

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளியை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் பலரும் இப்போதே ஷாப்பிங்கை தொடங்கி விட்டனர்.
இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் முதல் பட்டாசுகள் வரை அனைத்தையும் வாங்கி வருகின்றனர். கடந்த வார இறுதியில் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்த நிலையில், இந்த வார இறுதியிலும் கூட்டம் அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளிக்கு பொதுமக்கள் வாங்கும் இனிப்புகள் மற்றும் பலகாரங்களில் தரம் குறைவாக இருந்தால் உடனே புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை (Food Safety Department).
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் தான் அதிகம் விற்பனையாகும். அதற்கு அடுத்த படியாக இனிப்புகளும், பலகாரங்களின் விற்பனையும் அமோகமாக இருக்கும். இனிப்புகள், பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் தரம் குறைவு, கலப்படம் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட புகார்களை 3 வழிகளில் அளிக்கும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புகார் அளிக்க:
வாட்ஸ்அப் எண்: 9444042322
இணையதளம்: foodsafety.tn.gov.in
செயலி: TN Food Safety Consumer App
புகார் செய்வது எப்படி?
* வாட்ஸ்அப்பில் புகார் செய்ய 9444042322 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ள வேண்டும்.
* உணவுப்பெருள் வாங்கப்பட்ட கடையின் பெயர் மற்றும் முழு முகவரி (முடிந்தால் Google Location-ஐ இணைக்கலாம்).
* நீங்கள் வாங்கிய உணவுப் பொருளின் பெயர், வாங்கிய தேதி, பேக்கிங் தேதி மற்றும் காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும்.
* உணவுப் பொருள் மற்றும் கடையில் வழங்கப்பட்ட பில்லின் தெளிவான புகைப்படம் அல்லது வீடியோவை இணைக்க வேண்டும்.
புகாருக்கான காரணம் என்னவென்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். (உதாரணம்: நிறமூட்டி கலப்படம், துர்நாற்றம், காலாவதி தேதி ஏற்கனவே முடிவடைந்திருத்தல் மற்றும் பழைய எண்ணெய் பயன்பாடு போன்றவை).
* புகாரை பதிவு செய்த அடுத்த சில நொடிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையிடமிருந்து புகார் எண் உடனடியாகப் பெறப்படும்.
* இணையதளம் மற்றும் செயலி வழியாக புகார் செய்யும் போது இதே வழிமுறையைக் கடைபிடிக்க வேண்டும்.
இனிப்புகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
* நீங்கள் வாங்கும் உணவுப் பொருளில் FSSAI உரிமம் அல்லது பதிவு எண் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
* பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படும் பலகாரங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் 'Best Before' ஆகிய விவரங்கள் இருப்பதை உறுதி செய்யவும்.
* அதிக அடர் நிறம் கொண்ட இனிப்புகளில் செயற்கை நிறமிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதால், அதனைத் தவிர்த்து விடுங்கள்.
* பலகாரங்களில் சிக்கு வாசனை அல்லது பழைய எண்ணெயின் நெடி அடித்தால் வாங்க வேண்டாம்.
* பால் பொருட்களில் கலப்பட நெய் வாசனை வந்தால் உடனே புகார் அளிக்கலாம்.
தீபாவளி பண்டிகையின் போது இனிப்புகள் அதிகம் விற்பனையாகும் என்பதால், நுகர்வோர்கள் இனிப்புகளை வாங்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.