

ஆண்களுக்குக் கர்வமும் ஈகோவும் பிறப்பிலேயே வந்துவிடுகிறதா, இல்லை நாம் வளர்க்கும் விதமும் சமுதாயச் சூழலும் தான் அவற்றை உருவாக்குகிறதா? அன்பும் சமத்துவமும் நிறைந்த அடுத்த தலைமுறையை உருவாக்க நாம் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்ற தெளிவான விடையை அறியத் தொடர்ந்து வாசியுங்கள்.
காலங்காலமாக இந்த ஆண்களுக்கு ஈகோவும் கர்வமும் பெண்களை விட மிக அதிகமாகவே இருக்கிறது. “தனக்குத்தான் எல்லாம் தெரியும்”, “நம்மால் மட்டும் தான் முடியும் “, “நான் தவறே செய்ய மாட்டேன்” என்றெல்லாம் இவர்கள் அடிக்கடி கூறிக் கொண்டு தங்களை தாங்களே பெருமைப் படுத்தி கொள்கிறார்கள்.
இன்னும் சில பேர் மிகுந்த ஆணவத்தோடு இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? இயற்கையிலேயே இவர்கள் இவ்வாறு படைக்கப்பட்டார்களா?
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்க்கையிலே” என்கிற பாடல் வரிகளை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். அது எந்த குழந்தையாக இருந்தாலும் சரி, கடவுள் எல்லோருக்கும் சரி சமமான குணங்களைத் தான் கொடுத்திருக்கிறார். ஒரு சில உடல் ரீதியான மாற்றங்கள் தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இருக்கின்றன.
அதாவது பெண்களுக்கு கர்ப்பப்பை இருக்கிறது; ஆண்களுக்கு இல்லை. கர்ப்பப்பை இருக்கும் காரணத்தினால் பெண்கள் அதிகமான பளுவை தூக்கக்கூடாது என்று வற்புறுத்தப் படுகிறார்கள். மேலும், ஒரு சில காரியங்களை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப் படுகிறார்கள். சரி... ஆனால் ஆண் என்றால் ஈகோவோடு தான் இருக்க வேண்டும், ஆளுமையோடு தான் இருக்க வேண்டும், என்றெல்லாம் யார் கூறினார்கள்? படைத்த கடவுள் கூறினாரா? இல்லை ஆண் குழந்தைக்குப் பிறக்கும் போதே கர்வத்தையும் ஈகோவையும் சேர்த்து கடவுள் படைத்தாரா? அவர்களுக்கு எப்படி இப்படி உருவாகிறது?? இதற்கு யார் காரணம்?
ஆராய்ந்து பார்த்தால் நிச்சயமாக சமுதாயம் தான் இதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறது.
ஒரு வீட்டிலேயே ஆண் பெண் என இரண்டு குழந்தைகளுமே இருக்கும் பட்சத்தில் அந்த ஆண் குழந்தைக்கு முதலில் இருந்தே பெற்றோர்கள், நீ பையன், நீ கெத்தாக இருக்க வேண்டும், நீ எதற்கும் அழக்கூடாது, உட்கார்ந்த இடத்திலேயே என்ன வேண்டுமோ கேள் உனக்கு தருகிறேன், ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்றெல்லாம் கூறி அந்த குழந்தையை வளர்க்கிறார்கள்.
அதே நேரத்தில் பெண் குழந்தையை, நீ பெண் இப்படித்தான் இருக்க வேண்டும், உனக்கு கோபமாகாது, பெண்களுக்கு ஈகோ இருக்ககூடாது என்றெல்லாம் கூறி குழந்தை பருவத்தில் இருந்தே அவர்களை அடிமட்டத்தில் வைத்து விடுகிறார்கள்.
இப்படி நாமே எல்லாவற்றையும் உருவாக்கி விட்டு இந்த ஆம்பள பிள்ளைகளுக்கு இருக்கிற கர்வத்தை பாரு, ஈகோவை பாரு என்று கூறுவதினால் என்ன பிரயோசனம்?
ஒரு ஆண் தன்னுடைய மனைவிக்கு நல்ல கணவனாக இருந்து, அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்து சுதந்திரமாக அவளை வைத்திருந்தால், அவனுக்கு இந்த சமுதாயத்தில் “பெண்டாட்டி தாசன் “ என்று பெயர் வைக்கிறார்கள். அவனை ஆம்பளையா லட்சணமா இல்லாம பொண்டாட்டிக்கு எல்லாத்தையும் செய்கிறான் என்று சொல்லி கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்.
அதே சமயத்தில் இன்னொரு ஆண், அவனுடைய மனைவியை அடித்து சித்திரவதை செய்தால், அந்த பெண்ணிடம் பெற்றோர்களும் பெரியோர்களும், ஆம்பளை என்றால் அப்படித்தான் இருப்பார்கள், நீ தான் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும், அவன் உன்னை அடித்தால் என்ன? அவன் உன்னுடைய கணவன் தானே??
பரவாயில்லை நாளாக நாளாக எல்லாம் சரி ஆகிவிடும், அவன் கோபப்படாதபடிக்கு நீ நடந்து கொள் என்று அந்த பெண்ணையே திருப்பி விடுகிறார்கள்.
இப்படி செய்தால் அந்த ஆணுக்கு திமிரும் கர்வமும் அதிகமாகாமல் என்ன ஆகும்?? ஆக மொத்தத்தில், ஒரு ஆணுக்கு கர்வம் மற்றும் ஈகோ இயற்கையாக வரவில்லை, வரவழைக்கப்பட்டன என்று அடித்து சொல்லலாம்.
இப்போது, இதை சரி செய்வது நம்முடைய கடமை தான். நாம் தான் குழந்தை பருவத்தில் இருந்தே ஆண்களுக்கும், பெண்களுக்கு எப்படி கற்றுக் கொடுக்கிறோமோ அதைப் போல எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல வேண்டும். இன்று உனக்கு பள்ளிக்கூடம் விடுமுறை இல்லையென்றால் கல்லூரி விடுமுறை,
ஆபீஸ் விடுமுறை, இன்று என்னோடு வந்து கிச்சனில் உதவி செய், கோபம் வந்தால் அதை கட்டுப்படுத்திக் கொள், ஆண் பெண் இருவரும் சமம், எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்று தாய் தந்தையராகிய நாம் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
மேலும், தந்தையர்கள் மகன்களின் முன்பாக ஒரு எடுத்துக் காட்டாக திகழும் வகையில், மனைவியிடமும், மகளிடமும் மற்றும் குடும்பத்திலுள்ள மற்ற பெண்களிடமும் ஆணவத்தோடு பேசாமல் அன்போடும் பண்போடும் பேச வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் மற்றும் நம்முடைய வருங்கால சந்ததியினருக்கும் இந்த ஈகோவும் கர்வமும் அதிகமாக வளராது..
வாசிப்போர் தங்கள் வீடுகளில் ஆண், பெண் குழந்தைகளைச் சமமாகவும் உணர்வுபூர்வமாகவும் வளர்க்கும் தெளிவான அணுகுமுறையைப் பெறுவார்கள்; மேலும் ஆணவமற்ற, அன்பான குடும்ப உறவுகளை உருவாக்குவதற்கான நடைமுறை மாற்றங்களைத் தங்கள் அன்றாட வாழ்வில் செயல்படுத்தத் தொடங்குவார்கள்.