

பங்குனி வெயில் தகித்துக்கொண்டிருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் சாமிநாதனுக்கு இது வெறும் திருவிழா அல்ல; கடந்த ஐந்து வருடப் போராட்டத்திற்குப்பின் கிடைத்த வெற்றி.
"ஊர்ப் பிள்ளைகளுக்குப் பத்து ரூபா சாக்லேட் கேக்குத்தா திருட்டுப் பயலே! எங்கேடா களவாணித் தனத்தைக் கத்துக்கிட்ட?"
தன் பிறந்தநாள் அன்று கடையிலிருந்து சாக்லேட் எடுத்ததற்காகப் பூவரசு குச்சியால் விளாசிய அப்பா...
"இங்கே பாருடா! என்னதான் நம்ம கடைப்பொருளாக இருந்தாலும், என்னுடைய பொருளை அனுமதியின்றி எடுத்தால், அது திருட்டு. வாழ்க்கையில் நேர்மையா இரு. இல்லனா மனிதன் மதிப்பை இழந்துடுவான்" என்றார்.
இந்த வருடம் அவனைத் திருவிழாவிற்கு அழைத்துப் போவேன் என்று சொன்னதே பெரிய விஷயம்.
சாமிநாதன் சாதாரணச் சிறுவன் அல்ல. அவன் படிக்கும் அரசுப் பள்ளியின் 'மாணவத் தலைவர்'. தினமும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் செய்தித்தாள்களின் முக்கியச் செய்திகளை வாசிப்பதும், திருக்குறளுக்கு விளக்கம் சொல்வதும் அவனது வழக்கம்.
கடந்த வாரம்கூட, "கோயில் திருவிழாக்களில் சாதிப் பாகுபாடு காட்டக்கூடாது; உபயம் பொதுமக்களுக்குச் சொந்தமானது - சென்னை உயர்நீதிமன்ற ஆணை" என்ற செய்தியை அவன் கணீரென்ற குரலில் வாசித்தது இன்னும் அவன் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.
“யப்பா! இந்த வருஷமாவது வெண்ணெய் தாழிக்கும், தேருக்கும் என்னைக் கூட்டிக்கிட்டு போப்பா” என்று ஏக்கமாகக் கேட்டபோது, அப்பா பரமசிவம் ஒரு கண்டிஷன் போட்டார். “அங்க வந்து இது வேணும், அது வேணும்னு அடம் பிடிக்கக்கூடாது. ராட்டினம், சினிமா எல்லாம் கிடையாது. செருப்பு இல்லாமத்தான் நடக்கணும், சரியா?”
எல்லாவற்றுக்கும் சரி என்று தலையாட்டினான்.
அந்த நகரத்தின் 'வெண்ணெய் தாழி திருவிழா' அன்று காலை எட்டு மணிக்கே இருவரும் கிளம்பினார்கள். தார் ரோடு கனலாகக் கொதித்தது. வெறும் காலோடு நடப்பது சாமிநாதனுக்கு நரகமாக இருந்தது. ஓட்டமும் நடையுமாகச் சென்ற அப்பாவோடு ஈடுகொடுக்க முடியாமல் அவன் திணறினான்.
“இதுக்குத்தான் அப்பவே சொன்னேன். உனக்குச் சரிப்பட்டு வராதுன்னு” என்று வழியெங்கும் கடிந்துகொண்டே வந்தார் பரமசிவம்.
தேரடியை அடைந்தபோது, கோபாலன் சுவாமி வெண்ணெய் தாழி வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் மக்கள் பூவரசு இலையில் வாங்கப்பட்ட வெண்ணெயைக் கோபாலன் சாமி முகத்தில் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
“ஏம்பா எல்லோரும் பூவரசு இலையில் வெண்ணெய் வாங்கிச் சாமி மூஞ்சியில் அடிக்கிறாங்க?”
“நம்ம ஊர் கோனார்கள் இருக்காங்களா, அவங்க பால் கறந்து, மோர் ஆக்கி, வெண்ணெய் எடுத்து சாமிக்குப் படைப்பாங்க; அவங்க குல சாமிடா இது. கோபாலனுக்கு வெண்ணெய் அதிகம் பிடிக்கும். அதான் இன்னிக்கு வெண்ணெய் சாமிக்குப் படைக்கிறாங்க.”
