

"ஆன்ட்டி", என அழைத்துக் கொண்டு எதிர் வீட்டுப் பெண் ராணி உஷாவின் வீட்டினுள் நுழைந்தாள். வாஷிங் மிஷினில் துணிகளை துவைக்க போட்டுக் கொண்டிருந்த உஷா "வா ராணி வனிதாவை பார்க்க வந்தயா" என அவளை வரவேற்றாள்.
"ஆமாங்க ஆன்ட்டி மாடல் எக்ஸாம் வருது அதான் ரெண்டு பேரும் சேர்ந்து படிக்கலாம்னு" என்று தயக்கத்துடன் கூறினாள் ராணி. "நம்ம வீட்ல வந்து படிக்கிறதுக்கு என்ன தாராளமா படிங்க, சேர்ந்து படிக்கும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் டவுட்ஸ் கிளியர் பண்ணிக்கலாம்" என்ற உஷா, "வனி, ராணி வந்திருக்கா பாரு" என மகளை அழைத்தாள்.
அப்போது மாடியறையில் இருந்த வனிதாவின் அண்ணன் மதன் தன் ஜிம் பாடி நன்கு தெரியுமாறு டைட்டாக ஒரு டீ ஷர்ட்டும் ட்ராக் சூட் அணிந்து கீழே இறங்கி வந்தவன் தன் அம்மா உஷாவின் அருகில் நின்று கொண்டிருந்த ராணியை ஸ்டைலாக ஒரு பார்வை பார்த்தான். அதன் பின் தன் அம்மாவிடம் "அம்மா நான் ஜிம்முக்கு போயிட்டு வரேன்" என கூறிவிட்டு ராணியைப் பார்த்து புன்னகைத்தபடி நகர்ந்தான்.
வனிதா தன் அறையில் இருந்த படியே, "ஏய் ராணி வாடி சீக்கிரம் படிக்க ஆரம்பிக்கலாம்" என ராணியை கூப்பிட்டாள். சற்று நேரத்தில் மார்க்கெட்டில் இருந்து காய்கறி வாங்கிக் கொண்டு வந்த உஷாவின் கணவர் வாசுதேவன் தன்மகள் வனிதாவின் அறையில் ராணியை பார்த்தவர், "என்ன எதிர்வீட்டு பொண்ணு ராணி இப்பலாம் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வரா நீயானா டிபன் காபின்னு பலமா உபசரிக்கிற என்ன நடக்குது இங்க" என்று பல்லைக் கடித்துக் கொண்டே உஷாவை பார்த்து கேட்டார்.
"அட என்னங்க நீங்க ராணியும் நம்ம மக வனிதாவும் கிளாஸ்மேட்ஸ். ஏதோ மாடல் எக்ஸாம் வருதுன்னு அதுக்கு சேர்ந்து குரூப் ஸ்டடி பண்ணலாம்னு ராணி இங்க வரா இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?" என வினவினாள் உஷா தன் கணவரிடம்.
"பார்த்து உஷா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா குரூப் ஸ்டடி பண்றேன்னு நம்ம பையன் மதனுக்கு ரூட் விட்ற போறா இந்த பொண்ணு. இவ வேற மூக்கு முழியுமா, பத்தாக்குறைக்கு நல்ல வெள்ளை தோலுமா வேற இருக்கா. இந்த பொண்ணுங்களயெல்லாம் நம்பவே முடியாது" என்றார் வாசுதேவன் கோபமாக.
"ஐயோ மெதுவா பேசுங்க ராணி காதுல விழப்போகுது" என்ற உஷா, "ஏங்க உங்களுக்கே நல்லதே நினைப்புல வராதா" என கணவரை கடிந்து கொண்டாள். "ம்... யாருக்கு எப்போ காதல் வரும்னே சொல்ல முடியாது. ஏன்னா அவங்க வயசு அப்படி" என்றார் வாசுதேவன் திரும்பவும்.
அப்போது ஜிம்மிலிருந்து திரும்பி வந்த மதன் பரபரப்பாக உஷாவிடம், "அம்மா ராணி இங்க தானே இருக்கா" என்று கேட்டவன், "அவளுக்கு கிழங்கு ரொம்ப பிடிக்கும்னு வனி கிட்ட அன்னைக்கு சொன்னா, வர வழியில கிழங்கு வித்துக்கிட்டு இருந்தாங்க. அதான் நம்ம வீட்டுக்கும் வாங்கிட்டு அவளுக்கும் கொஞ்சம் வாங்கிட்டு வந்தேன்" என கையில் இருந்த பையுடன் வனிதாவின் அறைக்குள் சென்றான் மதன்.
"பாரு பாரு நான் சொன்னா நீ இல்ல லொள்ளைன்ன... எனக்கு வர கோபத்துக்கு" என மனைவியிடம் சிடுசிடுத்தார் வாசுதேவன். "அவன் ஏதோ எதார்த்தமா வாங்கிட்டு வந்திருக்கான், நீங்க இல்லாததெல்லாம் கிளப்பி விடாதீங்க போங்க பேசாம" என கணவரை அடக்கினாள் உஷா.
"ஏதாவது விபரீதமா நடந்தா மூக்கை சிந்திட்டு என்கிட்ட வராத" என முணுமுணுத்தபடி நகர்ந்தார் வாசுதேவன். அவர் எதிர்ப்பையும் மீறி ராணி அவர்கள் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்தாள்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள் காலை உஷா தன்மகள் வனிதாவிற்கு காபி கொடுக்க அவள் அறைக்கு சென்றவள், "ஐயோ என்னங்க நாம மோசம் போயிட்டோங்க. நம்ம மக வனிதா எதிர்வீட்டு ராணியோட அண்ணன் மனோஜை கல்யாணம் செஞ்சுக்க போறேன்னு லெட்டர் எழுதி வைச்சுட்டு வீட்டை விட்டு போயிட்டாங்க என அலறி துடித்தாள்.
உஷாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த வாசுதேவனிடம் "அக்கம் பக்கத்து வீட்டு பொண்ணுங்க எல்லாரையும் நீங்க சந்தேகப்பட்டீங்க. ஆனா ஓடிப் போனது நம்ம பொண்ணுங்க " என புலம்பி அழுதாள் உஷா. "அட நம்ம மகளுக்கு இவ தூது சொல்ல வந்தவளா" என்று நினைத்த வாசுதேவன் தன் கணக்கு தவறானதில் செய்வதறியாது திகைத்து நின்றார்.