சிறுகதை: உன்னை எண்ணாத நெஞ்சு நெஞ்சல்ல!

Tamil short story - Unnai ennatha nenjum nenjalla
Husband and Wife practicing bicycle
Published on

பணி ஓய்வு பெற்ற நெய்வேலி பாலுவை செய்தித்தாளின் ஒரு செய்தி, திடுக்கிடச்செய்தது. சென்னையின் ஒரு பிரபல மருத்துவமனையான 'ரவிச்சந்திரா' ஆஸ்பத்திரியின் நோயாளித்தரவுகள் அனைத்தும் 'ஹாக்' செய்யப்பட்டு இணையத்திருட்டு மூலம் பொதுவெளியில் உலாவி வருவதான செய்தி.

முக்கியமாக உடல் உறுப்பு தானம் அளித்தவர், பெற்றுக்கொண்டவர்களின் விபரங்கள் வெளியானது அவரை சற்று கவலை கொள்ள வைத்தது.

பாலுவின் மனைவி ருக்மணி ஐம்பத்து ஐந்து வயதான ஸ்கூல் டீச்சர். ஒரு நாள் சமையல் அறையில் முக்காலியின் மீது ஏறி நின்று மேலேயிருந்த பாத்திரத்தை எடுக்க முயன்று, எடுக்க முடியாமல் மயங்கி விழ, கோமா எனப்படும் நெடுந்துயிலில் ஆழ்ந்து ஒரு கட்டத்தில் முழு குடும்பத்தையும் மீளாத்துயரில் மூழ்கடித்து விட்டாள்.

அந்த பிரபல மருத்துவமனையில் இருந்த பெரும் டாக்டர்கள் பிரம்மப் பிரயத்தனம் பண்ணியும் ருக்மணியை மீட்க முடியவில்லை.

பாலு ஒரு கட்டத்தில் டாக்டர்களிடம் மன்றாடினார்.

“எப்படியாவது அவள் கண் விழித்தால் போதும்; ஒரு 'வீல் சேர்'ரிலாவது அவளை நான் வாழ்நாள் முழுக்க வைத்து அரவணைத்துக்கொள்வேன்.”

ஆனால் அங்கு நிலவிய டாக்டர்களின் நெடிய கனத்த மவுனத்தில் அவர் தன் கையறு நிலைமையை புரிந்துகொண்டார்.

“மிஸ்டர் பாலு! உங்கள் வொய்ஃப் அன்ஃபார்ச்சுனேட்லி இஸ் ப்ரெய்ன் டெட்,” என்று தோல்வியை வருத்தத்துடன் ஒப்புக்கொண்டனர்.

“நீங்கள் உறுப்பு தானம் செய்ய ஆசைப்பட்டால் உங்கள் மனைவியின் ஒரு சில உறுப்புக்களை தானம் செய்யலாம்! அதனால் உங்கள் மனைவி மற்றவர் உடலில் இன்னும் பல வருஷங்கள் வாழலாம்! யோசித்து சொல்லுங்கள். டேக் யுவர் டைம்” என்று தலைமை டாக்டர் விடை பெற்றுக்கொண்டார்.

பாலு ஒரு இஞ்சீனியர். இடதுசாரி. தொழிற்சங்கத் தலைவர். ஆசாரங்களில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாதவர்.

அமெரிக்காவிலிருந்து வந்திருந்த மகன், மகள் சம்மதத்துடன் ஆருயிர் ருக்குவின் அசைவற்ற உடலை தானமளித்து மனைவியின் வாழ்க்கையை மேலும் முழுமையாக்கினார்.

நாட்கள் நகர்ந்தன.

இருந்தாலும் முப்பது வருடங்கட்கு மேலாக வாழ்ந்த 'நீ பாதி-நான் பாதி' மனைவியின் நினைவுகள் அவரை அவ்வப்போது பின்னோக்கி இழுத்து சென்றன.

கல்யாணமான புதிதில் ருக்மணியை 'உருக்குமணி' என்று கேலி செய்தது; விசாலமான ரோடுகள் மற்றும் வீடுகளை சுற்றிலும் தோட்டங்கள் இருந்தாலும் கான்கிரீட் மைசூர் பாக்காக நிர்மாணிக்கப்பட்ட நெய்வேலி டௌன்ஷிப்பில் சைக்கிள் ஓட்டப்பழகும்போது அப்போது பிரபல பாடலாக இருந்த “ஓரம்போ! ஓரம்போ! ருக்குமணி வண்டி வருது” என்று அவளை கேலி செய்தது... என்று நினைவலைகள் வந்து சென்றன.

வானொலி மட்டுமே இருந்த அந்தக்காலத்தில் எப்படியோ ஏராளமான தமிழ் திரைப்படப்பாடல்களை மனனம் செய்து கொண்டு அவ்வப்போது மனதுக்குள் முணு முணுத்துக்கொண்டே வருவது ருக்மணியின் வழக்கம்.

