

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெருமளவில் அதிகரித்து வரும் காலக்கட்டத்தில், சைபர் குற்றவாளிகளும் புதுப்புது வழிகளில் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். அதில் ஒன்றுதான் ‘தவறுதலாக பணம் அனுப்பிவிட்டேன்’ (Wrongful/Mistaken money transfer scam) என்று கூறி ஏமாற்றும் மோசடிகள் மிக வேகமாகப் பரவி வருகின்றன. ஆன்லைன் பேங்கிங் அல்லது UPI (GPay, PhonePe, Paytm) மூலமாக இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கி இருந்தாலும், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிது புதிதாக மோசடி செயல்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. மோசடி செய்யும் போக்குகளும் காலத்துக்கு ஏற்ப மாறி வருவதால் பொதுமக்களுக்கும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை.
சமீப காலமாக இந்தியாவில் சைபர் கிரைம் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மாவட்ட மற்றும் நகர சைபர் க்ரைம் போலீசில் தினமும் ஏராளமான புகார்கள் குவிகின்றன. முதியோர் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டோரை குறி வைத்து தான் அதிகளவில் இந்த மோசடி நடக்கிறது.
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் 'ஹாட்ஸ்பாட்' பட்டியலில் தமிழகம் 7-வது இடத்திலும், சைபர் மோசடிகளால் அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களில் 4-வது இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே தற்போது புதுவிதமான முறையில் உங்களுடைய வங்கிக் கணக்குக்கு வேண்டுமென்றே பணம் அனுப்பி, தெரியாமல் அனுப்பிவிட்டதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி பணத்தைப் பறிக்கும் சைபர் மோசடிகள் சமீபகாலமாக இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இந்த வகை மோசடி ‘ஜம்ப் டெபாசிட்‘ (jump deposit) மோசடி என்று அழைக்கப்படுகிறது.
அதாவது 'ஜம்ப் டெபாசிட்' (Jump Deposit) மோசடி என்பது, ஆன்லைன் மோசடி செய்பவர்கள் உங்கள் அனுமதியின்றி அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் வங்கிக் கணக்கிற்குச் சிறிய தொகையை அனுப்பி ஏமாற்றும் ஒரு புதிய வகை சைபர் குற்றமாகும்.
இந்த மோசடி எவ்வாறு நடக்கிறது மற்றும் இதிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த முக்கிய விவரங்கள் இதோ:
மோசடி நடக்கும் விதம் (Modus Operandi)
மோசடி செய்பவர்கள் முதலில் அறிமுகமில்லாத எண்களில் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு அல்லது UPI எண்ணிற்கு ஒரு குறிப்பிட்ட தொகை (உதாரணமாக ₹5,000 அல்லது ₹10,000) திடீரென வந்து சேரும்.
அடுத்த சில நிமிடங்களில் மர்ம நபர் ஒருவர் உங்களுக்கு அலைபேசியில் அழைத்து, ‘நான் அவசரமாக மருத்துவமனைக்கு/வேறு ஒருவருக்கு அனுப்ப வேண்டிய பணத்தை, தவறுதலாக உங்கள் எண்ணிற்கு அனுப்பிவிட்டேன். தயவுசெய்து அதைத் திருப்பி அனுப்புங்கள்’ என்று மிகவும் பரிதாபமாக பேசுவார்.
நீங்கள் இரக்கப்பட்டு அவர் தரும் வேறு ஒரு UPI எண்ணிற்கோ அல்லது கியூஆர் (QR) கோடிற்கோ பணத்தை அனுப்பினால், நீங்கள் மோசடி வலையில் (The Trap) விழுந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
அதாவது, சில நேரங்களில் பணத்தைத் திரும்பப் பெற அவர்கள் அனுப்பும் லிங்க் (Link) அல்லது QR கோடை ஸ்கேன் செய்யச் சொல்வார்கள். அப்படி, அவர்கள் அனுப்பும் லிங்க் (Link) மூலமாகவோ அல்லது அவர்கள் கூறும் அவசரக் QR குறியீட்டைப் பயன்படுத்தியோ நீங்கள் பணத்தைத் திருப்பி அனுப்ப முயலும் போது, உங்களுடைய UPI PIN எண்ணை பதிவிட கோருவார்கள். நீங்கள் PIN எண்ணை உள்ளிட்டதும், உங்கள் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் அவர்கள் திருடிவிடுவார்கள்.
