

இந்தியாவின் தலைசிறந்த சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று (அக்டோபர் 25) சென்னையில் உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த தாமு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று செஃப் தாமு உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செஃப் தாமுவின் மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில நாட்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்காமல் இருந்தார் செஃப் தாமு. இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக கடந்த ஆகஸட் மாதம் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த செஃப் தாமு, தான் நலமுடன் இருப்பதாகவும் கால் வலி காரணமாக சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன் எனவும் வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் இன்று செஃப் தாமு உயிரிழந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த செஃப் தாமு:
செஃப் தாமுவின் முழுப்பெயர் கோதண்டராமன் தாமோதரன். சமையில் கலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமவம் பெற்றவர் செஃப் தாமு. தமிழ்நாட்டின் பாரம்பரிய சமையல் கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரர் செஃப் தாமு.
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளை சமைத்து சமையல் கலையில் நிபுணத்துவம் பெற்ற செஃப் தாமு, ஒரே நாளில் 617 சமையல் குறிப்புகளை தயாரித்து கின்னஸ் சாதனையும் படைத்தார். சமையல் கலையில் முதன்முறையாக முனைவர் பட்டம் (Ph.D.) பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரும் செஃப் தாமு தான்.
சமையல் கலையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி செஃப் தாமுவுக்கு மத்திய அரசு 2025-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது. 40 ஆண்டுகளாக சமையல் கலைத் துறையில் பயணித்தாலும், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகே தமிழக மக்கள் அனைவருக்கும் பிரபலமானார் செஃப் தாமு.
முதலில் ஜெயா டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் தாமு பங்கேற்றார். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இன்னும் பிரபலமானார் தாமு. ஜெயா டிவி, விஜய் டிவி மற்றும் யூடியூப் வரை செஃப் தாமு பல்வேறு சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தமிழக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானதற்கு முக்கிய காரணமே செஃப் தாமு தான். ஒரு சமையல் நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்துச் சென்றார் தாமு. இந்த நிகழ்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் அதிக வரவேற்பு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பலரும் செஃப் தாமுவை, தாமு அப்பா என்று அழைத்தனர். தற்போது இவரது இழப்பால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடக்குமா அப்படி நடந்தால், மீண்டும் பழையபடி வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
சமையல் கலைத் துறையில் பாத்திரம் கழுவும் வேலையாளாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, கடின உழைப்பால் சமூகத்தில்உயரிய நிலையை அடைந்தவர் செஃப் தாமு. இவருடைய மறைவு சமையல் கலைத் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும்.