பாடல் வரிகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அந்தப்பாடல் எங்கு ஒலிபரப்பபட்டாலும் அங்கேயே ஸ்தம்பித்து நின்று சந்தேகப்பாடல்வரிகள் பாடப்படும்போது அதை தீவிரமாக பற்றிக்கொண்டு மனப்பாடம் செய்து கொள்வது அவள் தனித்துவம்.

தான் படித்த 'பி. ஏ.' தமிழ் பட்டப்படிப்பு அவளுக்கு உறுதுணையாக இருந்தது இது போன்ற தமிழ்த்தருணங்களில்.

நூற்றுக்கணக்கான பாடல்கள் பிடித்திருந்தாலும் அவள் மனதை கொள்ளை கொண்ட பாடல் 'இதயக்கமலம்' திரைப்படத்தில் வரும் சுசீலாவின் 'உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல' பாடல்தான்.

பாலு பெண் பார்க்க சென்ற போது அவர் தாயார் சம்பிரதாயமாகக் கேட்டுக்கொள்ள அப்போதைய 'வரன்' ருக்மணி அந்த பாடலை பாடியது பாலு காதில் விழுந்த ரவாகேசரி.

மகனையும் மகளையும் நன்கு வளர்த்து படிக்க வைத்து, மகனை இஞ்சீனியராக அமெரிக்காவுக்கு அனுப்பி, மகளை ஒரு அமெரிக்க இந்திய ஐ.டி. மனிதருக்கு திருமணம் செய்து கொடுத்து, ஒரு மத்திய தர வர்க்கத்தை சார்ந்த பெண்ணின் சராசரி வாழ்க்கையை வெற்றியுடன் முடித்து விட்டு இப்போது மருத்துவமனை உள்நோயாளி உடையில், இனிமேல் கண் திறக்காத்துயிலில் ஆழ்ந்த வெண்ணிற ஆடை தேவதை...

இதையும் படியுங்கள்:
சிறுகதை: புடலங்காய் ரசம்!
Tamil short story - Unnai ennatha nenjum nenjalla

ருக்மணி நெய்வேலி பள்ளியில் தமிழ் ஆசிரியை. அற்புதமான ஹவுஸ் வொய்ஃப். குடும்பத்தலைவி, ஸ்கூல், குழந்தைகள் பராமரிப்பு என்று எப்போதும் அரக்க பரக்க வாழ்ந்து கொண்டிருக்கும்போது சிலசமயங்களில் 'மைக்ரைன்' எனப்படும் ஒற்றை தலைவலியால் அவதிப்படுவாள்.

அதன் விஸ்வரூபத்தை அப்போது அவள் அறியாமல் பெண்களுக்கே உரித்தான 'பீரியட் கால ஒற்றைத்தலைவலி' என்று 'அமிர்தாஞ்சன்' லேகியத்தில் அடைக்கலம் தேடிக்கொண்டு வந்தாள்.

சம்சார வாழ்க்கையில் சண்டை சச்சரவு இல்லாத தாம்பத்தியம் ஏது?

தலைவலியில் ருக்மணி தவித்துக் கொண்டிருக்கும்போது, பாலுவிடம் “என்னை கல்யாணம் பண்ணி கொண்டதற்குப் பதிலாக பேசாமல் ரூர்க்கியில் இருக்கும் உங்க மாமா பெண் ராதாவுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கலாம்” என்பாள்.

மிலிட்டரியில் இருந்து ரூர்க்கியிலேயே 'ரிடையர்ட்' ஆன பாலுவின் தாய் மாமனின் ஒரே மகள் ராதா. காஷ்மீர் ஆப்பிள். கல்லூரியில் புரொஃபசர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஊர்மிளையும் நோக்கினாள்!
Tamil short story - Unnai ennatha nenjum nenjalla

ஒருமுறை மாமா குடும்பம் நெய்வேலியில் சில நாட்கள் தங்கியிருந்தபோது ராதாவின் அழகையும் அறிவையும் பார்த்து வியந்த ருக்மணி, அவர்கள் சென்ற பிறகு, ஒரு நாள் யதேச்சையாக “ஏன் நீங்க மாமா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலை?” என்று கேட்டபோது பாலு “நெருங்கிய சொந்தத்தில் கல்யாணம் பண்ணினால் அது பிற்காலத்தில் குழந்தைகளை பாதிக்கும்; அது மட்டுமில்ல, உன்னையும் மிஸ் பண்ணியிருப்பேன்; உன் வயிற்றில் பிறந்த பொக்கிஷங்களான பாரதியையும் கீதாவையும் பார்த்திருக்கமாட்டேன்” என்று சொன்னபோது ருக்கு உருகிப்போனாள்.

“சார்! போஸ்ட்!" என்ற குரல் கேட்டு நிகழ்காலத்திற்கு திரும்பிய பாலு, தபால்காரரிடமிருந்து பெற்றுக்கொண்ட கல்யாணப் பத்திரிக்கையில் ராதா, ரூர்க்கி என்ற அட்ரஸ் பார்த்து ஆனந்தம் அடைந்தார்.

மாமா பெண் ராதாவின் பொண்ணுக்கு கல்யாணம்!

