சிறுகதை: வித்யா – விபா!

Short Story in Tamil
Husband and wifeஓவியம்; தமிழ்
Published on

- கெளரி சாம்பமூர்த்தி

வித்யா, விபா இருவருக்கும் காம்பஸ் வைத்து வரைந்தது போன்ற வட்ட முகம். பளபளக்கும் விழிகள், அடர்ந்த, அழகாக மேல் நோக்கி வளைந்த கரு இமைகள், இயற்கையாகவே நீண்டு வளைந்த புருவங்கள், லாங் ஹேர், 5 அடி 7 அங்குல உயரம், மெல்லிய உடலமைப்பு, இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல், உதடுகளில் எப்போதும் எதோ ஹாஸ்யத்தை ரசிக்கும் பாவம்… இருவரும் ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகளா என்றால், இல்லை. வித்யா 2 வயது மூத்தவள். MCA முடித்துவிட்டு வேலையில் இருக்கும் நவநாகரீக யுவதி. விபா கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபைனல் இயர் மாணவி .

“நீயே மாப்பிள்ளை பார்த்துக்கலாம்னு தோணுது, வித்யா. யு கேன் அண்டர்ஸ்டான்ட் யுவர் ஜெனரேஷன் பெட்டெர் தான் ஐ கேன்“, என்று அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்ட, அதன் முக்கியத்துவம் நன்குணர்ந்த புத்திசாலி. “இல்லப்பா, ஐ வில் வெயிட் ஃபார் யுவர் மூவ்“, என்றாள் சிம்பிளாக.

ஜரூராக வேலையை ஆரம்பித்தார் தந்தை முகுந்தன். குரு பலன் கிட்டி விட்டது, வேளை வந்துவிட்டது, எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவர் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை விக்ரம் எல்லோரையும், முக்கியமாக வித்யாவை வெகுவாகக் கவர்ந்துவிட்டான்.

“நவ் கம்ஸ் தி மோஸ்ட் இன்டெரஸ்டிங் பார்ட்… பர்சேஸ் ஆஃப் ஜவுளி அன்ட் ஆக்செசரீஸ்...”, என்று அ‌ன்று ஆரம்பித்த விபா ஒரு மாதம் ஓயவில்லை.

“கல்யாணத்துக்கு நீ லீவு போடுணும், ஸோ, நான் பாத்துக்கறேன் எல்லாத்தையும்“, என்றவாறு, புடவை, நகைகள், பத்திரிகை அனுப்ப வேண்டிய லிஸ்ட், வேளா வேளைக்கு விதமான மெனுக்கள், ரிடர்ன் கிஃப்ட் ( கிரேடு பிரகாரம் ) , எ‌ன்று கட்டு சாதக்கூடை வரை பட்டியலிட்டு ஆர்கனைஸ் பண்ணிவிட்டாள் விபா. இது பெரிய விஷயமா, செலவு செய்யப் போவது அப்பாதானே என்று தோன்றலாம். ஆனால், தனக்கென்று ஒதுங்கியிருந்த நகைகளிலிருந்து நீலக்கல் செட்டை, “இது என் பரிசு வித்யாவுக்கு “, என்று கண்ணில் நீர் மல்க அம்மாவிடம் கொடுத்தபோது , அப்பா, அம்மா, வித்யா எல்லோரும் கலங்கித்தான் போனார்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: 'என்னைப் பார்த்து நிலவு சிரித்தது'!
Short Story in Tamil

கல்யாணம் முடிந்து மாலை ரிசப்ஷன். மாப்பிள்ளை விக்ரமின் அம்மா ருக்மிணி, “பெண்ணுக்கு பெண்ணா, பிள்ளைக்குப் பிள்ளையா பிரமாதப் படுத்திட்டியே, அக்கா கல்யாணத்தை! வா, நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துப்போம். யாருக்கு கொடுத்து வெச்சுருக்கோ!”, என்று அவளை இழுத்துச் சென்று கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்து, மனம் நெகிழ்ந்து விட்டாள் சம்பந்தி அம்மாள்.

இதோ ரிசப்ஷன் முடிந்து விட்டது. ‘அப்பாடா’ என்று ஒரு நாற்காலியில் உட்கார்ந்த விபா, நிமிர்ந்து மேடையில் நின்ற ஜோடியை சற்று நிதானமாய்க் கவனித்தாள். அக்கா வித்யா நல்ல நிறம். கிளிப் பச்சை வண்ணத்தில் நீல பார்டர், ஆங்காங்கே நீல வண்ண டிசைன் போட்ட காஞ்சிப் பட்டுப் புடவை. இவள் செலக்ட் செய்ததுதான். அதனுடன் இவள் பரிசாக அளித்த நீலக்கல் நகைகள் நல்ல மேட்ச்.

