

சரியாக மணி எட்டு. நிவேதன் டிபன் சாப்பிட்டு முடித்தான்.
தன் இரு சக்கர வாகனம் ஸ்பெலண்டரை ஒரு முறை துடைத்து விட்டு வந்தான். அது அவனுக்கு ஒரு பெருமை; கௌரவம். அதன் மீது சிறு தூசு இருந்தால் கூட அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது. டிபன் சாப்பிட்டு வண்டி துடைத்து அலுவலகம் கிளம்பும் முன் சுடசுட ஒரு கப் காப்பி குடிக்கனும்.
சுமதியும் "காப்பி வெச்சிருக்கேங்க" என்றவள், உடன் கிச்சன் வேலைக்கு சென்று விட்டாள்.
வேகமாக வந்து காப்பியை உறிஞ்சினான். அவ்வளவுதான் வந்தது கோபம். "இது என்ன காப்பியா..? முன்ன பின்ன காப்பி குடிச்சிருந்தாதானே தெரியும்," என்றவன் காபி டம்ளரை தூக்கி எறிந்தான்.
"ஏய்.. சுமதி! என்ன செய்துட்டு இருக்கே. ஒரு நல்ல காப்பி போடத்தெரியாது. இடியட்..." என்று திட்டியதும் கோபத்துடன் வேகமாக வந்தாள் சுமதி.
"என்னங்க உங்க பிரச்னை?" என்று சாதாரணமாக கேட்டாள்.
"நீ கொடுத்தது காப்பியா இல்லை கஷாயமா?"
"காப்பினா காப்பி. கஷாயம்னு நெனச்சு குடிச்சா அது கஷாயம். ஆனால் என்ன, கஷாயம் உடம்புக்கு நல்லதுதான். ஆனா காப்பிதான் கெடுதல்." அவள் ஆணித்தரமாக கூறினாள்.
"ஏண்டி நான் எவ்வளவு சீரியஸா கேக்கிறேன். நீ என்னை கேலி செய்யறியா.." என்றவன் அவளை கை ஓங்கி அடித்து விட்டான்.
"ஏண்டா, உனக்கு மரியாதைனா என்னனு தெரியுமா?" அவள் கேட்டாள்.
"என்னது 'டா' வா?" மீண்டும் கை ஓங்கிய போது அவள் தடுத்தாள்.
"உனக்கெல்லாம் என்னடா மரியாதை வேண்டியிருக்கு. காப்பி சரியில்லைனா போச்சு. வேற போட்டுத்தர்றேன். அதை விட்டு என் சுய கௌரவம் கெடுக்கிறமாதிரி நான் காப்பியே பார்க்காதவள்னுட்டு என் குடும்பத்து கௌரவத்தையே அவமானப்படுத்தறே. அத்துடன் குடித்த காப்பி பிடிக்கலேன்னா ஒண்ணு வெச்சுடனும். நீ கொட்டிய காப்பியால எவ்வளவு கரை. அதெல்லாம் அவ்வளவு ஈசியா போகுமா. புத்தி கெட்டவனுக்கு வாழ்க்கை பட்டா இப்படித்தான் நடக்கும்னுட்டு என் தோழி ஏற்கனவே சொன்னாள். என்ன செய்யறது. என் அப்பன் பிசினஸ் லாஸ் ஆயிடுச்சு. ஏகப்பட்ட கடன். நீயோ ஒரு குடிகாரன். அத்தோடு கெடு நண்பர்கள் சகவாசம். உங்கப்பன் கடனை ஏத்துக்கறேன்னு சொன்னதும் உனக்கு என் திருமணத்தை முடிச்சி வெச்சாரு என் அப்பா. இது என் தலை எழுத்து. ஆனா அதை மீண்டும் மீண்டும் நீ எழுத விட மாட்டேன்."
அவ்வளவுதான் வந்தது கோபம் நிவேதனுக்கு. "ஏய், சுமதி உன்னை கட்டிண்டேன் பாரு. எனக்கு இதுவும் வேணும். நான் பண்ணையார் மகன். மெத்த படித்தவன். பெரிய கம்பெனியில் வேலை செய்கிறேன். ஏதோ எங்க அப்பாரு சொன்னாரேன்னு கட்டிகிட்டா இந்த ஆட்டமா போடறே" என்றவன்.. அவள் தலை முடியை பிடிக்க வந்த போது அவள் குரல் உயர்ந்தது.