“திருவிழாடா இது; ஆனா அவங்க சாதி மட்டும் கொண்டாடமாட்டாங்களா? பார்த்தல்ல, எல்லோரும் சாமி முகத்துல வெண்ணெய் அடிக்கிறாங்க? இந்தா நீயும் வெண்ணெய் அடி.”
சாமிநாதன் எறிந்த அந்தப் பூவரசு இலையில் உள்ள வெண்ணெய் சாமி வாயருகே போய் விழுந்தது. அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
கடைத்தெரு வரும் வழியில் நீர்மோர் பருகிவிட்டு, சாப்பாட்டுப் பொட்டலம் ஆளுக்கு இரண்டு வாங்கிக்கொண்டு, சாமி பின்னாடியே வெண்ணெய் தாழி மண்டபம் வருவதற்குள் மணி இரண்டாகி இருந்தது.
மாலை ஐந்து மணியிலிருந்து திருவிழாவின் முகம் மாறியது. வேன்களின் முகப்பில் சாதிப் பெயர்களைப் பெரிய பேனராகக் கட்டி, இளைஞர்கள் மது போதையில் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
சாமிநாதன் தன் பள்ளிப் பாடத்தையும், தான் வாசித்த செய்தியையும் நினைவுகூர்ந்து கேட்டான், “ஏம்பா, கோர்ட் தீர்ப்புப்படி எல்லா பக்தர்களும் ஒன்னுதான்னு ஸ்கூல்ல செய்தி வாசிச்சேன். ஆனா, இங்க என்னன்னா 'இது எங்க சாதி மண்டகப்படி'னு பேனர் கட்டிட்டு ஏன் இப்படிப் பிரிஞ்சு நிக்கிறாங்க? இது சட்டப்படி தப்பில்லையாப்பா?”
மளிகைக் கடை பரமசிவம் எரிச்சலானார். “இதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம். இதையெல்லாம் மாற்ற முடியாது. பேசாம வேடிக்கை மட்டும் பாரு,” என்று அதட்டினார்.
“செட்டியார் மண்டகப்படி முடிஞ்சு இப்ப கள்ளர் மண்டகப்படி. பாரு வாண வேடிக்கையை,” என்றார் பரமசிவம் சாமிநாதனிடம்.
இரவு மணி பத்து ஆகியிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது.
“பசிக்குதப்பா,” என்ற சாமிநாதனை கோபமாகப் பார்த்துவிட்டு...
“சரி வா, அந்த முத்தையா பிள்ளை ஹோட்டலுக்குப் போவோம்,” என்றார் பரமசிவம்.
பந்தலடி முத்தையா பிள்ளை ஹோட்டலில் கால் வைக்கக் கூட இடமில்லை. சாதாரண நாளிலேயே கூட்டம் அதிகமாக இருக்கும். திருவிழா என்றால் கூட்டம் இன்னும் அதிகம். தரமான டிபன், நியாயமான விலை; இதெல்லாம் ஒரு காரணம்.
சர்வர்கள் சட்டை நிறத்தை வைத்து 'பச்சைச் சட்டை 150', 'நீலச் சட்டை 200' என வாய்மொழிக் கணக்கில் சாப்பிட்ட பில்லுக்குக் குரல் கொடுத்தார்கள்.
கல்லாவில் இருந்த முதலாளி வாடிக்கையாளரின் முகத்தைக்கூடப் பார்க்க முடியாமல் பணத்தைக் வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்டிருந்தார்.
“ரெண்டு இட்லி, ரெண்டு பரோட்டா, ரெண்டு பூரி... அப்புறம் ரெண்டு காபி,” எனப் பரமசிவம் தாராளமாக ஆர்டர் செய்தார். வழக்கமாகச் செலவுக்குக் கணக்குப் பார்க்கும் அப்பா, இன்று இவ்வளவு தாராளமாக ஆர்டர் செய்வது சாமிநாதனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சாப்பிட்டு முடித்ததும், பரமசிவத்தின் கண்கள் ஒரு நிமிடம் சுற்றும் முற்றும் பார்த்தன. கல்லாவில் கூட்டம் அலைமோதியது. முத்தையா பிள்ளை சில்லறை எண்ணிக்கொண்டிருந்தார்.
