

சிறுகதை1: ஆசாமி:
“வேர்வை சிந்த உழைக்கிறோம், சோத்துக்கே வழியில்லை. ஆனா, ஆசாமிக்கு... எல்லாமே தேடி வருது, என்ன தகிடுதத்தம் பண்றாரோ” புலம்பினான் இராஐவேல்.
“என்னதான் பண்றாரு ஆசாமி”, வேவு பார்த்தான்.
அதிகாலை எழுந்திருப்பார், காலைக்கடன் முடித்து, குளித்தபின் கிழக்கே பார்த்து ஒரு கும்பிடு.. மரத்தடியில் உட்கார்ந்து கண்மூடிக் கொள்வார். வேற ஒண்ணும் பெரிசா செய்யறதுமில்லே.
கண்விழிப்பார், அவருக்கு முன்னால் பழவகைகள் தட்டுத்தட்டாய்... சுற்றிலும் ஒரு பார்வை. சற்று நேரத்தில் யாராவது ஒருவர் “இதைச் சாப்பிடுங்க” என ஏதாவது கொடுப்பார்கள். அதில் ஒரு நாலு வாய். பழத்தட்டில் இருந்து ஒரு பழம் சாப்பிட்டு... மீண்டும் கண்மூடிக் கொள்வார் அவ்வளுவுதான்.
ஆச்சர்யம் இராஐவேலுக்கு! ஒண்ணுமே செய்யாத ஆசாமிக்கு உபசரிப்பா?
நேர்ல கேட்டுட வேண்டியதுதான் என தீர்மானித்து “என்னப்பா ஆசாமி, காலைல குளிக்கிற, சும்மா ஒக்காந்து கண்ணை மூடறே.. அதுக்கே இவ்வளுவு உபசரிப்பா? நானும் பண்றேன், எனக்கு உபசரிப்பு கிடைக்காதா என்ன?” என்று கேட்டான்.
“உட்கார விடாதுப்பா உன்னை, ஓடிடுவே” என்றார் ஆசாமி.
“பார்க்கலாமே..” என இராஐவேலுவும் அதேபோல் கண்மூடி ஓரிடத்தில் உட்கார்ந்தான்.
“அப்பா, நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு ஒன்னைய கூட்டி வரச்சொன்னாரு வாத்தியார் ” மகனின் கோரிக்கைக் குரல்.
“ஒன்னைய வெட்டாம விடமாட்டேன், ஒண்ணு நீ இருக்கோணும், இல்ல நான் இருக்கோணும்” பங்காளி ஒருவனின் மிரட்டல். இப்படி எண்ண குப்பைகள் வர வர திடுக்கிட்டான். மறுபடியும்.
“துப்பு கெட்ட மனுஷா, சோத்துக்கு அரிசி வாங்கியா, இல்லேன்னா ராத்திரி பட்டினிதான்..” மனைவியின் குரல்.
எழுந்து ஓட ஆரம்பித்தான். அவனைத் தடுத்த ஆசாமி, “என்ன ஓடறீயே..” ன்னு கேட்டார்.
“வீட்ல, அரிசிக்காக பொண்டாட்டி காத்திருப்பா, இல்லேன்னா, இராத்திரிக்கு சோறு கிடையாதாம் சாமி,” என்றான்.
'ஆசாமி' என்றவன் வாயில் இருந்து, ‘சாமி’ என்று வந்ததைக் கேட்டு, மௌனமாக சிரித்தபடியே மறுபடியும் கண்மூடி அமர்ந்தார்.
சிறுகதை 2: அனுபவம்:
நான் பார்த்து வளர்ந்த பய, அவன் வாயிலிருந்து “உங்களுக்கு வயசாயிடுச்சு, நீங்களா விலகிடுங்க, நானா விலக்கினா உங்களுக்குத்தான் அசிங்கம்...” இப்படியாய் வார்த்தைகள் வரவே, அதிர்ச்சியில் உறைந்தார் தனஞ்செயன்.
இன்னைக்கு இப்படி பேசறான் கணேசன்; அவனோட அப்பா சிவதாணு, கம்பெனி ஆரம்பிச்சப்ப எல்லாமாய், வலதுகரமாய் இருந்து இன்று ஆலமரமாய் வளர்ந்த பிறகு இப்படி சொன்னால்….?
“என்னப்பா இப்படி சொல்லிட்டே, உன் அப்பாவுக்கு வலதுகரமாய், நல்ல அனுபவசாலியான என்னை விரட்டுறியே” என கேட்டதற்கு…. “உங்க அனுபவம் எங்களுக்கு வேணாம், என் அப்பாவையே வீட்ல இருக்க சொல்லிட்டேன்” என்றான்.
இதற்கு பிறகும் இங்கிருந்தால் அவமானம் என்று கவலைத் தோய்ந்த முகத்தோடு வீட்டிற்கு போனவர் ஒரு மாதத்திற்கு பின்தான் தெளிவானார்.
அனுபவம், தொழிலில் கிடைத்த செல்வாக்கு, தனக்கிருக்கும் சொத்து இதெல்லாம் கூட்டிக் கழித்து கணக்கு போட்டார்.