ஆனால் அருகே ஜோடியாக நின்ற விக்ரம் அதைவிடச் சிறந்த மேட்ச். பெரிய ஆணழகன் இல்லை. ஆனால் பார்த்த மாத்திரத்தில் ‘எ மேன் ஆஃப் கேரக்டர் ‘ , ‘ எ ஃபோர்ஸ் டு ரெகன் வித் ‘, என்ற வியப்புத் தோன்றி, எதிராளி தன்னை ஜாக்கிரதைப் படுத்திக் கொள்வான். சராசரிக்கும் சற்று கூடுதலான உயரம், மாப்பிள்ளை என்பதால் அதீதமாக இல்லாமல் , மிதமாக உடுத்தி இருந்த பாங்கு, விருந்தினரோடு கைகுலுக்கிப் பேசிய நேர்த்தி, அக்கா எதாவது சொல்லும் போது சற்று குனிந்து கவனித்துக் கேட்ட ஸ்டைல், இரு பக்கத்து விருந்தினர்களையும் ஒரு சேர கவனித்த திறமை...

இதையும் படியுங்கள்:
சிரி(சிறு) கதை - நாரதர் சபதம்!
Short Story in Tamil

பார்க்கப் பார்க்க, மனதில் இனம் புரியாத உணர்ச்சி… அக்கா பிரிந்து செல்லப் போகிறாள் என்பதால் அல்ல இந்த வேதனை… இது வேறு எதோ…

எஸ்… ஐ ஆம் ஜெலஸ்.. சீச்சீ , எனக்கா, பொறாமையா ? அதுவும் வித்யா மீதா ? விபாவால் தன்னையே நம்ப முடியவில்லை.

இனம் புரியாத ஏக்கம்… எதிர்காலத்தைப் பற்றிய பலத்த சிந்தனை. கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு யாருடனும் சரியாகப் பேசாமல், ஒரே மூச்சாக படிப்பில் கவனம் செலுத்திப் பரீட்சையை முடித்தாள் விபா. நல்ல வேலையும் கிடைத்தது.

வித்யாவாம் வித்யா.. அவள் என்ன பெரிய இவளா… அவளை விடச் சிறந்த வேலை எனக்கு கிடைத்து விட்டது. இன்னும் நன்றாக லைஃப்ல செட்டில் ஆகப் போகிறேன். அவளை விட உயர்ந்தவளாகப் போகிறேன்…. என்று விபாவின் மனம் கருவிக் கொண்டிருந்தது.

Husband and Wife
Husband and Wifeஓவியம்; தமிழ்

விபா வேலைக்குப்போக ஆரம்பித்ததும் கல்யாணம் கல்யாணம் என்று நச்சரித்த மனைவியிடம், “இப்பதான் பெரிய செலவா பண்ணியிருக்கோம் வித்யாவுக்கு. விபாவுக்கு ஓரிரு வருஷங்கள் போகட்டும்னு யோசிக்கறேன்“, என்றார்.

ஆனால் விபாவின் அதிர்ஷ்டம், அவர்கள் சற்றும் எதிர்பாராமல் ஒரு பெரிய இடத்திலிருந்து அவளைப் பெண் கேட்டார்கள். சிங்கப்பூர் சென்றிருந்த வித்யா- விக்ரம் ஊர் திரும்புமுன் நிஷாந்த் குடும்பத்தினர் பெண் பார்த்து, கல்யாணத்துக்கு நாள் குறித்து, எல்லாம் ஜெட் வேகத்தில் நடந்தது.

விபாவின் மனம் துள்ளிக் குதித்தது. பார் வித்யா, பார்…! உன்னைவிட உசத்தி நான்! நிஷாந்த், விக்ரமைவிட அழகன்… யு எஸ் எஜுகேடட் … ஏகப்பட்ட செல்வாக்கு நிறைந்த குடும்பம்… கர்வமும், ஆணவமும் தலைக்கேறி, கல்யாண ஜவுளி வாங்க அடுத்த வார இறுதியில் போகலாமா என்று வித்யா கேட்ட போது, “எனக்கு அப்போ லீவு கிடைக்காதே. பரவாயில்லை விது, நாங்களே பாத்துக்கறோம்“, என்று விபா சொன்னது, அம்மாவுக்கு என்னவோ போல் இருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; எனக்கென்று என்ன தந்தாய் அம்மா...
Short Story in Tamil

கல்யாணத்துக்கு வந்து இறங்கிய வித்யா - விக்ரமிடம் சரியாக பேசக்கூட இல்லை விபா. அம்மா, தான் வாங்கிய ஜவுளி, நகைகளை வித்யாவுக்குக் காட்டிக் கொண்டிருந்தாள்.