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை - நரிக்கு கிடைத்த விருந்து!
Tamil short story - Unnai ennatha nenjum nenjalla

மகனும், மகளும் திரும்பவும் அமெரிக்கா சென்று விட்டதால், எப்போதோ உறைந்துபோன உறவை மீட்டெடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்றெண்ணி, அந்த திருமணத்திற்காக ரூர்க்கி பயணப்பட்டார்.

ரூர்க்கியில் முப்பது வருடங்கள் கழித்து ஒருவரை ஒருவர் பார்க்கும்போது வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், ஏமாற்றங்கள் அவர்கள் உடலில் பல மாற்றங்களை வரைந்திருந்தன.

மதிய உணவின்போது ராதா மனம் விட்டு பேசினாள்.

ராதாவின் ஒரே பெண், கமலா அற்புதமான பாடகியாம். ஒரு கச்சேரியில் உச்ச ஸ்தாயில் பாடும்போது மயங்கி விழுந்த பின்புதான் தெரிந்தது அவள் 'ஹார்ட்'ல மேஜர் ப்ராப்ளம்.

“போகாத ஆஸ்பத்திரி இல்லை; பார்க்காத வைத்தியம் இல்லை; கடைசியில 'ஹார்ட் டிரான்ஸ்பிளாண்ட்' தான் ஒரே வழின்னு டாக்டர் சொல்லியாச்சு!

“ஹார்ட்டுக்கு எங்கே போறது? பகவான் விட்ட வழின்னு குலதெய்வம் மேலே பாரத்தை போட்டுட்டோம்; ஒரு நாள் யாரோ ஒரு புண்ணியவானோட 'ஹார்ட்' மெட்ராஸ்ல இருந்து 'ஏர் லிப்ட்' ஆகி இங்க ரூர்க்கி ஆஸ்பத்திரிக்கு வந்து சீனியாரிட்டி பேசிஸ்ல சாகக்கிடந்த கமலாவுக்கு டிரான்ஸ்பிளாண்ட் பண்ணினா. அவ ஒடம்பு அந்த ஹார்ட்டை ஒத்தக்கணுமேன்னு எங்களுக்கெல்லாம் ஒரே டென்ஷன்; டாக்டர்சும் 'நாங்க சக்சஸ்ஃபுல்லா பிக்ஸ் பண்ணிட்டோம்; ரெஸ்ட் இஸ் இன் காட்’ஸ் ஹாண்ட்ஸ்'ன்னு சொல்லிட்டு போய்ட்டா. நல்லவேளையா இப்ப ஒரு வருஷமா எந்த பிரச்சனையும் இல்ல. கமலா மறுபடியும் கச்சேரி பாட ஆரம்பிச்சுட்டா! என்ன ஆனாலும் சரின்னு, அவளுக்கு ஒரு வரன் பார்த்தேன். தூரத்து சொந்தம்னாலும் மாப்பிள்ளை ஆத்தில் எல்லாத்தையும் மறைக்காம சொல்லிட்டேன்; மாப்பிள்ளை 'டி. எம். ஸி.' யில் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்! அவரும் கமலாவோட 'கேஸ் ஹிஸ்டரி' எல்லாம் பாத்துட்டு, 'இனிமேல் பயப்படறத்துக்கு ஒன்னுமில்லே'ன்னு கல்யாணத்துக்கு ஓ.கே சொல்லிட்டார். மாப்பிள்ளை 'ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்'ங்கிறதுனால ஒரு 'கியுரியாசிட்டி'ல, மெட்ராஸ் 'ரவிச்சந்திரா ஆஸ்பத்திரி'யை காண்டாக்ட் பண்ணி ஹார்ட் தானம் கொடுத்தவா பேரை கேட்டிருக்கிறார். அவா 'அதெல்லாம் கொடுக்க முடியாது'ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா. மாப்பிள்ளை, 'எங்களுக்கு அட்ரஸ் எல்லாம் வேண்டாம், பேஷண்ட் பேரை மாத்திரமாவது சொல்லுங்கோ, மாசாமாசம் அவா பெயரில் கோவில்ல அரச்சனை பண்ணி நாங்க தாங்க்ஸ் தெரிவிச்சுக்கணும்' ன்னு கெஞ்சிக் கேட்டிருக்கார். கடைசியா, ஒரு வழியா பேர் மாத்திரம் சொன்னா. நாங்களும் மாசாமாசம் அவா பெயருக்கு அர்ச்சனை பண்ணிண்டு வர்றோம். அவா யாரோ ருக்மணியாம்,” என்று முடித்தாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கண்ணுக்குத் தெரியாதவன் கதை சொல்கிறேன்!
Tamil short story - Unnai ennatha nenjum nenjalla

பாலு சுனாமி உணர்ச்சிப் பிரவாகத்தில் சிலையானார்.

பக்கத்து அறையில் கல்யாணப் பெண் கமலா பாடிக்கொண்டிருந்த

“உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல”

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல” பாடல்

ஆனந்த அதிர்வலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது... ருக்மணி புதிதாக குடி

புகுந்த அந்த வீட்டில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com