

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது ராமனும் மைதிலியும் வீட்டைவிட்டு வெளியேசென்று.... வீடு சமையல் சாப்பாடு அவ்வளவே.. ராமன் ஸ்வாமிக்கு செய்யும் நித்திய பூஜையைக்கூட செய்யவில்லை... டிவி பார்ப்பது இல்லை... மனைவி மைதிலியுடன் கூடப் பேசுவதில்லை. கையில் ஆன்மிகப் புத்தகங்கள்... அதைப படிப்பது மட்டுமே பொழுதுபோக்கு.. அன்று ஓவியக் கண்காட்சி நடைபெறுவதாக பேப்பரில் படித்ததும் மைதிலிக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று தோன்றியது.
ராமனிடம் போகலாம் என்றதும் முதலில் மறுத்தாலும் பின்னர் மைதிலியின் வற்புறுத்தல் தாங்காமல் கிளம்பினார்... ஆட்டோவில் போய் இறங்கி ஒவ்வொரு ஓவியமாக பார்த்துக்கொண்டு இருந்தபோது மைதிலியின் நெடுநாளைய சிநேகிதி ரஞ்சிதா வரவே சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பியவள் ராமன் அருகில் இல்லாததை அப்போதுதான் கவனித்தாள்.
வீட்டுக்கு போயிருப்பாரோ என்று சந்தேகித்து பிறகு எதற்கும் ஒரு முறை அந்த ஹாலை ஒரு முறை பார்த்துவிட்டு வீட்டிற்குச் செல்லலாம் என்று நினைத்து கண்காட்சி நடக்கும் ஹாலைச் சுற்றி வந்தால் ஒரு ஓரத்தில் ராமன் தெரியவே ஓடினாள்.
''என்னங்க சாரிங்க.. என் ப்ரண்டு ரஞ்சிதா வந்திருந்தா... அதான் பேசிட்டு இருந்தோம்...'' என்று சொல்லும்போதுதான் கவனித்தாள் கணவன் ராமனின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுவதை.. திடுக்கிட்டுத் திரும்பினால் அந்த ஓவியம் அவள் கண்களில் பட்டது... தங்கள் அருமை மகள் ப்ரீத்தியின் ஓவியம். பார்த்ததும் மைதிலியின் கண்களின் ஓரத்தில் விழுந்த கண்ணீர் நினைவுகளை ஒரு வருடம் பின்னோக்கி அழைத்துச் சென்றது...
ராமனின் செல்ல மகள் ப்ரீத்தி காலேஜ் முடிந்து வேலைக்குச் சென்றதும் இருவரும் கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்றதும் மறுத்து விட்டாள் ப்ரீத்தி. அப்பா செல்லம் என்பதால் "அப்பா... உங்களோட அம்மாவோட இன்னும் இரண்டு வருஷம் இருக்கணும்.. அப்புறம் கல்யாணம் பற்றி பேசலாம் என்று மறுத்துவிட்டாள். என் பெண் ப்ரீத்தி பேச்சிற்கு மறுபேச்சு கிடையாது என்று ராமனும் மறுத்துவிட்டார். அவர் ஒரு ஓவியக்கலைஞர். ப்ரீத்தியின் பிறந்த நாளிற்குப் பரிசாக அவள்படத்தை வரைந்து கொடுத்திருந்தார்.
பிறந்ததிலிருந்து அவளின் பிறந்த நாளில் அவள் ஓவியத்தை வரைந்து பரிசாகத் தருவார்... அவளும் அப்பா வரைந்து தந்ததைப் பொக்கிஷம்போல வைத்திருந்தாள்.
திடீரென ஒரு நாள் காலை ஆபீஸ் சென்ற ப்ரீத்தி போன் பண்ணி ''அப்பா... நேரில் சொல்லத் தைரியம் இல்லை... எனக்கு எங்க ஆபீஸ்ல வேலை செய்யற ஒருத்தரைப் பிடிச்சிருக்கு... பேர் ஹரி.. இன்னிக்கு ஈவினிங் கூட்டிட்டு வரேன்... நீங்களும் அம்மாவும் பேசுங்க... ஆனா, நான் கல்யாணம் பண்ணினா ஹரியைத்தான் பண்ணிப்பேன்'' என்றாள்..
மாலை வந்தாள் ஹரியுடன் பேசினார்கள். ஹரியை வழியனுப்பிவிட்டு வந்த ப்ரீத்தியிடம், "ப்ரீத்தி எனக்கு இந்த லவ் மேரேஜ் பிடிக்கலை. உனக்கு நான் மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கேன். நம்ப சொந்தம்தான். நீ கல்யாணம் இப்போ வேணாம்னு சொன்னதால அவங்களைக் கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லி இருக்கேன். இந்தப் பையன் நம்ப சொந்தம். இதோ இரண்டு தெரு தள்ளி இப்போதான் வீடு மாறி வந்திருக்கான். கல்யாணத்துக்கு அப்புறம் உன்னைப் பார்க்கணும்னு தோணினால் ஐஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன்...