அன்று மாலை ஆச்சரியம் காத்திருந்தது விபாவுக்கு. டெய்லி அவளோடு பேசும் நிஷாந்த், அன்று விக்ரமுடன் அரை மணி ஒரே அரட்டை! வியந்து போன விபா, “ஹவ் கம்? டு யூ நோ ஈச் அதர்? “, எ‌ன்று கேட்டதும், அப்படி அவள் கேட்பதற்காகவே காத்திருந்தவனாய், விக்ரம், “ ஓ எஸ் ! நாங்க திக் ஃபிரண்ட்ஸ். வித்யா உனக்கு நல்ல வரன் பார்த்து சொல்லணும்னு என்னை ராப்பகலா நச்சரித்து விட்டாள். அதுதான் இந்த அலையன்ஸுக்கே காரணம். நிஷாந்த் உன்னை எங்கள் கல்யாணத்தில் பார்த்திருக்கிறான். அவனுக்கும் உன்னைப் பிடித்திருந்தது. அவன் பெற்றோரிடம் பேசினோம். ஆல் வென்ட் ஸ்மூத்“, என்றான் விக்ரம்.

“எங்களிடமும் சொன்னார் விக்ரம். வித்யா ஒரே எக்சைட் ஆகி, பரஸ்பரம் தெரிந்தவர்கள் என்ற விஷயம் உனக்கு மட்டும் கடைசியில் தான் சொல்லணும். அப்பத்தான் த்ரில்லிங்கா இருக்கும்னு சொன்னா. நாங்க எல்லோரும் ஒப்புக் கொண்டோம், நிஷாந்த் உள்பட! “ , என்றார் அப்பா.

வியப்பும், குற்ற உணர்வும் பொங்கக் கல்லாய்ச் சமைந்த விபாவிடம், பாதி சாப்பாட்டிலிருந்து எழுந்த வித்யா, ஒரு பெரிய சூட்கேஸைத் தள்ளிக் கொண்டு வந்து, அப்படியே அதை விபாவிடம் நகர்த்தி, “உனக்கு எங்கள் வெட்டிங் ப்ரஸன்ட் , சிங்கப்பூர் சென்ற போது வாங்கினோம்“, என்றாள். விலையுயர்ந்த புடவைகள், ஜொலிக்கும் நகைகள், பெர்ஃபியூம், காலணிகள் முதற்கொண்டு வாங்கிக் குவித்திருந்தனர்.

இதையும் படியுங்கள்:
தடங்கல்களைக் கண்டு தளராதீர்கள்..!
Short Story in Tamil

“எதுக்கு வித்யா இதெல்லாம்? “, என்றவளைக் கையமர்த்தி,

“பின்ன என்ன… என்னைப் பிரிந்த ஏக்கத்தில், நீ யாருடனும் சரியா பேசறது கூட இல்லையாம். அப்பா, அம்மா வருத்தப்பட்டாங்க. அப்படிப்பட்ட என் தங்கைக்கு இதுகூட செய்யமாட்டேனா?“

மனம் நெகிழ்ந்து, அழுது, சிரித்து, பின் சாப்பாடு முடிந்து அனைவரும் தூங்கப் போன பின், சிட் – அவுட் டில் தனியே அமர்ந்திருந்தாள் விபா .

“என்னம்மா கல்யாணப் பொண்ணு, இப்படித் தனியா…?”, என்று வாஞ்சையுடன் விசாரித்த அப்பாவிடம்,

இதையும் படியுங்கள்:
சிறுகதை: உறவுகள் மேம்பட!
Short Story in Tamil

“அப்பா, வரன் பார்த்து என் எதிர்காலம் நல்லா அமையணும்னு நெனச்ச வித்யாவைப் பார்த்து நான் ஆத்திரப்பட்டேன்.. சொல்லவே வெக்கமா இருக்கு …பொறாமைப்பட்டேன்…”, என்று விக்கி விக்கி அழுதவளின் தலையை வருடிக் கொடுத்தார் முகுந்தன்.

“ டோன்ட் வொர்ரி விபா! முதல்ல தவறை ஒப்புக் கொள்ள ஒரு தைரியம் வேணும்…. அது உன்கிட்ட இருக்கறதே பாதி வெற்றி. சரி, நாமெல்லாம் சாதாரண மனுஷங்கதான். கோபம், ஆத்திரம், பொறாமை, பயம்னு எல்லாருக்கும் எல்லாம் உ‌ண்டு. அதை சமாளித்து மேலே வந்துட்டோம்னா லைஃப் பிகம்ஸ் ஹாப்பி அன்ட் ஈஸி “, என்றார்.

விபாவின் கண்ணீருடன் கரைந்து போனது, அவள் உள்ளத்தில் குடியிருந்த கள்ளம், கபடு, கசடு எல்லாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com