சிறுகதை: M. மாயக் கிருஷ்ணன், S/o மாயாவதி!

Boy with Mom and Dad
Boy with Mom and DadImg Credit: Chris Nallaratnam
Published on

மை டியர் மாயக் கிருஷ்ணன்,

இக்கடிதம் உன் கையில் கிடைக்கும் போது, 5 வருஷங்களுக்கு முன் உன்னை வாரிசாக தத்து எடுத்து, சட்ட ரீதியாக உன் அப்பா ஆன முரளி கிருஷ்ணன், (மேனேஜிங் டைரக்டர் ஆஃப் தி கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனீஸ்) என்ற நான், உயிரோடு இருக்க மாட்டேன்.

நான் யார்? நான்தான் உன் அப்பா. சட்ட ரீதியாக மட்டுமல்ல, உயிரியல் ரீதியாகவும் நான்தான் உன் தந்தை. நீ பிறந்து வளர்ந்த போது, உன் கூட இருந்து கொண்டாடாமல், உன் வளர்ச்சியில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்ததால், இப்படிக் கடைசியில், என் லைஃப் முடியறப்போ, வெட்கம், மானத்தை விட்டு உண்மையை ஒப்புக்கறேன். மன்னிப்புக் கேட்க போறதில்லை. எனக்கு அந்த தகுதி இல்லை. கெஞ்சத்தான் முடியும். ப்ளீஸ் லிஸின் டு மை ஸ்டோரி, பிகாஸ், இது உன் அம்மா எனக்கு இட்ட கட்டளை.

சுமார் 55 - 60 வருஷங்களுக்கு முன்…..

கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பனீஸ் நிர்வாகி கோபி கிருஷ்ணனின் ஏக வாரிசு முரளி கிருஷ்ணன் என்ற MK, அதி புத்திசாலி. இவன் தலைமையில் பிஸினஸ் பத்து மடங்காக வளரும் என்று பிசினஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு கிருஷ்ணா ஃபேமிலிக்குத் தலை சிறந்த முத்தாய்ப்பு MK.

MK சிகரெட், மது தொட மாட்டான். மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர். 38 வயதாகியும் பேச்சுலர்… காரணம்: பெண்கள். சட்டையை மாற்றுவதைப் போல் கேர்ள் ஃபிரண்ட்ஸை மாற்றும் ப்ளே பாய். அவன் வாரி வழங்கும் பரிசுகளில் மயங்கிய பெண்கள் குறை சொல்ல மாட்டார்கள்.

அகஸ்மாத்தாக விமென் தொழில் முனைவோர் பார்ட்டி ஒன்றில், MK மாயாவதியைச் (மாயா) சந்தித்தான். மாயா டில்லி NIFT இல் ஃபேஷன் டிசைனிங் படித்துவிட்டு, சென்னையில் சிறிய 'புடீக்' நடத்திக் கொண்டிருந்தாள். ரெடிமேட் ஆடைகள் என்றாலே 'மாயா‘ஸ் என்று பிரபலம் ஆகி தென்னிந்திய டாப் 3 டிசைனர்களில் ஒருவர் எ‌ன்று 30 வயது கூட நிரம்பாத மாயா தேர்ந்தெடுக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்ட ஃபங்ஷன் அது.

தன் அப்போதய தோழி ஷைலஜா வற்புறுத்தியதால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த MK, அவளை ஒரு நாழி முன்பு வீட்டுக்கு அனுப்பிவிட்டு, டின்னர் முடிந்ததும், மாயாவுடன் ஒரு 5 மினிட்ஸ் பேசி, பின் வாரம் ஒருமுறை எதாவது ஷோ, டின்னர் என்று பழக ஆரம்பித்தான். அவன் மூலம் தன்னைத் தேடி வந்த பிஸினஸ் வாய்ப்புகளையும் , அவன் அளிக்கும் பரிசகளையும் மிக உறுதியாக நிராகரித்த போது, தான் சந்தித்த பெண்களிலேயை மாயா அதி அற்புதமானவள் என்று உணர்ந்தான்.