“சாமி... மெதுவா எழுந்து வாடா... கையைப் பிடிச்சுக்கோ,” என்று ரகசியக் குரலில் சொன்ன பரமசிவம், பணம் கொடுக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக வெளியே நழுவினார்.
ஹோட்டலை விட்டுத் தள்ளி வந்ததும், அவர் ஒரு வெற்றிக் களிப்போடு சிரித்தார். “பார்த்தியாடா... எவ்ளோ கூட்டம்! நாம சாப்பிட்டதை அவன் கவனிக்கவே இல்லை. 150 ரூபாய் லாபம்!”
சாமிநாதன் அப்படியே நின்றான்.
அவன் பிஞ்சு இதயம் வேகமாகத் துடித்தது. அவன் பையில் அம்மா கொடுத்த 200 ரூபாய் நோட்டு நெருப்பாகச் சுட்டது.
“ஏன்டா நிக்கிற? வா போலாம்...”
“நான் ஸ்கூல்ல படிச்ச திருக்குறள் (202) ஒண்ணு இருக்குப்பா...
'தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்'
- அதாவது தீயதைச் செஞ்சா தீமைதான் வரும், அது நெருப்பை விடக் கொடியதுன்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு.
தீயவை தீய செயின் தீயே வரும்; நன்மை செயின் நன்மைத் துணை வரும். ஏமாற்றிச் சாப்பிட்டுப் பணம் கொடுக்காமல் வருவது ஒரு தீய செயல், அதன் பலனும் தீயதுதான். இன்னைக்கு நீங்க ஹோட்டல்ல காசு கொடுக்காம வந்ததுக்குத் தண்டனை யாரு கொடுப்பா?”
பரமசிவம் அவனை அதட்டி, “என்ன அதிகப்பிரசங்கித்தனமா பேசறே? அதான் எனக்குத் தெரியாம காசு கொடுத்துட்டே. பேசாம வா,” என்றான்.
“இல்லப்பா... அன்னைக்கு நான் ஒரு பத்து சாக்லேட் எடுத்ததுக்கே, 'திருட்டுத் தனம் மனுஷனோட மதிப்பைக் குறைச்சிடும்'னு சொல்லி பூவரசு குச்சியால அடிச்சீங்க.
இப்ப நீங்க பண்ணதுக்கு என்ன பேருப்பா? மத்தவங்களை ஏமாத்துறது தப்புன்னு, அப்படிச் செய்றவங்களைப் போலீஸ் பிடிக்கும்னு நியூஸ்ல படிச்சிருக்கேனே...
ஒருத்தருடைய உழைப்பை ஏமாத்துறதுதான் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்த நேர்மையாப்பா?”
பரமசிவம் சிலையாக நின்றார். சுற்றுப்புறத்தில் இரவு நேரக் குளிர்ச்சி பரவியிருந்தாலும், பகல் முழுவதும் வெறும் காலால் நடந்தபோது பாதங்களைச் சுட்ட அந்தப் பங்குனி வெயிலின் தகிப்பு, இப்போது அவர் மனசாட்சியின் வழியே வந்து உள்ளத்தைச் சுட்டது.
150 ரூபாய் மிச்சம் பிடித்த திருப்தியைவிட, மகனின் மதிக்கத்தக்க பார்வையை இழந்த வலி அவரை நிலைகுலையச் செய்தது.
சுவாமிமலையில் முருகன் தன் தந்தை சிவனுக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த கதை அவருக்குத் தெரியும். இன்று தன் மகன் செய்த இந்த 'அறம்' கலந்த உபதேசம் அவர் நெஞ்சில் தீயாக இறங்கியது.
கூட்டத்திற்குள் வேகமாக மறைந்து கொண்டிருந்த மகனின் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தார் பரமசிவம். அவர் கண்கள் மெல்லக் கலங்கின.
(நிறைவு)