

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் செயல்முறையை அரசு எளிதாக்கி இருக்கிறது. கடன் பெறுவோருக்கு வசதியாக வாரந்தோறும் 2 நாட்களில் கடன் முகாம்கள் நடைபெறும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
சுயதொழில் செய்ய முயற்சிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள், விவசாயக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கியில் கடன் பெறுவதற்கு உறுப்பினராக இருக்க வேண்டியது அவசியம்.
அவ்வகையில் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராவது முதல் பயிர்க் கடன் பெறுவது வரையிலான பல்வேறு முக்கிய தகவல்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
கூட்டுறவு வங்கியில் உறுப்பினராவது எப்படி?
* முதலில் உங்கள் எல்லைக்கு உட்பட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகரக் கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுக வேண்டும்.
* உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
* கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் அல்லது நிர்வாகக் குழுவினர் ஒப்புதல் அளித்தவுடன், நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினர் எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.
* ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ப விண்ணப்பக் கட்டணம் ரூ.100 முதல் ரூ.500 வரை செலுத்த வேண்டியிருக்கும்.
தேவையான ஆவணங்கள்:
* ஆதார் அட்டை
* பான் கார்டு
* ரேஷன் கார்டு
* பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
* வங்கிக் கணக்கு விவரங்கள்
விவசாயிகளுக்கு: பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் நில வரைபடம்
கூட்டுறவு வங்கியில் வைப்புத்தொகை பாதுகாப்பானதா?
இந்தியன் ரிசர்வ் வங்கியின் நேரடி ஒழுங்குமுறையின் கீழ் கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. ஆகையால் கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யப்படும் வைப்புத் தொகைகள் பாதுகாப்பாக இருக்கும்.
காப்பீடு யாருக்குப் பொருந்தும்?
மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் ஒரு உறுப்பினருக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை காப்பீடு வசதி உள்ளது. ஆனால் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் நேரடி வங்கி உரிமத்தைப் பெறததால், காப்பீடு வசதி இல்லை.
கூட்டுறவு கடன் விண்ணப்பப் படிவத்தில் செய்யக்கூடாத 5 தவறுகள்:
1. நில விவரங்கள் பிழை இருத்தல் கூடாது:
பட்டா, சிட்டா மற்றும் அடங்கலில் இருக்கும் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்களை விண்ணப்ப படிவத்தில் துல்லியமாக நிரப்ப வேண்டும். சிறு எழுத்துப் பிழை இருந்தாலும் கூட விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
2. பயிர் பரப்பு மற்றும் பயிர் வகை:
அடங்கலில் குறிப்பிட்டுள்ள பயிர் வகை மற்றும் சரியான சாகுபடி பரப்பளவையும் மாற்றி எழுதக் கூடாது. வி.ஏ.ஓ. கள ஆய்வின் போது இந்த அளவுகளில் மாறுதல் இருந்தால் கூட்டுறவு கடன் கிடைக்காது.
3. நிலுவைக் கடன்களை மறைத்தல் கூடாது:
கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகளில் நிலுவையில் இருக்கும் பயிர்க் கடன்கள் இருப்பதை மறைக்கக் கூடாது. CIBIL அல்லது கூட்டுறவு ஒருங்கிணைந்த அமைப்பில் இதனை சரிபார்க்கும் போது உண்மை நிலவரம் தெரிந்து விடும்.
4. ஒப்பந்தம் / குத்தகை ஆவணங்களில் கையொப்பம் இல்லாமை:
குத்தகை விவசாயிகள் கூட்டுறவு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, நில உரிமையாளரின் குத்தகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் கையொப்பம் இல்லாமல் விண்ணப்பிக்கக் கூடாது.
5. பெயரில் எழுத்துப் பிழை இருக்கக் கூடாது:
ஆதார் கார்டு, பான் கார்டு, பட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றில் உள்ள உங்கள் பெயர் சரியாக இருக்க வேண்டும். இணைக்கப்படும் சான்றுகளில் பெயர் முரண்பாடாக இருந்தால், கடன் கிடைக்காது
கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் பெறுவது எப்படி?
கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்படும் குறுகிய கால பயிர்க் கடன்கள் அனைத்தும், கிசான் கிரெடிட் கார்டு முறைப்படி தான் வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
* கடன் வழங்கும் கூட்டுறவு சங்கத்தின் ஆளுகைக்கு உள்பட்ட கிராமத்தில் நிலம் இருக்க வேண்டும்.
* குத்தகை விவசாயிகளும் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
* நிலுவையில் இருக்கும் கடன்கள் வாராக்கடனாக இருக்கக் கூடாது.
* கூட்டுறவு சங்கத்தில் A வகுப்பு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, நில ஆவணங்ள், பட்டா, சிட்டா நகல், விஏஓ கையொப்பமகட்ட நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
வட்டி மற்றும் மானியம்:
* பொதுவாக கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்படும் பயிர்க் கடனுக்கு 7% வட்டி வசூலிக்கபடும்.
* 1 வருடம் அல்லது அறுவடை முடிந்தவுடன் கடன் தொகையை திருப்பிச் செலுத்தினால் வட்டி முழுமையாக ரத்து செய்யப்படும்.
* உரிய தவணைக்குள் கடனை செலுத்தவில்லை என்றால், வட்டியுடன் அபராதத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும்.
* பருவமழை பொய்க்கும் போது, குறிப்பிட்ட தொகைக்குள் கடன் வாங்கியிருந்தால் தமிழக அரசு கடனை முழுமையாக தள்ளுபடியும் செய்யும்.