியாமல் “என்ன ஊரே திரண்டு வந்து பேஸ்ட் கேட்கறீங்க. அவ்வளவு நல்லாவா இருக்கு?” என்று கேட்க, சிலபேர் மாலுவை பிடிச்சு தள்ள கண் கொள்ளா காட்சி!
திடீரென செல்போனில் சத்து...
“அத்திம்பேர் பேஸ்டில் ஒரு சின்னத்தப்பு நடந்து போச்சு. எருக்கம்பூவும் கள்ளி பூவும் அதிகமா போச்சு. என்ன வேணா நடக்கலாம்.. நான் முதல்சுற்று பணத்தோட எஸ்கேப் ஆயிட்டேன்.. நீங்க போலீஸில் சரண்டராயிடுங்க. அது தான் உங்களுக்கு நல்லது,” என்றானே பார்க்கலாம்!
கீழே கிடந்த மாலுவை எரிச்சலாய் பார்த்தேன். வேறு வழி?