
ஞாயிற்று கிழமை காலை நடை பயிற்சியை தொடங்கிட ஆயத்தமானார் ராமமூர்த்தி.
"வாக்கிங் போயிட்டு வரும் போது அப்படியே அரை லிட்டர் பால் வாங்கிட்டு வந்துருங்க. நம்ம பால்காரன் நேத்து சாயங்காலம் வரல. இப்போ காலையில வருவானா… தெரியல! வீட்ல எல்லோருக்கும் மார்னிங் காபிக்கு பால் வேணும்."
மனைவினுடைய அந்த உத்தரவு, அவருடைய வாக்கிங் போகிற உற்சாகத்தை பாதித்தது. அதனால் கொஞ்சம் சலிப்போடு 'சரி,வாங்கிட்டு வரேன்' என்றபடி வாசல் கதவை திறந்து, தெருவில் இறங்கி நடந்தார்.
அவர் வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்று சில மாதங்கள் ஆகின்றன. ஒய்வு பெற்ற பிறகு, இந்த மாதிரி வீட்டுக்கு தேவையான சில வேலைகளை அவர் செய்ய வேண்டியதாகிறது. அது சில நேரம் அவருடைய சுதந்திரமான போக்குக்கு தொந்தரவாக நினைத்தாலும், மனைவியின் பேச்சுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் அரைமனதோடு செய்வார்.
வழக்கமாக வீட்டிலிருந்து, அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற பூங்காவுக்கு சென்று, நாலு ரவுண்டு வேகமான நடைப்பயிற்சியை முடித்து விட்டு… அந்த பகுதியில் இருக்கும் நண்பர்களோடு ஊர் கதைகள், உள்நாடு, வெளிநாடு அரசியல் பற்றி பேசி விட்டு வருவார்.
ஆனால், இப்போது ஏனோ பூங்கா போக விருப்பம் வரவில்லை. அவருக்குள் ஒரு விதமான வெறுப்பு எழுந்தது. அதனால் நேராக போய் பாலை வாங்கிட்டு வந்து , மனைவியிடம் குடுத்து "இந்தா..பால்! காபி வெச்சு குடு" ன்னு விரைப்பா சொல்லிட்டு... அப்படியே பேப்பர் பார்த்துட்டு உட்காரந்திட வேண்டியதுதான் என்று முடிவு செய்தபடி, இரண்டு தெரு தாண்டி இருந்த கடைக்கு நடந்தார்.
இப்போதெல்லாம் கொழுப்பு நீக்கிய, நீக்காத பால் என்று இரண்டு மூன்று வகையில் பால் விற்கப்படுகிறது. அதில் பிரிமியம் என்கிற திக்கான பாலை அவருடைய வீட்டிலுள்ளவர்கள் விரும்புவதால், அதை மட்டுமே அவர் வாங்குவார். அந்த பால், மற்ற பாக்கெட் பாலை விட சற்று விலை அதிகம்.
கடை வாசலில் இவரை பார்த்த மாத்திரத்திலே, அண்ணாச்சி சொல்லி விட்டார்.
"சார், வாங்க... இன்னைக்கு இன்னும் பால் வரலையே... வேற ஏதும் வேணுமா?"
"ஓ.. அப்படியா... பால் மட்டும் தான் வேணும்... வர லேட்டாகுமோ?”
"அப்படித்தான் நினைக்கிறேன். வழக்கமா ஆறு மணிக்கெல்லாம் வர்ற பால் வண்டி இன்னும் காணலை!"
"சரி... வரேன்”
அந்த கடையில் இருந்து ஒரு இருநூறு மீட்டர் போனால், வலது பக்க திருப்பத்தில் இன்னொரு கடை இருக்கும். அங்கே போய் பார்க்கலாம் என்று நடந்தார்.
ஆனால் அங்கே போன போது... அந்த கடையில் பிரிமியம் பால் தவிர, மற்ற பால் பாக்கெட்கள் மட்டுமே நீல நிற பெட்டிகளில் இருந்தன.
"நம்ம கடைக்கு வர்ற கஸ்டமர் எல்லாம் இந்த பால் தான் வாங்குறாங்க. பிரிமியம் பால் அதிகம் போறதில்ல சாரே. அதான் அதிகமா வாங்கலை. இதுவே நேத்து சாயங்காலம் வந்த சரக்கு. இன்னைக்கு இன்னும் லோடு வரலை."
கடையில் இருந்த சேட்டன் சொன்னதை கேட்டதும் "ம்ம்... சரி" என்றபடி யோசித்தார்.