மாயா கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனாள். தோழிகள், ”MK இஸ் டிரபிள், வித் எ காபிடல் T ,” என்று எச்சரித்தும், காசிப் காலம்களில் , “‘மாய’ வலையில் MK? “ என்று நையாண்டி செய்யப்பட்டும், வீடு, வீடு விட்டால் ‘பூடீக்‘ என்ற வறண்ட வாழ்க்கையில், ஜிலீரென்று தென்றலாய் நுழைந்து, பின் சண்ட மாருதமாக மாறிவிட்ட MK யை, மெதுவாக, ஆனால் சர்வ நிச்சயமாய் விரும்ப ஆரம்பித்தாள் மாயா. சில மாதங்களுக்கு முன் ‘நீ இப்படி ஆவாய்‘ , என்று யாராவது சொல்லியிருந்தால் , அவர்கள் பேரில் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்திருக்கக் கூடியவள், இ‌ன்று MK வுக்குப் பிடித்ததை சமைப்பது, அவன் விரும்பும் வண்ணத்தில் உடுத்துவது, துபாய்க்கு ஷார்ட் ஹாலிடே செல்வது என்ற அளவுக்குப் போய் விட்டாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: எங்கேயோ இருந்து ஒரு குரல்!
Boy with Mom and Dad

அப்போதுதான் நடக்கக் கூடாதது நடந்தது: மாயா கர்ப்பமானாள்...

அன்று மாலை விஷயத்தைப் பகிர்ந்து கொண்ட போது அவளது குழந்தையை நிராகரித்து, கருவைக் கலைத்துவிட வேண்டுமென்று கடுமையாக அவன் பேசிய போது, அன்று வரை வானவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள், 'பொத்' என்று, பூமியில், அதுவும் படுகுழியில் தள்ளப்பட்டு விட்டதை உணர்ந்தாள். உள்ளக் கொந்தளிப்பு அடங்கியதும், தைரியமாக நிமிர்ந்து, “உன் தயவு இல்லாமல் குழந்தையைப் பெற்று வளர்க்க முடியும் என்னால். உன்னை சந்திக்கும் முன் நான் ஒன்றும் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கவில்லையே! என்ன ஒன்று, எல்லாரும் வம்பு பேசித், தூற்றி, வறுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள். உன்னுடன் சகவாசம் வைத்துக் கொண்ட தோஷத்துக்கு எனக்கு இந்த செருப்படி தேவைதான். ஆனால், எவ்ரி டாக் ஹாஸ் இட்ஸ் டே! இந்த உன் திமிருக்கு, நீ பதில் சொல்லியே ஆகணும்!”

“அப்போ பாத்துக்கலாம்! குட் பை அன்ட் குட் லக் டு யு! யு வில் நீட் இட்!” - சொல்லி விட்டானேயொழிய, மாயாவுக்குத் தான் செய்தது பச்சை துரோகம் என்ற மன உளைச்சல் தாங்காமல் MK , நம்பிக்கைக்குரிய தன் காரியதரிசி ராமரத்தினத்திடம் மாயாவின் நடவடிக்கைகளை கவனித்து தகவல் தெரிவிக்கப் பணித்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; ரெய்ட்!
Boy with Mom and Dad

வருடங்கள் உருண்டோடின. பல்வேறு விதங்களில் பிசினஸை விரிவாக்கம் செய்தான். ஒருநாள் கார் விபத்தில் சிக்கினான். அறுவை சிகிச்சை செய்த சர்ஜன், "குட்நியூஸ்: ஈஸியா 90 வயசு இருப்பே! பேட்நியூஸ்: முதுகெலும்பில் பலத்த அடி காரணமாக வம்ச விருத்தி செய்யும் திறனை இழந்து விட்டாய்.“

இனி சந்ததிகள் இல்லை என்றால் தனக்குப்பின் கம்பெனியின் கதி…? யோஜனையில் ஆழ்ந்தான். வக்கீலைப் பார்த்தான். காரியதரிசி ராமரத்னத்திடம் மாயாவின் முகவரியைப் பெற்று, அவளைத் பார்க்கச் சென்றான்.

சிறிய பங்களா. வாசல் மணி அடித்ததும் திறந்தான் ஒரு டீன்ஏஜ் வாலிபன். கட்டுக்கடங்காமல் துள்ளிய போமரேனியன் நாய்க்குட்டியைக் கயிற்றில் பிடித்துக் கொண்டு அவன் நின்ற தோரணை, “ஹூ ஆர் யு, ஸார்?” என்று ஸாஃப்ட்டாக இவனை வினவியவன், “கொயட், பூப்ஸி!” , என்று லேசாய்க் குரலை உயர்த்தி நாய்க்குட்டியை அதட்டினான். தோற்றத்தில், மேனியின் மினுமினுப்பில் , ஆங்கில உச்சரிப்பில் பெரியமனுஷத்தனம் மிளிர்ந்தது. ஒரு கணம் MK தன்னையே கண்டான். எத்தனையோ சொத்துக்களைத் தனதாக்கிக் கொண்டவனுக்குச், சொந்தம், உடமை என்பதன் முழு அர்த்தம் முதன்முறையாக விளங்கியது. உள்ளமும், உடலும் பரபரக்க, அவன் கையைப் பற்றிக் குலுக்கி , “ஹு ஆர் யு, யங் மேன்?” என்றான். பிடித்த கையை விடவில்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: முற்பகல் செய்யின்…
Boy with Mom and Dad

“ஐ ஆம் மாயக் கிருஷ்ணன்.“

“சன் ஆஃப்? “

“ஐ ஆம் M மாயக் கிருஷ்ணன்.”