“பொடிப் பயனுக்கு நான் யார்ன்னு காட்டறேன்” முடிவெடுத்தார்.
வங்கிக்கு நடையாய் நடந்ததில் தொழிலுக்கான கடனும் கிடைத்தது.
புதிதாய் தொழில் நிறுவனம்… துவக்க விழா…
பத்திரிக்கையை கணேசனிடம் நேரில் கொடுத்தார்.
திறப்பு விழாவிற்கு வந்தவன் கம்பெனியைப் பார்த்து பிரமித்தான்.
“அங்கிள், துவண்டு போயிடுவீங்கன்னுதான் நெனைச்சேன், இப்படி சாதிப்பீங்கன்னு எதிர்பார்க்கவில்லை, எப்படி இது?” கேட்டான்.
தம்பி, “அந்த மரத்தின் மேலே பார்” என்றார்.
ஒரு பறவை, மரத்தில் தன் அலகை தேய்த்து தேய்த்துக் கொண்டிருந்தது.
“புரியல அங்கிள்” என்ற, கணேசனிடம்...
“இரையெடுப்பதற்கு முன்னால அலகைக் கூர்மைப்படுத்திக்கும்... அதுதான் பறவைகளோட இயல்பு. அதைத்தான் நானும் செய்தேன்” என்றார் தனஞ்செயன்.
அனுபவம் முக்கியமானது என அப்போது கணேசன் புரிந்து கொண்டான்.
சிறுகதை 3: ஆலோசனை
“டாக்டர் , என் பையன் கொஞ்ச நாளா, பொறுப்பில்லாம விட்டேத்தியா இருக்கான், காதல்ல ஏதாச்சும் சிக்கிட்டானா? நீங்கதான் அவனுக்கு ஆலோசனை சொல்லணும்” மனநல ஆலோகரிடம் புலம்பினார் பிசினஸ்மேன் பரமசிவன்.
"சார், ஒங்க பையனையும், ஒங்க மனைவியையும் கூப்பிட்டு வாங்க” என்றார் டாக்டர்.
“அவங்க வெளியிலதான் இருக்காங்க.. வரச் சொல்லட்டா” கேட்டார்.
பையனும், அவர் மனைவியும் உள்ளே வர.. பையனை மேலும், கீழுமாய் பார்த்தார்.
“தம்பி நீங்க கொஞ்ச நேரம் வெளியில இருங்க.. கூப்பிடறேன்” என்றார்.
பரமசிவத்திடம் “என்ன ஸார், பிசினஸ் எப்படி போகுது” என்றார்.
“ஏதோ போகுது டாக்டர்” பதில் பரமசிவத்திடமிருந்து…
“காலைல எத்தனை மணிக்கு உங்க ஆபிசுக்கு போறீங்க?”
“நான் மதியம் சாப்பிட்டு, தூங்கி சாயங்காலம் நாலுமணிக்கு போவேன், ஆறு மணிக்கு திரும்பிடுவேன். அந்த ரெண்டு மணிநேரம்கூட முதலாளி ஒருத்தன் இருக்கேன் எனக் காட்டுறததுக்குத்தான்” என்றார்.
“நாளைல இருந்து காலைல பத்துமணிக்கு ஆபிஸ் போறீங்க, சாயங்காலம் ஆறுமணிக்கு வீட்டுக்கு வறீங்க..."
"ஏம்மா மதிய சாப்பாட்டை ஆபிசுக்கு அனுப்பிடும்மா," அவர் மனைவியிடம் சொன்னார் மனநல ஆலோசகர் .
“என்ன டாக்டர், பையனுக்கு ஆலோசனை சொல்ல சொன்னா எங்களுக்கு சொல்றீங்க” எனக் கேட்க..
“எல்லாம் காரணமாத்தான்.. ஒரு மாசம் கழித்து பையனைக் கூட்டி வாங்க" என்றார்.
ஒரு மாதம் கழித்து, பையனை டாக்டரிடம் கூப்பிட்டு போக…
“இப்பொழுது, நீங்கள் வெளியே இருங்க” என்றார்.
“என்ன டாக்டர் இவர் எல்லாமே ஏறுக்குமாறா இருக்கே?” முணுமுணுத்தவாறே வெளியே போனார் பரமசிவன்.
“தம்பி எப்படிப்பா இருக்கே” என்றார் டாக்டர்.
“டாக்டர் என்ன புதுசா கேக்கறீங்க.. அப்பா, பிசினஸ்ஸை சரியா கவனிக்காம, என்கிட்டேயும் பொறுப்பு கொடுக்காமா விட்டேத்தியா இருந்தார். அவரை திருத்தத்தான் விட்டேத்தியா நடித்தேன். அதுகூட ஒங்க ஐடியாத்தானே” நர்ஸ் டாக்டரின் அறைக் கதவை திறந்து மூடும்போது வெளியே கேட்டுவிட்டது.
நான்தான் விட்டேத்தியா? தெளிவானதுடன், மகனை மனதுக்குள் புகழ்ந்து கொண்டாடினார் பரமசிவன்.