சிறுகதை: படமெடுத்த கருநாகம்!

வானத்தை வாசித்து மழையை கணிக்கும் கிழவி, பாம்பு கதையால் இளம் பெண்ணை மரவெடிப்பில் இருந்து தப்பவைத்து, இறுதியில் ‘ஏட்டுச்சுரைக்காய்’ சாரதாவுக்கு உணர்த்தும் வாழ்க்கை பாடம்
Wisdom vs education
short story in tamil Image credit: AI
Updated on
MM strip
MM strip

short story in tamil...

‘கிழவி’ டீக்கடையில், பார்சல் டீ வாங்கிக்கொண்டு, யோசித்தது. பின், வானத்தை தன் இடுங்கிய கண்களால் ஒரு முறை சுற்றிச் சுற்றிப் பார்த்து முடிவுக்கு வந்து, பெருமூச்சு விட்டது.

"ஏய் கிழவி! அப்படி என்ன திடீர் யோசனை? உடனே போடுன்னு அவ்வளவு வேகம் காட்டுவே. இப்ப பார்சல் டீயை வெச்சிக்கிட்டு யோசிச்சுட்டு கிடக்கே... என்ன அப்படி யோசனையாம்?" என்று டீ கடைக்காரர் கேட்டார்.

"பதினைந்து நாளாவே வெயில் தாக்கம் தாங்க முடியலே. இப்ப அடிக்கிற வெயில் வெள்ளை நிறத்துல இருக்கு; அப்ப கோடை மழை, இடியுடன் பிச்சு நகத்தப்போறது என்று வானம் பார்த்து கண்டுபிடிச்சேன்," என்றாள் கிழவி.

"நீ பெரிய வானிலை ஆய்வாளர்! சரி சரி போ, மழை கொட்டப்போவுது, நனைஞ்சுடாதே," என்று கடைக்காரரும் கிண்டலடித்தார்.

கிழவியின் குடிசை, கடையில் இருந்து அரை கிலோ மீட்டர் இருக்கும். அவளுக்கு டீ குடிக்காமல் இருக்க முடியாது. இப்போ மணி ஒண்ணு. நல்ல மழை வருவதற்குள் வீடு திரும்ப வேண்டும் என்று, ‘நடையோட்டம்’ இட்டாள் கிழவி.

அதே சமயம், தன் வேலை நிமித்தம் பல கம்பெனிகளுக்கு தன் சி.வி. யை கொடுத்து விட்டு, ‘சாரதா’ வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள்.

வானம் கருத்தது. குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் பேய் மழை ஆரம்பம். இப்போ காற்று, சுழன்று சுழன்று அடித்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மாறிய மனம்!
Wisdom vs education

சாரதா வேகமாக வண்டியில் வந்தவள், அருகில் இருந்த பெரும் ஆலமரத்தின் அடியில் சென்று ஒதுங்கிக்கொண்டாள்; வண்டியையும் அருகில் நிறுத்தி இருந்தாள்.

கிழவி உடல் முழுதும் நனைந்து நடுங்கியபடி, பார்சல் டீ பாக்கெட்டுடன் போய்க்கொண்டிருந்தாள்.

"ஏ பாட்டி!" என்று அழைத்தது சாரதா தான்.

கிழவி அப்போதுதான் குரல் வந்த திசை கேட்டுத் திரும்பினாள். அடித்த மின்னலில், மரத்தின் கீழ் இருக்கும் அந்தக் குமரிதான் தன்னை அழைத்தது என்று புரிந்து கொண்டாள்.

"என்ன வேணும்?"

"இந்த வயசுல ஏன் நனைஞ்சிட்டே போறீங்க? வாங்க, வந்து மரத்துல ஒதுங்குங்க."

அப்போது, மழையின் அடர்த்தி ஆலங்கட்டி மழையைப்போல் 'பளீர் பளீர்' என அடித்தபடி விழுந்தது.

"அய்யோ பாட்டி, வாங்க! இப்படியே போனா வீட்டுக்கு போய் சேர மாட்டீங்க."

பாட்டி வானை உற்று நோக்கினாள். கருமேகக்கூட்டம் மிகவும் வேகமாக வானில் திரண்டு, காற்றின் வேகத்தில் இவர்கள் பக்கம் நகர்ந்து கொண்டிருந்தது.

"அடியே பெண்ணே! என் வீட்டுக்காரருக்கு காய்ச்சல், டீ வாங்கிட்டு போறேன். எனக்கு என் வீட்டுக்காரர்தான் முக்கியம்," என்ற கிழவி நடையைக் கட்டினாள்.

