சென்னைக்கு காத்திருக்கும் குடிநீர் ஆபத்து: 20 அடி சரிந்த நிலத்தடி நீர்மட்டம்!

கடந்த 6 ஆண்டுகளில் சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் 14.38 அடியில் இருந்து 20.87 அடிக்கு சரிந்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம்
நிலத்தடி நீர்மட்டம்AI Image
Updated on

சென்னையில் இந்தாண்டு போதிய பருவமழை இல்லாதது மற்றும் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணத்தால், நகரின் பிரதான குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு நீர் இருப்பு பெருமளவு குறைந்துள்ளதால், வரும் மாதங்களில் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சென்னை மாநகரின் மாதாந்திர குடிநீர் தேவை தோராயமாக 1 டி.எம்.சி என்ற அளவில் உள்ள நிலையில், தற்போதைய நீர் இருப்பு அடுத்த நான்கு மாத தேவையை மட்டுமே சமாளிக்க போதுமானது உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பாலும், சென்னை பெருநகர எல்லை விரிவாக்கத்தாலும், சென்னையின் குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதையடுத்து, புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகள் மற்றும் நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகள் வாயிலாக, சென்னை மக்களுக்கு தினம், 126 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நீடித்த கடுமையான வெப்ப அலையால் மக்களின் தினசரி குடிநீர் பயன்பாடு வழக்கத்தை விட கணிசமாக அதிகரித்தது. இதன் காரணமாக, ஆழ்துளைக் கிணறுகளை மட்டுமே நம்பியிருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மிக வேகமாக சரிந்துவிட்டது.

குறிப்பாக சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

அந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளில் சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் 14.38 அடியில் இருந்து 20.87 அடிக்கு சரிந்துள்ளது. அதாவது 2021 ஜூலை மாதத்தில் 14.38 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், 2026 ஜூலை மாதத்தில் 20.87 அடி ஆழத்திற்கு சென்று விட்டது.

கடந்த 2003ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கட்டடங்கள் அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் பெரிதாக கை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள், அதிகாரிகள் அக்கறை காட்டாததால், காலப்போக்கில் இந்த திட்டம் முடங்கிபோனது.

அதன்படி, சென்னையில் 2021-ம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி 14.38 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம், 2022-ம் ஆண்டில் 16.24 அடியாகவும், 2023-ம் ஆண்டில் 17.98 அடியாகவும், 2024-ம் ஆண்டில் 18.33 அடியாகவும், 2025-ம் ஆண்டில் 19.03 அடியாகவும், 2026-ம் ஆண்டில் 20.87 அடியாகவும் குறைந்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததாலும் நீர்நிலைகளில் நீர் இருப்பு கடுமையாக சரிந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 14,141 நீர்நிலைகளில் 4,208 (29.25%) ஏரிகள் மற்றும் குளங்கள் முற்றிலும் வறண்டுள்ளன.

நிலத்தடி நீர்மட்டம்
நிலத்தடி நீர்மட்டம்AI mage

மேலும், 5,814 நீர்நிலைகளில் 1 முதல் 25 சதவீதம் வரை மட்டுமே நீர் இருப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை.

காவிரி பாசன மாவட்டங்களில் 764 நீர்நிலைகளில் 720 (94%) நீரின்றி உள்ளன. 737 நீர்நிலைகளில் 694 (95%) முற்றிலும் வறண்டுள்ளன. காவிரி பாசன நீர்நிலைகளில் 6.7 டிஎம்சி கொள்ளளவில் 0.17 டிஎம்சி (2.62%) மட்டுமே தண்ணீர் உள்ளது. காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளில் 100 அடி ஆழத்திற்குள்ளாக நிலத்தடி நீர் கிடைத்து வந்த நிலையில், இப்போது நிலத்தடி நீர்மட்டம் 200 அடிக்கும் கீழாக சென்று விட்டது.

அதேசமயம், கடந்த இரு மாதங்களில், அதாவது ஜூன் மாதத்தைவிட ஜூலையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பாக மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் பகுதிகளில் மட்டும் சுமார் 3 அடி வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
இனி அனுமதி இல்லாமல் நிலத்தடி நீர் எடுத்தால் 20 மடங்கு அபராதம்...சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்..!!
நிலத்தடி நீர்மட்டம்

மேலும், கடந்த ஆண்டு (2025) ஜூலை மாதத்தை விட, இந்தாண்டு (2026) ஜூலை மாதத்தில் ராயபுரம், திருவிக, நகர், அம்பத்துார், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் 4 முதல் 6 அடி வரை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சென்னையில் நிலத்தடி நீர் சரிவுக்கு மழைநீர் நிலத்திற்குள் செல்வதற்கான வாய்ப்புகள் குறைந்ததும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், மழைநீர் சேகரிப்பு முறையாக செயல்படாதது, நகரமயமாக்கல், தார் மற்றும் கான்கிரீட் கலவையால் போடப்பட்ட சாலை பரப்புகள் அதிகரிப்பு, நிலத்தடி நீர் அதிகளவில் ஊறிஞ்சப்படுதல் மற்றும் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளம் கால்வாய் வழியாக நேராக கடலில் கலப்பது போன்றவையே நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2003-ஆம் ஆண்டு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைக் கொண்டுவந்தார். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவுவதைக் கட்டாயமாக்கினார்.

இதையும் படியுங்கள்:
வறண்ட நிலத்தின் மருத்துவப் பெட்டகம்: நிலத்தடி நீரைச் சுட்டிக் காட்டும் ‘நீர் உடை’ மரத்தின் அதிசய பயன்கள்!
நிலத்தடி நீர்மட்டம்

இத்திட்டத்தின் மூலம் சென்னையின் பல பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.

அதன்பின் ஆட்சிக்கு வந்தவர்கள் மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை; மேலும் அதிகாரிகள் அக்கறையின்மை, பொதுமக்களின் பொறுப்புணர்வு இல்லாததே தற்போது நிலத்தடி நீர் சரிவுக்கு காரணமாகிவிட்டது.

இந்நிலையில் நிலத்தடி நீர் மேலும் சரிவதை தடுக்கவும், நீர் வளத்தை பாதுகாக்கவும் அடுத்த கட்ட நடவடிக்கையாக வீடுகள், வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஆய்வு செய்து முறைப்படுத்தவும், விதிமீறல்கள் மற்றும் இடவசதி இருந்தும் மழைநீர் சேகரிப்பு அமைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் குடிநீர் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்டு பக்கத்துல இந்த மரம் இருக்கா? ஆரோக்கியம் முதல் நிலத்தடி நீர் வரை காலி!
நிலத்தடி நீர்மட்டம்

பருவமழைக்கு முன் இந்த பணிகளை தீவிரப்படுத்தி, நிலத்தடி நீரை பாதுகாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பையும் குடிநீர் வாரியம் கோரியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com