ஒரு சிறு இடைவெளி. MK யின் மனம் துள்ளிக் குதித்தது. பின்,

“M மாயக் கிருஷ்ணன், சன் ஆஃப் மாயாவதி“, என்றான் அவ்வாலிபன். பின் லேசாய்த் தன் கரத்தை விடுவித்துக் கொண்டு, “உக்காருங்க. அம்மா இதோ வருவாங்க. எக்ஸ்க்யூஸ் மி.“ நாய்க் குட்டியுடன் வாக் கிளம்பி விட்டான்.

மாயா வந்தாள். மௌனம் சாதித்தாள். விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு, “இருவரும் கல்யாணம் செய்துக்கலாம். நம் பிள்ளையை சட்டப்படி வாரிசாக்கலாம்,“ என்றான்.

“கல்யாணம்…?“ குரலில் ஏளனம் தாண்டவமாடியது. “வீண் பேச்சு வேண்டாம் MK. நான் உன்னோடு வாழ முடியாது. நீ தான் அவன் அப்பா என்ற உண்மை, நீ உயிரோடு இருக்கும் வரை அவனுக்குத் தெரியக்கூடாது. இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து, ஆளாக்கிய பிள்ளையை, நீ இத்தனை சுலபமாகத் தட்டிக் கொண்டு போக நான் விடமாட்டேன். அதே சமயம், மாயக் கிருஷ்ணனுக்கு இந்த சொத்து, அவன் பிறப்புரிமை. அதை அவன் அடைய என்ன செய்யலாம்?”

"அவனை நான் சட்டப்படி தத்து எடுத்துக்கறேன். அப்போ சட்ட சிக்கல்களைத் தவிர்க்கலாம்.”

“ஆனால், எந்த நேரத்திலும் நீதான் அவன் பையலாஜிக்கல் ஃபாதர் என்ற உண்மை….”

“என் மூச்சிருக்கும் வரை நான் சொல்ல மாட்டேன். ஒரே ஒரு வேண்டுகோள்: என் சாவுக்கு அப்புறமாவது இந்த உண்மை அவனுக்குத் தெரியலாமில்லையா?”

“எனக்கு ஆட்சேபமில்லை."

“உன் கண்டிஷன் கொடூரமானது. ஆனால் தண்டனை நியாயமானதுதான். பிள்ளையை நல்லா வளர்த்திருக்கே. நான்தான் பாவி, அதிர்ஷ்டம் கெட்டவன், சாகிற வரை.“

இதையும் படியுங்கள்:
சிறுகதை; மனம் கொத்தி மரங்கள்!
Boy with Mom and Dad

“இரண்டாவது முறையாக அப்போ பிரிந்தோம் (கடிதம் தொடர்ந்தது)…. உன்ன தத்தெடுத்து பிசினஸ்ல ட்ரெயின் பண்ணிட்டேன். மாயாவும் போன வருடம் போய் விட்டாள். இனியும் என்னால உனக்கு உண்மையைச் சொல்லாம இருக்க முடியாது. தன் சொந்தப் பிள்ளையையே தத்தெடுத்த மானக்கேடு, உன் அன்பையும், அண்மையையும் இழந்த துர்பாக்கியம்... வாழ்ந்தது போதும். நான் சாகப்போறேன். என் காரியங்களை நீ செய்து முடித்ததும், இக்கடிதம் உனக்கு ராமரத்னம் மூலம் கிடைக்குமாறு ஏற்பாடு செய்திருக்கேன்.

ஒரே ஒரு வேண்டுகோள்: எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவாயா? ஐ வில் வெயிட் ஃபார் இட்.

அன்புடன் அப்பா.“

நீண்ட கடிதத்தை மறுபடி படித்தான் மாயக் கிருஷ்ணன்.

“M மாயக் கிருஷ்ணன், S/o முரளி கிருஷ்ணன்“ , என்று ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டான் .

திரைச் சீலை லேசாக அசைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com