தொடர்ந்து சரியும் தங்கம் விலை: நகைக் கடன் வாங்கியவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!!

தங்கத்தின் விலை குறைவதால் நகைக் கடன் வாங்கியவர்களுக்கு ஏற்படும் மார்ஜின் கால் நோட்டீஸ், நகை ஏலம் மற்றும் CIBIL பாதிப்பு குறித்த முழு விளக்கம்.
gold loan|நகைக் கடன்
gold loan|நகைக் கடன்ChatGPT Image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தங்கத்தின் விலை சரிவது நகை வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், அதிக விலை இருந்தபோது தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் நிலை என்ன?

தங்கத்தின் விலை மேலும் சரிந்தால், நகைக் கடன் பெற்றவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்கள், மார்ஜின் கால் அபாயம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம் வாங்க...

இந்தியாவில் அவசர பணத் தேவைகளுக்கு மக்கள் அதிகம் நம்பும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தேர்வாக தங்க நகைக் கடன் (Gold Loan) உருவெடுத்துள்ளது. தங்கத்தை அடகு வைத்தால் அரை மணி நேரத்தில் பணம் கிடைத்துவிடும் என்பதால், நாட்டின் சில்லறைக் கடன் சந்தையில் தங்கக் கடன் வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் (2024–2026) இந்திய வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) வழங்கும் தங்கக் கடன்களின் அளவு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் வங்கிகளின் தங்க நகைக் கடன் அளவு ஜூலை 2024-ல் ரூ.1.24 லட்சம் கோடியாக இருந்தது, ஜூலை 2026-ல் ரூ.5.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருவதால், தங்க நகை கடன் பெற்றவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், அடகு வைக்கப்பட்ட நகைகளின் மதிப்பு குறைந்து கடன்-மதிப்பு விகிதம் (LTV - Loan-to-Value Ratio) அதிகரிப்பதே நகைக் கடன் பெற்றவர்களின் தற்போதைய நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகும். தங்கத்தின் விலை அதிகமாக இருந்தபோது நகைகளை அடமானம் வைத்துக் கடன் பெற்றவர்களுக்கு, தற்போதைய விலை சரிவு கூடுதல் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தையும் (Margin Call), நகை ஏலத்திற்குச் செல்லும் அபாயத்தையும் உருவாக்கி உள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) சவரனுக்கு ரூ.95,840 என்ற அளவிற்குக் குறைந்துள்ள நிலையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் (NBFCs) கூடுதல் பணம் செலுத்தவோ அல்லது கூடுதல் நகைகளை அடகு வைக்கவோ வலியுறுத்தும் மார்ஜின் கால் (Margin Call) நோட்டீஸ்களை அனுப்பத் தொடங்கியுள்ளன.

அதேசமயம் தங்கத்தின் சந்தை மதிப்பு குறைந்தாலும், நீங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டித் தொகை குறையாது.

தங்கம் விலை சரிவால் கடன் பெற்றவர்களுக்கு ஏற்படப்போகும் முக்கிய நெருக்கடிகள்:

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகளின்படி, அடமானம் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சம் 75% வரை (Loan-to-Value - LTV) மட்டுமே கடன் வழங்க முடியும். தங்கத்தின் விலை குறையும்போது இந்த விகிதம் மாறுபடுகிறது.

இதையும் படியுங்கள்:
தங்க நகை கடன் வாங்குபவர்களுக்கு செம நியூஸ்..! இனி இவ்வளவு கூடுதல் தொகை பெறலாமா?
gold loan|நகைக் கடன்

தங்கத்தின் விலை சரிவதால், கடனுக்கும் தங்கத்தின் மதிப்புக்கும் உள்ள விகிதம் (LTV) 75 சதவீதத்தைத் தாண்டும்போது வங்கிகள் வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் அனுப்புகின்றன. இந்தக் கூடுதல் வித்தியாசத் தொகையைச் சரிசெய்யுமாறு அவை கேட்கும்.

வங்கிகள் அனுப்பும் நோட்டீஸ் கிடைத்தவுடன், வாடிக்கையாளர் குறைந்த மதிப்புக்கு ஈடாக ரொக்கப் பணத்தைச் செலுத்த வேண்டும். பணம் இல்லாத பட்சத்தில், கூடுதலாக வேறு தங்க நகைகளை அடமானமாக வைக்க வேண்டியிருக்கும்.

