
பிரின்ஸிபிள் மாமியைக் கண்டால் எல்லோருக்கும் பயம் தான்!
‘ஏன் புடவைத் தலைப்பைச் சரியாக போட்டுக் கொள்ளவில்லை?’, ‘இந்த ரவிக்கையை இப்படியா தைக்கிறது, முதுகே முழுக்க தெரியற மாதிரி.
அததுக்கு ஒரு ரூல் இருக்கு! பிரின்ஸிபிளா இருக்க வேண்டாமோ’ என்று ஒவ்வொன்றுக்கும் ரூல் பேசும் மாமியிடம் எல்லோருக்கும் ஒரு மரியாதை உண்டு.
ஏனென்றால் மாமிக்கு மனசு தங்கம். ஒரு அவசரம் என்றால் கேட்காமல் வந்து உதவி செய்வாள்.
பணத்தட்டுப்பாடா, அது எப்படித்தான் மாமிக்குத் தெரியுமோ தெரியாது, முகத்தை வைத்துக் கண்டுபிடித்து கை நிறைய தேவையான பணத்தைக் கொடுத்து, ‘எப்ப சவுகரியமோ அப்ப திருப்பித் தா’ என்பாள். வட்டி எல்லாம் கிடையாது.
சமைக்கமுடியாத சங்கடமான காலங்களில் மாமி வீட்டிலிருந்து சாப்பாடு வந்து விடும்.
குழந்தைகளையும் சிறுவர்களையும் கூட்டி வைத்துக் கொண்டு பிரின்ஸிபிள்னா என்ன, ஒழுக்கம்னா எப்படி இருக்கணும் என்று மாமி வகுப்பு எடுப்பதால் பெண்களுக்கெல்லாம் மாமி மேலே ஒரு பிரியமும் கூட!
ஊரில் உபந்யாசகர் வந்து கதை சொல்ல ஆரம்பித்தாலோ மாமி முதலில் ஆஜர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, பிரசாதம் விநியோகிப்பது, தட்டு வசூல் எல்லாம் மாமி தான்!
அன்று பிரபலமான பாலக்காட்டு பாகவதர் வந்து பிரகலாதனைப் பற்றி அருமையாக உபந்யாசம் செய்தார். ஒரே கூட்டம். உபந்யாசம் முடிந்து விதவிதமான பிரசாதங்கள் விநியோகிக்கப்படும் நேரம் வந்தது. மாமி வழக்கம்போல கூட்டத்தை ஒழுங்கு படுத்த ஆரம்பித்தாள்.
‘இடிக்காம மெதுவாப் போகலாம். எல்லோருக்கும் பிரசாதம் நிறைய இருக்கு’ – மாமியின் குரல் கன ஜோராக ஒலித்தது. என்றாலும், இரவு சீக்கிரம் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற அவசரத்தால் பிரசாத க்யூவில் ஒரே களேபரம்.
ஒரு சிறுவன் அதில் மாட்டிக் கொண்டான். அவன் நசுங்குவது நிச்சயம்.
பார்த்தாள் மாமி. அவனைக் கையைப் பிடித்து நெரிசலிலிருந்து இழுத்துக்கொண்டு வந்து, க்யூவில் முதல் ஆளாக நிறுத்தினாள்.
“மாமி! நீங்க செய்யறது தப்பு! எல்லோருக்கும் ரூல்னா ரூல் தான்! நான் என் இடத்துக்கே போறேன். இப்படி முன்னாலே வரக் கூடாது. நீங்களே சொல்லித் தந்திருக்கிறீர்களே, பிரின்ஸிபிள்னா பிரின்ஸிபிள்தான் மாமி!” – சிறுவனின் பேச்சைக் கேட்டு கூட்டமே திகைத்தது.
அட பிரின்ஸிபிள் மாமிக்கே பிரின்ஸிபிள் சொல்லித் தர ஒரு குட்டிப் பையனா!
கூட்டத்தில் பலத்த சிரிப்பு எழுந்தது. பெண்கள் கூட்டத்தில் ஒரே ஆரவாரம்.
ஒருத்தி கமண்ட் அடித்தாள்: ”பிரகலாதன் சரித்திரம் கேட்டான் இல்லையோ, பையன். அப்பாவுக்கு மரியாதை கொடுத்தாலும் நாராயணா என்று சொல்வதை பிரகலாதன் விடலையே. ஒரு பிரின்ஸிபிளோட பிரகலாதன் இருந்ததைக் கேட்ட பையன் அப்படியே அதைக் கடைப்பிடிக்கிறானோ” – எல்லோரும் சிரித்தனர்.
“மாமி, போயும் போயும் ஒரு பையன்கிட்ட இப்படி தோத்துட்டேளே” - வம்பு வசந்தி கமெண்ட் அடித்து ஏளனமாகச் சிரித்தாள்.
“நான் எங்கேடி தோத்தேன். நான் தான் ஜெயித்தேன்” என்று கம்பீரமாக மாமி கூறினாள். அனைவரும் மாமியை வியப்புடன் பார்த்தனர்.
“தினந்தோறும் பிரின்ஸிபிள் பற்றி இந்தக் குழந்தைகளுக்குச் சொல்லித் தரேன் இல்லையா? அதுக்கு ஒரு பரிட்சை வந்த போது அதை எப்போதும் எங்கிருந்தாலும் கடைப்பிடிக்கணும் என்று நிரூபிச்சுட்டான் பாரு. சொல்லித் தந்த எனக்குதாண்டி வெற்றி. எதிலும் ஒரு பிரின்ஸிபளோடு பேசணும் இல்லையா?!”
மாமியின் பேச்சைக் கேட்ட சின்னப் பையன், “இது தான் பிரின்ஸிபிள் மாமி” என்றான்.
கூட்டத்தில் இருந்த ஆண்களும் பெண்களும் தலையை பலமாக ஆட்டி மாமி சொன்னது சரிதான் என்று கூவினர்.
வம்பு வசந்தியும்தான்!