

எனக்கு பத்து வயது இருக்கும் போது எனக்கு பிடித்தது ஒரு பித்து. அதாவது பெட்டு வச்சுக்கணும்கிற பித்து. என்னுடைய பால்ய சிநேகிதன் ஆர். கே. அவனிடம் போய் என் மனக்குறையை சொன்னேன். அவன் சொன்னான் "கவலை படாதே சகோதரா..! நான் உன்னை மூர் மார்க்கெட்டுக்கு கூட்டி போறேன். உனக்கு ஒரு கிளி வாங்கி தரேன்."
மறுநாளே சொன்னதை செஞ்சான் ஆர் கே. மாம்பலத்திலிருந்து மின்சார ரயிலில் வித் அவுட்டில் பயணம் செய்து பார்க் ஸ்டேஷனை அடைந்தோம்.
ஆர். கே எப்போதும் டிக்கெட் எடுக்காமல் தான் போவான். பிடிபட்டால், 'என் அப்பா ஒரு ஸ்டேஷன் மாஸ்டர்' என்று சால்ஜாப்பு சொல்லி தப்பி விடுவான். அந்த காலத்தில் மூர் மார்க்கெட்டில் கிடைக்காத பொருளே கிடையாது. எல்லா வித பறவைகள், நாய் குட்டிகள், பூனை குட்டிகள், ஏன் குட்டி குட்டி ஆமை குஞ்சுகள் என எல்லா பிராணிகளும் கிடைக்கும்.
ஆர். கே. என்னை நேராக ஒரு கிளி வியாபாரியிடம் கூட்டிப் போனான். ஒரு கிளி ஒரு ரூபா தான். ஆளுக்கொரு கிளி வாங்கினோம். எங்கள் வேலை முடிந்து வீடு திரும்புகையில் கிளிகளுக்கு என்ன பெயர் வைப்பது என்றும் முடிவு செய்தோம். "உன் கிளி ஒரு ஆண். அதற்கு ஜானி என்று பெயர் வைப்போம். என் கிளி ஒரு பெண். அவளை ஜூலி என்று அழைக்கலாம்," என்றான் ஆர் கே. எது ஆண் எது பெண் என்று எப்படி தான் கண்டுபிடித்தானோ தெரியவில்லை. பெயர் வைத்தது மட்டுமல்ல அவை இரண்டுக்கும் கல்யாணம் செய்து சம்பந்திகளாகவும் முடிவு செய்து விட்டோம்.
வீட்டுக்கு வந்ததும் ஜானியை ஒரு காய்கறி வாங்கும் கூடையில் வைத்து தட்டில் தக்காளி ஒன்றை வைத்து சாப்பிட சொல்லி வேண்டினேன். ஜானி என்னை ஏளனமாக பார்த்ததே பார்க்கணும் ஒரு பார்வை! 'மனிதனாகிய உனக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம். எங்களுக்கு அப்படி இல்ல. சுதந்திரம் பஸ்ட்; சோறெல்லாம் நெக்ஸ்ட்' என்று சொல்லாமல் சொல்லியது ஜானி.
இதற்கிடையில் அப்பா வேறு கத்தோ கத்துன்னு கத்தினார். "கிளிக்கு ரெக்கை முளைச்சுடுதுன்னு தெரிஞ்ச உடனே ஆத்தை விட்டு அது பறந்துடணும்ன்னு," கர்ஜித்தார் சிவாஜி ரசிகரான என் அப்பா.
கிளி வந்து ஒரு வாரம் கூட ஆயிருக்காது. ஆர். கே யின் ஜூலி பேச ஆரம்பிச்சுட்டா. "குட் மார்னிங் றா.. குட்நைட்டுங்க றா.. ஐ லவ் யூடான்னு கூட சொல்றா" என்றெல்லாம் பீத்திக்கொள்ள ஆரம்பிச்சுட்டான் ஆர் கே.
என்னோட ஜானியோ ஒத்தை வார்த்தை பேச மாட்டேன்னு உம்மணா மூஞ்சியாகவே இருந்தான். எனக்கு அது ஒரு கௌரவ பிரச்னை ஆகிவிட்டது. காலையில் எழுந்ததுமே ஓடி அவனிடம் போய் 'Good Morning ஜானி' ன்னு சொல்வேன். அவனோ என்னை ஏளனமாக ஒரு பார்வை பார்ப்பான்.
செல்ல கிளியே மெல்ல பேசு.. தென்றல் காற்றே மெல்ல வீசு.. என்று பெற்றால் தான் கிள்ளையா.. சாரி பிள்ளையா என்ற MGR பட பாடலையும் பாடி பார்த்தேன்; நடக்கவில்லை.
என் பாட்டுக்கு பார்வையாலே பதில் பாட்டு வேறு பாடினான்.
'நீ இல்லடா என் பாசு
நான் இல்லடா உன் தாசு
சகிக்க முடிலடா உன் பாட்டு
கழுத வரப்போதுடா அதை கேட்டு"
நான் படும் அவஸ்தய பார்த்து என் தம்பி சொன்னான் "நீ ஒரு பெரிய தப்பு பண்ணிட்ட. ஆர். கே பெண் கிளிய தன்கிட்ட வச்சிண்டு ஒரு ஊமை கோட்டான் கிடா கிளியே உன் தலையில கட்டி பூட்டான். கடவுள் படைப்புகளில் பெண் பால் தான் பேச பிறந்தவை... தெரியாதா உனக்கு? ஒண்ணு செய். நீ உன் கிளியை, ஜானி 'வாக்கர்'ன்னு கூப்பிடு, ஏன்னா அவன் கூட்டுக்குள்ள அப்படியும் இப்படியும் நடக்க மட்டுமே செய்கிறான். ஆர். கே அவன் கிளியை ஜூலி 'டாக்கர்'ன்னு கூப்பிடட்டும்."
ஆர். கே வேற "உன்னோட சொன்னத சொல்லாத கிளிபிள்ளையை நான் என் மாப்பிள்ளையாக ஏற்க முடியாது. நான் ஜூலிக்கு வேற வரம் பாக்க போறேன்" என்று சொல்லி போயிட்டான்.
அன்று வழக்கம் போல வேண்டா வெறுப்பாக காலையில் எழுந்த உடனே, கிளி கூடைக்கருகே போயி "குட் மார்னிங் ஜானி" ன்னு சொன்னேன். பட்டென்று வந்தது ஜானியிடமிருந்து ஒரு பதில் - 'குட் மார்னிங்'. அப்படியே ஷாக்காகி போயிட்டேன் நான். அவன் குரல் அத்தனை இனிமை.
'பேசுவது கிளியா இல்லை; பெண்ணொருத்தி மொழியா?' என்ற MGR பாட்டுதான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. ஆனால், அதை பாடவில்லை. ஏனென்றால் அன்று Mind voice இல் திட்டினான் இன்று வாய் voice லேயே திட்டிவிடுவானே!