அப்போது சாரதா பதறிப்போய், "அய்யோ, பேய் மழை பெய்யுது! இங்க வாங்க. நானே என் வண்டியில மழை நின்னதும் புது டீ பார்சல் வாங்கி கொடுத்து, உங்க வீட்டுல கொண்டு போய் விடறேன்!" என்று உரக்கச் சத்தம் கொடுத்தாள்.

"அடியே பெண்ணே!" கிழவியின் குரல் ஓங்கியது. "உன் பின்னால கருநாகம் படமெடுத்துக் கொத்தக் காத்திருக்கு! உடனே என் பக்கம் ஓடி வந்துரு! அங்கதான் ஏகப்பட்ட பாம்புகள் இருக்கும். உடனே திரும்பிப் பார்க்காம ஓடி வா! அது கொத்திச்சுன்னா... அய்யோ, சொல்லவே குலை நடுங்குது!" என்று கிழவி குரலிட்டாள்.

அதனைக் கேட்டதும், சாரதா உடனே வேகமாக ஹெல்மெட்டால் தன் தலையை மூடிக்கொண்டு, கிழவியை நோக்கிப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்தாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தொடுவானத்தில் ஒரு மின்னல்!
Wisdom vs education

"எங்கே பாம்பு? இந்த மழையில் ஏன் என்னையும் நனைய விட்டே நீ?" என்று சாரதா கடிந்து கொள்ளவும், "பாம்பு உன் வாசனைக்குத்தான் வந்திருக்கு. இங்கிருந்து இன்னும் வேகமாக நாம் போகணும். இல்லாட்டி பாம்பு இங்கேயும் வரலாம்," என்றாள் கிழவி.

அதனைக் கேட்டதும் அச்சத்துடன் சாரதா, பாட்டியுடன் ஓட்டநடையெடுத்துச் சென்றாள்.

இப்போது பெரும் நீண்ட மின்னல் வெட்டியது; அதன் விளைவாகக் கொத்தாகப் பல இடிகள் இடித்தன. அதில் பலத்த இடி ஒன்று, சரியாக அந்த ஆலமரத்தில் விழுந்தது. மரத்தின் ஒரு பகுதி தீக்கரையானது. அந்த இடம் சரியாகச் சாரதா ஒதுங்கி இருந்த இடம்தான்!

"பாட்டி..." என்றபடி அச்சத்துடன் உடல் நடுங்கக் கிழவியைக் கட்டிக்கொண்டாள் சாரதா.

இப்போது மழை நிற்க ஆரம்பித்தது.

"ஏண்டியம்மா! கோடையிடி மழை வந்துச்சுன்னா மரத்துல ஒதுங்கக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா? அதனாலதான் ஆபத்தை உணர்ந்து, பாம்புன்னு பொய் சொல்லி என்னாண்ட வரவழைச்சேன். இல்லாட்டி இப்ப என்ன ஆயிருப்பே?" என்று கிழவி கோபத்துடன்தான் பேசினாள்.

"சரி, என் குடிசை வந்திருச்சு. மழையும் நின்னிருச்சு, நீ கிளம்பு," என்றாள் கிழவி.

வண்டிக்கு ஒண்ணும் ஆயிருக்கக் கூடாது என்று அஞ்சியவாறே வண்டியைப் பார்த்தாள்; அது அப்படியே இருந்தது.

"சரி புள்ள, உன் பேரையே கேக்கலியே?"

"நான் சாரதா."

"ஏண்டி சாரதா, என்ன படிச்சிருக்கே?"

"பி.ஹெச்.டி பண்ணியிருக்கேன்!"

கிழவி, பொக்கை வாய் கொண்டு சிரித்தாள்.

"ஏன் சிரிச்சீங்க?" சாரதா துடுக்கெனக் கேட்டாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தெய்வீகக் கலை!
Wisdom vs education

"இல்லடியம்மா, ஏதோ மந்திரவாதி மந்திரம் சொல்ற மாதிரி இருந்துச்சு. அதான்," என்று கிழவியும் சமாளித்தாள். "நான் படிக்காதவ; எனக்கு இதெல்லாம் புரியாது, அவ்வளவுதான்."

கிழவியின் அந்தச் சிரிப்பில் தன் மானம், கௌரவம், படித்த படிப்பிற்கான மரியாதை எல்லாம் போய்விட்டதாக உணர்ந்த சாரதாவின் கண்கள் கண்ணீர் உகுத்தன.

பாட்டியை இறுகக் கட்டிக்கொண்டு, "நீங்கதான் ‘அறிவாளி’. நான் வெறும் ‘ஏட்டுச்சுரைக்காய்தான்’," என்று தன் அன்பான முத்தங்களைப் பதித்துவிட்டு வண்டியை எடுக்கச் சென்றாள் சாரதா.

logo
Kalki Online
kalkionline.com