"டேய்.. நீ உன் வண்டிக்கு கொடுக்கிற ஒரு அன்பு கரிசனம் மரியாதை இதெல்லாம் கட்டினவளுக்கு கொடுத்திருக்கியாடா? நான் உனக்கு ஒரு வேலைக்காரி. சமையல்காரி. அப்பக்கப்ப போதை தெளிஞ்சா பெண்டாட்டி. நீ ஒரு அவுச கத்தரிக்கா. சொத்த கத்தரிக்காயில் புழு இருக்கும். நாங்க சமைக்க மாட்டோம். ஆனா உங்க வீட்டுல எப்படின்னு தெரியலே. இதை பார். நீ இரண்டு வாட்டி என் மேல கை வெச்சிட்டே. நான் சாதாரண பெண் இல்லேடா. ரொம்ப படிச்சவ. பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில கைநிறைய சம்பளம் பெங்களூர்ல வாங்கிட்டு இருந்தவள்தான். என் படிப்பு பேரு சொன்னாலே உனக்கெல்லாம் தெரியாது. உங்கப்பாரு போட்ட நிபந்தனையில இதுவும் ஒண்ணு. ஆம் நான் திருமணம் ஆனதும் வேலைக்கு போகக்கூடாதுன்னு. சரின்னு எல்லாம் தியாகம் செஞ்சு பெத்தவனுக்காக ஒரு தியாகம். கட்டிகிட்டவனுக்காக ஆயுள் முழுதும் பெரும் தியாகம். இந்த லட்சணத்துல அடியும் உதையும் வேறு வாங்கனுமா..." இப்போது அவள் குரல் வேகமாக உயர்ந்தது.
"மிஸ்டர் நிவேதன். நீங்க செய்த கொடிய செயலுக்கு மன்னிப்பு கேட்கணும். அத்தோடு காப்பி கொட்டின இடத்தை எல்லாம் சுத்தப்படுத்திட்டு போகணும். பெண் அடிமை, கொடுமை அந்த காலம். இப்ப அது வன் கொடுமையில வரும். புரிஞ்சுகோங்க..." அவள் மறுபடியும் கிச்சனுக்கு சென்றாள்.
அப்போது அவன் நண்பன் பிரியன் வந்தான்.
"ஆகா.. என்ன வாசம் என்ன வாசம். அருமையான காப்பி. இது ஏன்டா கீழே கொட்டிக்கிடக்கு?" என்றான் நண்பன்.
"டேய் பேசாம போடா. இது காப்பியா?" என்றான் கோபத்துடன்.
நண்பன் கோபத்துடன் இருந்த நிவேதனை சமாதானம் செய்யும் பொருட்டு அவன் அருகில் வந்தான்.
"அட என்னடா காலையிலேயே சரக்கடிச்சிட்டியா. அந்த டேஸ்ட் இருக்கிறவரைக்கும் காப்பி டேஸ்ட் எப்படிடா தெரியும்?" என்று ஒரு லெட்சர் கொடுக்கவும் சட்டென எழுந்து வெளியே சென்று வண்டியை ஸ்டார்ட் செய்தான் நிவேதன்.
இன்று அலுவலகம் வரவில்லை என்பதை சொல்ல வந்தவனுக்கு நிவேதன் கோபத்துடன் சென்றது சற்று வருத்தம்தான்.
பின் அவன் மனைவியை சந்தித்தான். "மேடம் என்ன பிரச்னை? எங்க பெட்டியை எடுத்துட்டு கிளம்பிட்டீங்க.." என்றான் பதற்றத்துடன்.
"சார்..! பெண்கள் என்றால் கேவலம்னு நெனச்சி எதையும் செய்யலாமா? ஆணவத்தில் இருக்கும் உங்க நண்பருடன் யாருங்க வாழ முடியும். நாங்க என்ன சார் தியாகிகளா? எங்களுக்கும் இரத்தமும் ஓடுது. சூடும் இருக்கு. கை நீட்டி அடிச்சிட்டான் சார். நீங்க சொன்னப்பிறகுதான் தெரிஞ்சிது அந்த ஆளு காலையிலேயே சரக்கு அடிச்ச விஷயம். அப்ப எப்படி காப்பி டேஸ்ட் எடுக்கும். அதுக்காக காப்பியை தூன்னு துப்பி காபி டம்ளரையும் விட்டு எறிஞ்சதுல நீங்களே பாருங்க. எதித்தாப்பில இருக்கிற ஷோபா எப்படி ஆயிடுச்சுன்னு. சுவரெல்லாம் பாருங்க எப்படி கரையாயிடுச்சுன்னு. அதுக்குதான் நான் சொன்னேன். எல்லாத்தையும் தொடச்சி கிளீன் செய்துட்டு போன்னு."