சில நேரங்களில் அவர்கள் அனுப்பும் லிங்க்கைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் போனில் உள்ள வங்கித் தரவுகள் திருடப்படலாம்.
அதுமட்டுமின்றி, நீங்கள் பணத்தைத் திருப்பி அனுப்பிய பிறகும், ‘நான் அனுப்பிய முழுத் தொகையும் வரவில்லை’ என்றோ அல்லது ‘நீங்கள் என் பணத்தைத் திருடிவிட்டீர்கள்’ என்றோ கூறி உங்களை மிரட்டத் தொடங்குவார்கள்.
மோசடி செய்பவர்கள் திருடப்பட்ட பணத்தையோ அல்லது சைபர் குற்றங்களில் ஈட்டிய பணத்தையோதான் உங்கள் கணக்கிற்கு அனுப்பியிருப்பார்கள்.
அந்தப் பணத்தை நீங்கள் மற்றொரு கணக்கிற்கு மாற்றும்போது, சைபர் கிரைம் போலீஸார் உங்கள் வங்கிக் கணக்கையும் சட்டவிரோதப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கருதி உங்கள் வங்கி கணக்கை முடக்கிவிடுவார்கள் (Account Freeze).
இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
யாராவது தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டதாகக் கூறினால், அவர்கள் தரும் எண்ணிற்கு நீங்களாகவே பணத்தை ரீஃபண்ட் (Refund) செய்யக் கூடாது.
பணத்தைப் பெறுவதற்கோ அல்லது மற்றொருவருக்குத் திருப்பி அனுப்புவதற்கோ உங்களின் ரகசிய UPI PIN எண்ணை உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
‘நீங்கள் தவறுதலாகப் பணம் அனுப்பியிருந்தால், உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு முறையான 'Reversal' கோரிக்கையை வையுங்கள். என் வங்கி அனுமதித்தால் பணம் உங்களுக்குத் திரும்ப வந்துவிடும்’ என்று கூறி அழைப்பைத் துண்டித்துவிடுங்கள்.
உங்கள் கணக்கு இருக்கும் வங்கிக்கு உடனடியாகச் சென்று அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து, எனக்குத் தெரியாத நபர் ஒருவர் பணம் அனுப்பியுள்ளார், அதை அவரிடமே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுங்கள் என்று புகார் அளித்து அதற்கான ரசீதை (Acknowledgement) பெற்றுக் கொள்ளுங்கள்.
தெரியாத நபர் பணத்தைத் திருப்பித் கேட்கும்போது, உடனடியாக அவர் அனுப்பும் எந்தவொரு லிங்கையும் கிளிக் செய்யவோ, QR கோடை ஸ்கேன் செய்யவோ வேண்டாம்.
உங்கள் கணக்கில் தெரியாத பணம் வந்தால், உடனடியாக உங்களது வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை (Customer Care) தொடர்புகொண்டு புகாரளிக்கவும்.
வங்கிக்குத் தகவல் அளித்துவிட்டால், அவர்களே உரிய நடைமுறைப்படி அந்தப் பணத்தை யாருடைய கணக்கிலிருந்து வந்ததோ, அதே கணக்கிற்குத் திருப்பி அனுப்பச் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பார்கள். நீங்கள் சுயமாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்.
இது போன்ற சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து 1930 என்ற தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.‘
தெரியாமல் பணம் அனுப்பியவர்கள் யாரும் மிரட்ட மாட்டார்கள்; அவசரப்படுத்தவும் மாட்டார்கள். எனவே, உங்களுடைய வங்கிக் கணக்கிற்குத் தெரியாமல் பணம் வந்தால் சற்றும் பதறாமல், உடனடியாக வங்கி மற்றும் சைபர் கிரைம் துறையின் உதவியை நாடுவது மட்டுமே பாதுகாப்பான வழியாகும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பதே இதுபோன்ற மோசடிகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் சிறந்த வழியாகும்.