

தமிழ்நாட்டில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வருமான வரம்பு இன்றி இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் ‘முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்’ (Chief Minister's Health Insurance Scheme) அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்கள் பயனடைவர்.
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவச் செலவைக் குறைத்து, தரமான சிகிச்சைகள் இலவசமாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ (CMCHIS) திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் முதலில் திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களால் 2009 ஆம் ஆண்டு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
பின்னர் 2012 ஆம் ஆண்டில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 'முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்கள் வருமான உச்சவரம்பு எதுவுமின்றி கட்டணமில்லாமல் உயர் மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில் ‘முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 17-ம்தேதி) சட்டப்பேரவையில் நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர் அருண்ராஜ் இந்த புதிய திட்டத்தை அறிவித்தார். முதியோர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனாளிகள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றி இலவசமாக சிகிச்சை பெறலாம் என்று கூறினார்.
இத்திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் பயனடைவதற்கு எவ்வித வருமான உச்சவரம்பும் கிடையாது. ஏழை, பணக்காரர் என்ற பொருளாதாரப் பாகுபாடின்றி 70 வயதைக் கடந்த அனைத்து மூத்த குடிமக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சைகள் முழுமையாகக் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும்.
இந்த திட்டம் வழங்கும் காப்பீட்டு வரம்பு குறித்த கூடுதல் விவரங்களை அமைச்சர் வெளியிடவில்லை; இருப்பினும், இத்திட்டம் மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தற்போது சுமார் 1.45 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்குத் தலா ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டு வசதியை வழங்கும் 'முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடனும்' இது இணக்கமாகச் செயல்படும் என்று அவர்கள் கூறினர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் காக்லியர் இம்ப்ளான்ட் (cochlear implants) போன்ற உயர்தர மருத்துவச் சிகிச்சைகளுக்கு, ஒரு சிறப்பு நிதியிலிருந்து ரூ. 23 லட்சம் வரை நிதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். மாநிலம் தற்போது முதியோர் அதிகம் உள்ள சமூகமாக மாறி வருவதால், இது அவசியமான ஒன்றாகியுள்ளது.
முதல்முறையாக சமூகம், குடும்பம் மற்றும் தனிமனித அளவில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தக்கூடிய வகையில் புதிய ‘Positive Health Policy’ உருவாக்கப்படும்.
30 வயது கடந்த அனைவருக்கும் இலவச முழு உடல் பரிசோதனை (14 விதமான பரிசோதனைகள்) மற்றும் அது தொடர்பாக அனைத்து தகவல்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் புதிய ‘நலம் 360 செயலி’ அறிமுகப்படுத்தப்படும். மருத்துவத்துறையை மேம்படுத்த 'TN MediCity' உருவாக்கப்படும் என்றார்.
30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையை வழங்கும் வகையில், 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 295 அரசு மருத்துவமனைகள், 424 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 39 நகர்ப்புற சமுதாய மையங்கள் மற்றும் 463 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டிற்கு ஒருமுறை 14 அடிப்படை பரிசோதனைகளை உள்ளடக்கிய ‘நலம்-ஒருங்கிணைந்த இலவச உடல்நலப் பரிசோதனை’ (Comprehensive Free Health ChecKup) ரூ.51 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றார்.
தமிழகத்தில் குடும்பங்களின் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை வழங்கும் முதன்மைத் திட்டமாக ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ. 5 லட்சம் வரை கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்கு தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தகுதி வரம்புகள் :
தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்குள் இருக்க வேண்டும்.
70 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் காப்பீட்டுத் திட்டத்திற்கு எந்தவித வருமான வரம்பும் பொருந்தாது.
தேவையான ஆவணங்கள் :
குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை (Aadhaar Card)
குடும்ப அட்டை (Smart Ration Card)
வருமானச் சான்றிதழ்
வயது சான்றுக்கான ஆவணங்கள் (பிறந்த தேதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை)
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
விண்ணப்பிக்கும் முறை :
பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு’ திட்ட சேவை மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
அங்கு ஆவணங்களைச் சரிபார்த்து, பயோமெட்ரிக் முறையில் கைரேகைப் பதிவு செய்து புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் வழிகாட்டுதல்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலை www.cmchistn.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் சந்தேகங்களுக்கு 1800 425 3993 என்ற 24 மணி நேரக் கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.