இப்போது நண்பன் புரிந்து கொண்டான். அவள் பெட்டியோடு தன் தாய் வீடு செல்ல இருப்பதை.
"மேடம்.. ப்ளீஸ் எனக்காக பெட்டியை உள்ளே வையுங்க. நான் அவனை எப்படியும் புத்தி சொல்லி சொல்லி திருத்திவிடுகிறேன். சேர்க்கை சரியில்லாதவன். பணக்காரன். பெரிய வேலை வேறு. என்ன செய்யறது. அவன் உங்களை கட்டிக்கிறப்பவே நாங்க நெனச்சோம் அய்யோ பச்சைக்கிளியை இந்த காட்டுப்பூனைக்கு கட்டிவெச்சிருக்காங்களேன்னு. ஆனா நீங்க எப்படியும் அவனை சரி செய்துடுவீங்கன்னு நம்பினோம்" என்றவன் பேசிக்கொண்டே காப்பி சிந்திய இடத்தை எல்லாம் துடைக்க ஆரம்பித்தான்.
"அய்யோ..! வேண்டாம் சார். நான் துடைக்கிறேன்" என்றவள் அவனிடம் இருந்த துடைக்கும் துணியை வாங்க முயற்சித்த போது அவன் கண்கள் கலங்கின.
"மேடம்.. நிவேதன் எனக்கு அவ்வளவு உதவி செய்திருக்கான். நான் குடிக்க மாட்டேன். புகைக்க மாட்டேன். ஆனாலும், அவன் குரூப்பில் இப்பவும் இருக்கும் நண்பன் நான். அவன் செய்த உதவிக்கு கைமாறாக அவன் செய்த தவறை அவன் சார்பாக துடைப்பதுதானே நியாயம். ப்ளீஸ் என்னை துடைக்க அனுமதியுங்கள்" என்றதும் அவள் எதுவும் பேசவில்லை. பெட்டியை கொண்டு உள்ளே வைத்தாள். அவளும் ஒரு துணி கொண்டு மற்ற இடங்களை துடைக்க ஆரம்பித்தாள்.
"மேடம்.. உங்க மனசு மாறி நீங்க பெட்டியை கொண்டு வெச்சீங்களே அதுக்கு நன்றி" என்றான் பிரியன்.
"சார்..! உங்க மேல உள்ள மரியாதை அத்துடன் உங்க வார்த்தையில் இருக்கும் நம்பிக்கை. அதுக்கும் மேல இறைவன் படைப்பில் சபிக்கப்பட்ட இனமான பெண் இனம். நான் மிஞ்சி மிஞ்சி போனா எங்க அப்பா வீட்டுக்குத்தான் போகணும். பின் டைவர்ஸ் வாங்கணும். ஆனா வீட்டு சூழ்நிலை அப்படி இல்லையே. அடியோ உதையோ ஒண்ணு துணியனும். இல்ல அடங்கனும். நான் செய்தது இரண்டாவது. அவள் விக்கி விக்கி அழும் சத்தம் கேட்டு பிரியன் அதிர்ந்து விட்டான்.
"மேடம் சத்தியமா நான் நிவேதனை திருத்துவேன்" என்றவன் வேக வேகமாக காப்பி பட்ட இடம் முழுதும் சுத்தம் செய்து முடிக்கவும் "சார்.. இந்தாங்க.." என்றாள் சுமதி.
"ஓ... அருமையான காப்பி மணம்" என்றவன், "தேங்க்ஸ்" என்று கூறி ருசிச்சு ருசிச்சு குடிச்சான்.
"நான் வர்றேன் மேடம். என் வார்த்தையை நீங்கள் நிச்சயமாக நம்பலாம்" என்று கூறி புறப்படவும், "ஆம்..! ஆம்..! இந்த பெண்களுக்கே நம்பிக்கை ஒன்றுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது" என்று கூறி வழி அனுப்பினாள்.
இந்த மனநிலை பெண்களுக்கு பலமா இல்லை பலவீனமா? பலம் என்றால் பெருவாழ்வு. பலவீனம் என்றால் தலைவிதி. இதுதான் பெண்களின் இன்றைய நிலை.