‘பேசாம பூங்கா வரைக்கும் போய் நடை பயிற்சி பண்ணிவிட்டு வந்து, பால் வாங்கி இருக்கலாமோ! இப்ப பால் கிடைக்கலைன்னு, வெறுங்கையோடு வீட்டுக்கு போனா... நாம் நினைத்த மாதிரி மனைவிகிட்ட வீராப்பா பேச முடியாதே’ என்று அவர் மனசு சொன்னது.
அதனால் அடுத்து 500 மீட்டர் தொலைவில் உள்ள வேலன் நகரில் இருக்கிற, கேப்டன் சார் கடைக்கு போய் பார்க்கலாம்; எப்படியோ தன்னுடைய நடைபயிற்சி இன்று இப்படி தொடர்கிறது என்று நினைத்தபடி நடந்தார்.
ராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்ற கேப்டன் ராஜனும் அவர் மனைவியும் அந்த சிறிய கடையை நடத்தி வந்தார்கள். கடைக்கு போன போது, பால் வண்டி வந்து திரும்ப போய் கொண்டிருந்தது.
"பிரிமியம் பால் இருக்கா? அரைலிட்டர் வேணும்" என்று இவர் கேட்டதும்...
“இதோ இருக்கே!” என்று எடுத்து கொடுத்தார் கேப்டன். பின்பு திரும்பி மார்க்கெட்டில் இருந்து வாங்கிட்டு வந்த வெங்காய மூட்டையை, காய்கறிகளை பிரித்து… அவற்றை பெட்டிகளில் அடுக்கி வைத்தார். ஓரிடத்தில் நிற்காமல் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டே இருந்தார்.
அவர் மனைவிக்கு கால் வலியால் நடக்க முடியாது இருப்பதால், அவங்க கல்லாபெட்டியில் உட்கார்ந்து கடையை கவனித்து கொண்டு இருந்தார்கள். ராமமூர்த்தி பாலுக்கு கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு, அந்த பெண்மணி, மீதியை அவரிடம் கொடுக்கும் போது...
"சார், ஹவ் ஏ நைஸ் சண்டே..." என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள்.
அந்த வாழ்த்தை சற்றும் எதிர்பாராத ராமமூர்த்தி, ஒருகணம் திடுக்கென்று அதிர்ந்து நின்று... பின்பு ,
“ஓ ...ஓகே…தேங்க் யூ“ என்று சொல்லி சமாளித்தார். வழக்கமாக (சேம் டு யூ) ‘உங்களுக்கும் வாழ்த்து’ என்றுதான் சொல்வார்கள். ஆனால் ராமமூர்த்தி சற்று தடுமாற்றத்தோடு நன்றியை மட்டும் சொல்லி விட்டு, அந்த பெண்மணியை பார்த்தார். அந்த பெண்மணி முகத்தில் புன்னகையோடு கூடிய தெளிவும் தெரிந்தது.
அவர் வீட்டுக்கு திரும்பி வரும் போது "ஹவ் ஏ நைஸ் சண்டே" என்கிற குரல் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இப்போது அவர் நடையில் ஒரு சுறுசுறுப்பும் உற்சாகமும் தொற்றிக்கொண்டது.
பணி ஒய்வு பெற்ற பிறகும், மனைவியை உட்கார வைத்து வேலை பார்க்கிற கேப்டனையும் அவரையும் மனதுக்குள் ஒப்பிட்டு பார்த்தார். அவர் மனசு உறுத்தியது.
அதுவரை அவருக்கு மனைவி மீது இருந்த கோபம், பாலுக்காக இவ்வளவு நேரம் ஏற்பட்ட அலைச்சல் குறித்த சலிப்பு எல்லாம் காணாமல் போய்விட்டது. ஒருவருக்கு நாம் சாதாரணமாக சொல்லுகிற வாழ்த்துரை, அவர்களுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை, மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அனுபவபூர்வமாக அன்று புரிந்து கொண்டார்.
அவர் வீட்டிற்குள் நுழைந்ததும், வீட்டு வேலையில் பரபரப்பாக இருந்த மனைவியிடம், பால் கவரை கொடுத்து விட்டு...
"குட்மார்னிங். ஹவ் ஏ நைஸ் சண்டே" என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.
தீராத வீட்டு வேலை மற்றும் பொறுப்புகள் காரணமாக… எப்போதும் உம்மென்று சோகமாக அல்லது இறுக்கமாக இருக்கும் அவருடைய மனைவியின் முகத்தில், இலேசான மகிழ்ச்சியுடன் கூடிய ஒரு புன்னகை அரும்பியது அவருக்குத் தெரிந்தது.