இதுக்கு ஓகே சொல்லும்மா என்று கையைப் பிடித்து சொல்லிய அப்பாவிடம் பதிலேதும் சொல்லாமல் அடுத்த நாள் ஹரியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு வீட்டுக்கு வந்த ப்ரீத்தியிடம் "எப்போ என் பேச்சைக் கேட்காமல் என் ஆசீர்வாதம் தேவை இல்லை என்று நினைக்காமல் உன் இஷ்டப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்தியோ அப்பவே என் மனசு சுக்கு நூறா ஒடைஞ்சுப்போச்சு... நீ போய் நல்லா இரு. ஆனா, இந்த அப்பா பேச்சைக் கேட்காத நீ இந்த வீட்டுக்கு வரவோ எங்களைப் பார்க்கவோ கூடாது" என்று அனுப்பிவிட்டார்..
ஒரு வருடம் ஆகியும் ப்ரீத்தி பல முறை போனில் செய்தது தவறு மன்னிச்சு எங்களை ஏத்துக்கோங்க என்று சொல்லியும் பதில் ஏதும் பேசமாட்டார்... ப்ரீத்தி போன் பண்ணினாலே தொடர்பைத் துண்டித்து விடுவார். மைதிலிக்கும் ப்ரீத்தி செய்தது மனதுக்கு ஒப்பவில்லை என்றாலும் பிறகு ஏற்றுக்கொள்ள மனம் சம்மதித்தது. ஆனால், கணவன் பேச்சை மீற முடியவில்லை.. காலம் மாறும் என காத்திருந்தாள்.
ஒரு வருடமாக வெளியே செல்லாமல் இருந்த கணவரை ஓவியக் கண்காட்சி நடைபெறுவதாகத் தெரிந்ததும் அவருக்கும் ஒரு மாறுதலாக இருக்கும் என அழைத்து வந்தாள். ''வந்த இடத்தில் இப்படி அழாதீங்க... வாங்க வீட்டுக்குப் போகலாம்'' என்று கணவனின் கையைப் பிடிக்க அவரின் கையைப் பிடித்து நின்றிருந்தான் ப்ரீத்தியின் கணவன் ஹரி...
"அங்கிள்.. நாங்க மன்னிக்க முடியாத தப்பு பண்ணிட்டோம்... எங்க வீட்டிலேயும் எனக்குக் கல்யாணம் முடிவு பண்ணிட்டதால ப்ரீத்தியைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயம்... ஆனா எங்கம்மா, அப்பா என் விருப்பம் தெரிஞ்சதும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க... ஆனா, ப்ரீத்தி இப்போவரைக்கும் உங்க சம்மதம் இல்லாமல் கல்யாணம் பண்ணிட்டோமேங்கற குற்ற உணர்ச்சியில ரொம்ப உடைஞ்சுப் போயிட்டா..
பைத்தியம் பிடிச்சமாதிரி ஆகிட்டா... இந்த ஓவியக் கண்காட்சி நடப்பதாக தெரிந்ததும் நீங்க அவளுக்குப் பரிசாக தந்த ஓவியத்தை வைத்து ஆன்ட்டிகிட்ட போன் பண்ணி உங்களை அழைச்சிட்டு வரச் சொன்னேன்.. நீங்க வரைஞ்ச உங்க பொண் ப்ரீத்தியை பார்த்தால் மனசு மாறும்னு தோணிச்சு.... அதுக்காகதான் காத்துகிட்டு இருந்தேன்... ப்ளீஸ் அங்கிள் மன்னிச்சுடுங்க.. வீட்டுக்கு வாங்க..
உங்க பொண் ப்ரீத்திகிட்ட உங்கம்மா அப்பாவோடதான் வருவேன்னு சொல்லி இருக்கேன்... ப்ளீஸ்..மன்னிச்சுடுங்க...'' என்று காலில் விழப்போன ஹரியைத் தடுத்து "சரி.. வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க.. என் பொண்ணு ப்ரீத்தியைப் பார்க்கணும்''னு சொன்ன அவரின் கண்ணீரைத் துடைத்த ஹரி சந்தோஷமாக இருவரையும் காரில் அழைத்துச் சென்றான்.
காலம் மாறும்... மனதை மாற்றும் என்ற மைதிலியின் நம்பிக்கை வீண் போகவில்லை. ஒரு வருட மௌன விரதம் இன்று முடியப்போகிற சந்தோஷத்தில் மன பாரம் முழுவதும் இறங்கி அவளும் மகளைக் காண சந்தோஷமாகக் கிளம்பினாள்.