பழைய கடனை வட்டி மட்டும் கட்டிப் புதுப்பிக்க நினைக்கும்போது, தற்போதைய குறைந்த சந்தை விலைக்கு ஏற்பவே புதிய கடன் தொகை கணக்கிடப்படும். எனவே, பழைய கடன் தொகைக்கும் புதிய மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தைக் கையில் இருந்து கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.

வங்கியின் மார்ஜின் கால் அறிவிப்பிற்குப் பிறகும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்தத் தவறினால் அல்லது நோட்டீஸுக்கு உரிய காலத்திற்குள் பதிலளிக்காவிட்டாலோ அல்லது வட்டி செலுத்தத் தவறினாலோ, கடன் வழங்கிய நிறுவனங்கள் நகைகளை ஏலம் விடும் நடவடிக்கையைத் தொடங்கலாம்.

Gold loan waiver
Gold loan waiver

கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தாமல் தாமதம் ஏற்பட்டு வாராக்கடனாக (NPA) மாறினால், வாடிக்கையாளரின் சிபில் (CIBIL) ஸ்கோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் வேறு கடன்கள் பெறுவது கடினமாகிவிடும்.

நீங்கள் ரூ.1,00,000 மதிப்புள்ள தங்க நகையை அடமானம் வைத்து, 75% LTV அடிப்படையில் ரூ.75,000 கடன் பெற்றுள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். தற்போது தங்கத்தின் விலை 20% சரிந்து, தங்கத்தின் மதிப்பு ரூ.80,000 ஆகக் குறைந்துவிட்டதால், வங்கியின் பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் உடனடியாக ரூ.15,000 (அல்லது அதற்கு இணையான கூடுதல் தங்கம்) செலுத்த வேண்டியிருக்கும்.

கடன் பெற்றவர்கள் இப்போது செய்ய வேண்டியவை :

நீங்கள் ஏற்கனவே அதிக விலைக்கு நகைக் கடன் பெற்றிருந்தால், பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பது பாதுகாப்பானது.

வங்கி அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து வரும் குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் கடிதங்களைத் தொடர்ந்து கவனியுங்கள். மார்ஜின் கால் (Margin Call) நோட்டீஸை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள்.

உங்களிடம் சிறிய அளவில் சேமிப்பு இருந்தால், அதைக் கொண்டு அசல் தொகையின் ஒரு பகுதியை (Part-Payment) உடனே செலுத்துங்கள். இது உங்கள் LTV விகிதத்தைக் குறைத்து, நகை ஏலத்திற்குச் செல்வதைத் தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இந்த வங்கியில் இனி 90% வரை நகைக் கடன் கிடைக்கும்?
gold loan|நகைக் கடன்

அசலுடன் சேர்ந்து வட்டியும் அதிகரிக்கும்போது, மொத்தக் கடன் தொகை தங்கத்தின் தற்போதைய மதிப்பைத் தாண்டிவிடும். எனவே, மாதந்தோறும் வட்டியைச் சரியாகச் செலுத்துவது அவசியம்.

உடனடியாகப் பணம் செலுத்த முடியாத சூழல் இருந்தால், வங்கி மேலாளரை நேரில் சந்தித்துப் பேசுங்கள். கடன் தவணையை மாற்றியமைக்கவோ அல்லது கூடுதல் அவகாசம் பெறவோ வாய்ப்புள்ளதா எனக் கேட்டறியுங்கள்.

இதற்கிடையே தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடனுக்கான உச்சவரம்பு முன்பு கிராமுக்கு ரூ. 7,000 ஆக இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 5-ம்தேதி முதல் அந்த உச்சவரம்பு ரூ. 10,000 அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75% என மாற்றி அறிவித்திருந்தது. இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைக்கடன் வரம்பு கிராமுக்கு ரூ.10,000ல் இருந்து ரூ.9,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தங்க நகைக் கடன் பெற சிறந்த இடம் எது? 
gold loan|நகைக் கடன்

இனி வரும் காலங்களில் தங்கம் விலை மேலும் குறையும் பட்சத்தில் நகைக்கடன் வரம்பும் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூட்டுறவுத் துறை அறிவித்ததுள்ளது.